வேலுச்சாமிபுரம் சம்பவத்திற்கு கொஞ்சம் கூட பொறுப்பேற்காமல், கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கும் அம்மக்களுக்கு கைகொடுத்து ஆறுதலாக நிற்க வேண்டிய, துன்பத்தில் பங்கெடுக்க வேண்டிய தவெகவினர் தலைதெறிக்க ஓடிச்சென்றது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதியும் இந்த விசயத்தில் தவெக மற்றும் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக சாடி இருக்கின்றனர்.

’’தவெகவினர் அடாவடியில் ஈடுபட்டுள்ள நிலையில் கட்சியினர் அடாவடி செய்தது பற்றி எதுவும் தெரியாது என எப்படிச் சொல்லலாம்?, கட்சியினரை கட்டுப்படுத்தத் தெரியாதா? பொறுப்பு வேண்டாமா?
கட்சி கூட்டங்களில் அடிப்படை வசதிகள் கட்டாயம். தவெக கூட்டத்தில் தண்ணீர் வசதி கூட செய்யாதது ஏன்? கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை எண்ணிப்பாருங்கள்.
கரூர் சம்பவம் நடந்து ஒரு வாரம்தாம் ஆகிறது. விசாரணை தொடக்க நிலையில் இருக்கும் போது சிபிஐ விசாரணை கோருவது ஏன்? நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர்கள்.
கரூர் விபத்து மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. தவெக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு கருணை காட்ட முடியாது. நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது.

கலவரம் நடைபெறுவதை போல தவெக கூட்டத்தை நடத்தி உள்ளனர். என்ன மாதிரியான கட்சி இது?
ஒன்றிரண்டு தவிர மற்ற நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன. விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்கலாம். கட்சி தொண்டர்களை விட்டுவிட்டு தலைவரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் மறைந்துவிட்டனர்.
சம்பவம் நடைபெற்றதும் மற்ற கட்சியினர் உதவிக்கு விரைந்த போது தவெக நிர்வாகிகள் காணாமல் போனது ஏன்? விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை’’ என்று நீதிபதிகள் கடுமையாக சாடி இருக்கிறார்கள்.
