
இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகத் தமிழ் இளைஞர்கள் பொங்கி எழுந்த நேரம். தாய்மொழியைக் காக்கத் தன்னைத்தானே தீ வைத்துக்கொண்டு உயிர்க்கொடை தந்த இளைஞர்கள், துப்பாக்கிச் சூட்டுக்கு மார்பு காட்டி நின்ற தீரர்கள், சிறைவாசத்திற்கு அஞ்சாத கொள்கை வீரர்கள் என்று தமிழர்களின் தியாகம் இந்தியா முழுவதும் கவனிக்கப்பட்ட நேரம். மொழிப்போரை முன்னின்று நடத்திக்கொண்டிருந்த இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். அதன் நிறுவனரான பேரறிஞர் அண்ணா இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் கவனம் பெற்றார். உலகெங்கும் வாழும் தமிழர்கள் “அண்ணா.. அண்ணா..“ என்று அவரைத் தங்களின் மூத்த சகோதரராகவே பார்த்தனர்.
மொழிப்போர் முடிவுக்கு வந்த நேரத்தில்தான் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அண்ணா பயணம் சென்றார். சிங்கப்பூர் ஜலன் புசார் ஸ்டேடியத்தில் 30ஆயிரம் பேர் திரண்டு அண்ணாவின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். சிங்கப்பூர் தனிநாடாகியிருந்த நேரம் அது. அதன் பிரதமர் லீ குவான் யூவுக்கு தமிழர்கள் மீது எப்போதும் மரியாதை உண்டு. சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்று. அதனால்தான் தமிழகத்திலிருந்து வரும் தலைவரின் பொதுக்கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.
அண்ணா மேடையேறியபோது எழுந்த ஆரவாரம் அடங்க நேரமானது. தங்கள் பக்கம் அண்ணா திரும்புவாரா, ஒரு புன்னகை பூப்பாரா என்று 30ஆயிரம் பேரும் எதிர்பார்த்தனர். அண்ணாவின் கண்கள், திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தன. அவருடைய உதடுகள் புன்னகைத்தன. அவர் எந்தப் பக்கம் திரும்புகிறாரோ அந்தப் பக்கத்தில் அதிக ஆரவாரம். லீ குவான் யூ வியந்து பார்த்ததற்கு அதுதான் காரணம்.
பேரறிஞர் அண்ணா பேச வந்தார். “தாய் வீட்டில் வளர்ந்த பெண், திருமணதிற்குப் பிறகு மாமியார் வீட்டுக்குச் சென்று வாழும்போது, அந்தப் பெண் வீட்டார், தங்கள் மகள் எப்படி மாமியார், மாமனார், கொழுநன், நாத்தனார் போன்றவர்களுடன் நல்லபடியாக குடும்பம் நடத்துகிறார். கணவனின் வளர்ச்சிக்கு எந்தளவு துணைநிற்கிறார். தன்னை எந்தளவு வளர்த்துக்கொண்டிருக்கிறார் என்று பார்க்க வந்ததுபோல, இங்கே வாழும் தமிழர்களைக் காண வந்திருக்கிறேன்” என்றார். அண்ணா சொன்ன உவமையை மேடையிலிருந்த லீ குவான் யூவிடம் மொழிபெயர்த்து தெரிவித்தனர். அவரும் ரசித்தார். அண்ணாவின் பேச்சை மொத்தக் கூட்டமும் ரசித்தது.
இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் நல்லெண்ணத் தூதுவர் என்ற அண்ணா தன்னை முன்மொழிந்தார். மலேஷியாவில் வாழ்ந்த தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளிலும் அண்ணாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. “வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போல மலாய்க்காரர், சீனர், தமிழர் இணைந்து வாழ்ந்து, மூன்றும் சேர்ந்து தாம்பூலம் சிவப்பது போல மூன்று இணத்தவரும் இணைந்து உயர்ந்து வாழ வேண்டும்” என்றார்.
“மலேசிய-சிங்கப்பூர் தமிழர்கள் தங்கள் மொழியையும் மரபையும் பாதுகாக்கின்ற அதே நேரத்தில், அந்தந்த நாட்டின் மக்களாகவே வாழவேண்டும்” என்றார். அண்ணா மலேசியா வந்தால் தமிழர்களிடையே புயல் வீசும் என்று அங்கே எதிர்ப்புத் தெரிவித்த கூட்டம் உண்டு. அண்ணாவின் வருகை தென்றலாக இருந்தது. மலேசியா-சிங்கப்பூர் முழுவதும் தமிழ் மணம் வீசியது.

அதன்பின் கம்போடியா, பிலிப்பைன்ஸ், ஹாங்காங், ஜப்பான் என அண்ணாவின் பயணம் தொடர்ந்தது. ஜப்பானில், திருவண்ணாமலையைச் சேர்ந்த மாரியப்பன், ஜப்பானிய பெண்மணியை மணந்திருந்தார். அவர்கள் அண்ணாவைத் தங்கள் இல்லத்தில் தங்வைத்து, டோக்கியோ நகரத்தை சுற்றிக்காட்டினர். அண்ணாவின் தெற்காசியப் பயணத்தை டெல்லி பத்திரிகைகள் புகழ்ந்து எழுதின.
