
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த விஜயின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி எடுத்திருக்கிறது.
இந்த சம்பவம் நடந்த உடனேயே செந்தில்பாலாஜி, அதிகாரிகள் சம்பவம் இடத்திற்கு சென்றதும், அடுத்து இரவோடு இரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டோரை சந்தித்ததும் ஏன்? துபாய் சென்ற உதயநிதி ஸ்டாலின் உடனே திரும்பியது ஏன்? என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக உடனே நடவடிக்கை எடுத்தது தவறா? என்று பலரும் இதற்கு பதிலளித்து வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க, சம்பவம் நடந்த உடனே பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர், அமித்ஷா உள்ளிட்டோர் ரியாக்ட் செய்தது குறித்தும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதோடு சேர்த்து பாஜகவின் முகமாக விமர்சிக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் இந்த சம்பவத்திற்கு, ’’கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்’’ என்று இரங்கல் தெரிவித்ததும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இதுவரை எந்த பிரச்சனைக்கும் ரியாக்ட் செய்யாத ரஜினி, இந்த விசயத்தில் அதுவும் உடனே ரியாக்ட் செய்தது ஏன்? அரசியல் பின்னணியா? என்று இயக்குநர் பேரரசுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ‘’நான் சாதாரண இயக்குநர். பட விழாவில் இருந்த எனக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் வந்தது. அப்படி இருக்கும் போது ரஜினி சாருக்கு உடன் தகவல் வராதா என்ன?
ரஜினி சாரோ ராசி அப்படி. அவர் ரியாக்ட் செய்தாலும் எதுக்கு இப்படி ரியாக்ட் செய்தார் என்று கேட்பார்கள். ரியாக்ட் செய்யவில்லை என்றாலும் எதுக்கு ரியாக்ட் செய்யவில்லை என்று கேட்பார்கள். ஒரு துயர செய்தியைக் கேள்விப்பட்டதும் அவர் ரியாக்ட் செய்திருக்கிறார். அவ்வளவுதான். இதில் வேறு எந்தப் பிரச்சனையையும் சேர்க்காதீர்கள்’’ என்றார்.