
கரூர் சம்பவத்தில் விஜயை பாஜக வளைக்கிறது என்றும், குருமூர்த்தியுடன் விஜய் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார் என்றும் வெளியான செய்திகளை குருமூர்த்தி மறுத்துள்ளார்.
கரூரில் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்திருப்பதால் தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை விதித்த 20 நிபந்தனைகளை மீறியதாலும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட 4 மணி நேரம் விஜய் காலதாமதமாக வந்ததாலும்தான் வேலுச்சாமிபுரத்தில் துயர சம்பவம் நடந்தது என்று குற்றம்சாட்டி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து முழு அறிக்கை கேட்டு உத்தரவிட்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரண நிதிகள் வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பாதிக்கப்பட்டோரை பார்த்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
சம்பவம் பற்றி ஆய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி பாஜக சார்பில் 8 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை வைத்து விஜயை பாஜக வளைக்கப்பார்க்கிறது என்றும், அதனால்தான் அவசரமாக விஜயை ராகுல்காந்தி தொடர்புகொண்டு பேசினார் என்றும் செய்திகள் பரவுகின்றன.

நிலைமை தவெகவுக்கு பாதகமாக அமையக்கூடாது என்பதால் விஜய் சொல்லி பாஜக பிரமுகர் குருமூர்த்தியை தவெகவினர் சந்தித்துள்ளனர் என்றும், விஜய் நேரடியாக குருமூர்த்தியை சந்தித்தார். இந்த சந்திப்பில் இருவரும் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுமாறு விஜய் கேட்டுக்கொண்டார் என்று செய்திகள் வந்தன.
குருமூர்த்தி இதை மறுத்துள்ளார். விஜயை அவர் சந்திக்கவில்லை என்றும், விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக வெளியான தகவல் பொய்யானது என்று தெரிவித்திருக்கிறார்.