அவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. இன்றைக்கு தவெகவுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது. வேலுச்சாமிபுரம் சம்பவத்தின் போதும், அதைத்தொடர்ந்து தவெக சந்திக்கும் பிரச்சனைகளின் போதும் பலரும் சொல்வதுதான் இது. அவர் யார் என்றால் எஸ்.ஏ.சந்திரசேகர்.
ஹீரோ ஆக வேண்டும் என்கிற விஜயின் கனவை நிறைவேற்றியவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். அதே போல் விஜய் முதல்வர் ஆக வேண்டும் என்கிற சந்திரசேகர் கனவை நிறைவேற்ற பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் விஜய். ஆனால், கூட இருந்து எல்லாவற்றையும் கவனிக்க வேண்டிய சந்திரசேகர் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்.

திட்டமிட்டபடி உச்ச நடிகர் ஆனதும், ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்ற முயன்றார் சந்திரசேகர். இதில் அவசரம் வேண்டாம் என்று தள்ளிப்போட்டார் விஜய். இதில் ஏற்பட்ட பிரச்சனையும் ஒரு காரணமாக அமைந்தது சந்திரசேகர் – விஜய் பிரிவுக்கு. அதன் பின்னரும் கட்சி தொடங்கும் நடவடிக்கையை சந்திரசேகர் தீவிரப்படுத்த, நீதிமன்றம் சென்று தடை போட்டார் விஜய்.
பிடிவாதக்காரர் விஜய் தாய், தந்தையை விட்டுப் பிரிந்த பின்னர் அவர்களுடன் பேசாமலேயே இருந்து வந்தார். என்னதான் ஒதுக்கி வைத்தாலும் மகன் என்பதால் தவெக தொடக்க மாநாட்டின் போது முன்வரிசையில் சென்று அமர்ந்தனர் சந்திரசேகரும் ஷோபாவும். கட்சி நிகழ்வுகளில் தாங்களாகவே சென்று பங்கேற்றனர். பெற்றோரை மதிக்கவில்லை என்ற அவப்பெயர் விஜய்க்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே சந்திரசேகரும் ஷோபாவும் இந்த முடிவை எடுத்தனர் என்றது விஜய் வட்டாரம்.

சந்திரசேகர் ரொம்பவே கண்டிப்பானவர். டென்ஷன் பேர்வழி. புஸ்ஸி ஆனந்த் முதல் பலரும் இவரைக்கண்டாலே ஆடிப்போய் விடுவார்கள். சந்திரசேகரை விஜய் ஒதுக்கி வைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.
தவெக தலைவர் விஜய் சரியாக வழி நடத்தி இருந்தால், நிர்வாகிகள் சரியான முறையில் வேலை செய்திருந்தால் வேலுச்சாமிபுரத்தில் அப்படி ஒரு துயர சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை. துயர சம்பவம் நடந்து விட்ட போதிலும் கூட விஜயை வழிநடத்த ஒருவர் இருந்திருந்தால் சுயமாக முடிவெடுத்து தைரியமாக களத்தில் நிற்காவிட்டாலும், அந்த நேரத்தில் அவருக்கு தக்க ஆலோசனைகள் சொல்லி களத்தில் நிற்க வைத்திருப்பார்கள். விஜய் ஒரு பக்கம் ஓட தாங்கள் ஒரு பக்கம் இப்படி தலைதெறிக்க ஓடாமல், எல்லோரும் களத்தில் நின்று பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்து அவப்பெயரில் இருந்து தப்பித்திருப்பார்கள்.

சம்பவம் நடந்த பின்னரும் கூட விஜய்க்கு சரியான ஆலோசகர் இல்லாததால்தான் மூன்று நாள் கழித்து இரங்கல் வீடியோ போடுகிறார். அதுவும் போகிற போக்கில் இரங்கலை தெரிவித்துவிட்டு, மிச்ச நேரத்தில் அரசியல் பேசுகிறார் விஜய். இது ஏற்கனவே இருந்த விமர்சனங்களை அதிகப்படுத்தி விட்டது.
இத்தனை நடந்த பின்னரும் இன்னமும் விஜய் வெளியே வரவில்லை. அவரது கட்சி நிர்வாகிகளும் நீதிமன்றங்களில் மன்றாடிக் கொண்டிருக்கிறார்களே தவிர, கரூர் பக்கம் போகவே இல்லை. பாதிக்கப்பட்டவர்களை நினைக்கவே இல்லை. இது கடும் விமர்சனங்களை எழுப்பி வருகிறது. நீதிமன்றமும் இதை கடுமையாக சாடி இருக்கிறது.
மேலும், தவெகவுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கலில் சில அரசியல் நெருக்கடிகள் ஏற்படுவதாகவும், குறிப்பாக பாஜக விஜயை வளைக்கப் பார்க்கிறது என்றும் செய்திகள் வருகின்றன.

இந்த நிலையில் விஜய்யிடம் பேசி இருக்கிறார் சந்திரசேகர். ’’நான் இருக்கிறேன், நீ கவலைப்படாதே. நான் வந்து எல்லாவற்றையும் கவனிச்சுக்கிறேன்’’ என்று சந்திரசேகர் சொல்லி இருக்கிறார். அதற்கு விஜய், நீங்க வர்றதுல ஒரு பிரச்சனையும் இல்ல. ஆனா, நிர்வாகிங்க உங்களப்பாத்து பயப்படுறாங்க… என்று தயங்கி இருக்கிறார் விஜய். மேலும், நீங்க வந்துட்டா குடும்ப அரசியலாக மாறிடும்னு தயங்கி இருக்கிறார் விஜய். அதற்கு சந்திரசேகர், சரி, நான் அட்வைசராக இருந்துட்டுப்போறேன். இப்படி ஒரு நிலைமைக்கு வர விடமாட்டேன்னு பேசி இருக்கிறார் சந்திரசேகர். அதற்கு விஜய், சரி என்று சொல்லி இருக்கிறார்.
இதே மன நிலையில் விஜய் உறுதியாக இருந்தால் தவெகவை வழிநடத்த வந்துவிடுவார் சந்திரசேகர். இவர் வந்துவிட்டால் நமது சுதந்திரம் பறிப்போய்விடுமே என்று புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் பயந்து போய் விஜய் மனதை மாற்றுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