அண்ணா மலேஷியா சென்று 22 ஆண்டுகள் கழித்துதான் கலைஞர் முதன்முறையாக அந்த நாட்டிற்குச் சென்றார். 1987ஆம் ஆண்டு நவம்பர் 15 முதல் 19 வரை மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் 6ஆம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது. 5ஆம் உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்தியிருந்தது எம்.ஜி.ஆர். அரசு. அதனால் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை அழைக்க சென்னைக்கு வந்தார் மலேஷிய இந்தியன் காங்கிரஸ் தலைவரும் அந்நாட்டு அமைச்சருமான டத்தோ சாமிவேலு. உடல்நலன் குன்றியிருந்த எம்.ஜி.ஆரால் வர முடியவில்லை. அவருடைய அமைச்சர்கள், அதிகாரிகளையும் அனுப்பிட முன்வரவில்லை.
கலைஞரை தமிழினத் தலைவர் என்ற முறையில் சாமிவேலு சந்தித்து, மாநாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பங்கேற்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டபிறகு கலைஞர் சம்மதித்தார். நவம்பர் 14 இரவு சென்னையிலிருந்து மலேஷியா புறப்பட்டு, அதிகாலையில் தரையிறங்கினார் கலைஞர். அவருடன் ஆற்காடு வீராசாமி பயணித்தார். நவம்பர் 15 அன்று மலேஷியாவின் புத்ரா உலக வாணிப மையத்தில் மலேஷிய பிரதமர் மகாதீர் முகமது தொடங்கி வைத்த 6ஆம் உலகத்தமிழ் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலைஞர் பங்கேற்றார்.
மாநாட்டில் தமிழறிஞர்கள், உலகாளவிய மொழி வல்லுநர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மட்டுமே பங்கேற்றதால், கலைஞரின் தமிழைக் கேட்க ஆர்வமாக இருந்த மலேசிய தமிழர்களுக்காக அதே இடத்தில் அன்று மாலையில் எல்லாரும் பங்கேற்கும் விதமான பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கடல் கடந்த தமிழர்கள் பட்டபாடுகளை விளக்கிய கலைஞர், தமிழ்நாட்டில் வெள்ளையர்களுக்கு எதிராக அஞ்சாமல் போராடி தூக்குக் கயிற்றை எதிர்கொண்ட வீரமிக்க மருது சகோதரர்களில் சின்ன மருதுவின் மகனான சிறுவன் துரைசாமி, 70க்கும் மேற்பட்டவர்களுடன் மலேயாவின் பினாங்கு பகுதிக்கு நாடு கடத்தப்பட்ட துயர் மிகுந்த பயணத்தை உணர்ச்சிப் பெருக்குடன் கலைஞர் சொன்னபோது திரண்டிருந்த தமிழர்கள் கலங்கினர். பினாங்கில் சிறைவாசம் அனுபவித்த துரைசாமி ஒரு கட்டத்தில், தன்னை நாடுகடத்திய வெல்ஷ் என்ற ஆங்கிலேயத் தளபதியை பினாங்கில் சந்தித்த விவரத்தை ஒரு புத்தகத்தை ஆதாரம் காட்டி கலைஞர் சொன்னபோது, தமிழறிஞர்களுக்கே அது வியப்பான தகவலாக இருந்தது. அப்போதைய காலத்தைவிட இப்போது தமிழர்கள் கடல் கடந்து வந்து நல்ல நிலையில் உயர்ந்து வருவதையும் குறிப்பிட்டார்.
“குடிசைதான் ஒரு புறத்தில்…” என்று கலைஞர் எழுதிய புகழ்மிக்க புறநானூற்றுத் தாய் கவிதையை மலேசியத் தமிழர்களுக்கு ஏற்றவகையில் அவரே சற்று திருத்தம் செய்து, மேடையில் அதைச் சொல்லச் சொல்ல கூடியிருந்த தமிழர்கள் உணர்ச்சிப் பெருக்கால் கரவொலி எழுப்பினர். கவிதையை சொல்லி முடித்ததும் கலைஞர், “இன்றைக்கு அந்த புறநானூற்றுத் தமிழன் எங்கே இருக்கிறான் தெரியுமா?’‘ என்று மலேஷியத் தமிழர்களை நோக்கி கேட்டுவிட்டு, சற்று இடைவெளிவிட்டார். கூட்டம் அமைதியாக கவனித்தது
கலைஞர் தொடர்ந்தார். “அந்தப் புறநானூற்றுத் தமிழன் இன்றைக்கு இலங்கையிலே இருக்கிறான். ஈழத்திற்காகப் போராடுகிறான்” என்று அவர் சொன்னபோது, அரங்கில் ஆரவாரம் அடங்க சில நிமிடங்களாயின.
எவன் பழித்தாலும், எத்தனை அபாண்ட பழிகள் சுமத்தினாலும் தமிழ் உணர்வும் தமிழர்கள் நலன் மீதான கலைஞரின் அக்கறையும் இதயப்பூர்வமானது. அதனால் அவர் எப்போதும் உலகத் தமிழினத் தலைவர்தான்.
(சுற்றும்)
-கோவி. லெனின்