கள அரசியல் நிலவரங்களினாலும், கருத்து கணிப்பு முடிவுகளினாலும் திமுக கூட்டணியில் இணைவதுதான் புத்திசாலித்தனம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் முடிவெடுத்திருப்பதாக தகவல்.
அதிமுகவில் தினகரனையும், பன்னீர்செல்வத்தையும் இணைக்க முடியாது என்று இப்போது வரையிலும் உறுதியாக இருக்கிறார் பழனிசாமி. டெல்லி பாஜகவும் கூட எவ்வளவோ அழுத்திப்பார்த்தும் கூட, அதை வேறு விதத்தில் சமாளித்துவிட்டார் பழனிசாமி. இதனால் இனி அதிமுகவில் தங்களுக்கு இடமில்லை என்பதை உணர்ந்துவிட்டார்கள் பன்னீர்செல்வமும், தினகரனும். அதே நேரம், தேசிய ஜனநாயக கூட்டணியில் எப்படியாவது அங்கம் வகித்து விடலாம் என்று கணக்கு போட்டிருந்தார்கள். இப்போது அதிலும் மண் விழுந்துவிட்டது.

கரூர் பிரச்சனையை வைத்து தவெகவை வளைக்கத் திட்டமிட்டு வருகிறது பாஜக தலைமை. தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் வந்துவிட்டால் தங்களுக்கு அங்கே இடமில்லை என்பதை உணர்ந்துள்ளனர் பன்னீர்செல்வமும், தினகரனும்.
தவெகவுடன் கூட்டணி அமைத்துவிடலாம் என்கிற முயற்சியில்தான் பன்னீர்செல்வமும், தினகரனும் அக்கட்சிக்கு ஆதரவாகவே பேசிப்பார்த்தனர். கரூர் விவகாரத்திலும் கூட ஆரம்பத்தில் விஜய்க்கு ஆதரவாகவே பேசினார் தினகரன். ஆனால், விஜய் தரப்பில் இருந்து எந்த சிக்னலும் இல்லாததால் தவெக ஆதரவை விலக்கிக்கொண்டிருக்கிறார் தினகரன்.

ஒரு கரூர் சம்பவத்திற்கே சமாளிக்க முடியாமல் தவெக படகு மூழ்கிவிட்டது கண்டு இந்தப்படகில் நாமும் ஏற நினைத்தோமே என்று உஷார் ஆகி இருக்கிறார் தினகரன்.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் சங்கமிப்பதுதான் புத்திசாலித்தனம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் தினகரன். கரூர் சம்பவத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, முதலமைச்சரின் நடவடிக்கைகளை பாராட்டி, தவெகவை விளாசி எடுத்திருக்கும் செயல் இதைத்தான் காட்டுகிறது.
திமுகவுக்கு போவது என்று தினகரன் முடிவெடுத்திருப்பதால்தான் பழனிசாமியையும் விளாசி எடுத்திருக்கிறார் தினகரன்.

பழனிசாமி கதவை சாத்திவிட்டதால் விஜய் கதவு திறப்பார் என்று எவ்வளவோ பேசிப்பார்த்தார் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ். கொஞ்சம் கூட விஜய் அவரை கண்டுகொள்ளவே இல்லை என்பதால் வேறு வழியின்றி அவர் திமுகவுக்கு தாவிவிட்டார். இவர் மூலமாக பன்னீர்செல்வமும் திமுக பக்கம் சாய்கிறார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
திமுகதான் ஒரே சாய்ஸ் என்று தினகரன் முடிவெடுக்க கருத்துக் கணிப்பு முடிவுகளும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி இது குறித்து, ’’தினகரன் பேச்சுக்கள் திமுக பக்கம் செல்வது போல் அமைந்திருக்கிறது. ஏற்கனவே ஓ.பி.எஸ் இரண்டு முறை ஸ்டாலினை சந்தித்து இருந்திருக்கிறார். அதிமுகவில் ஒற்றுமை சாத்தியமில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.

காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் வெளியான ஊடக ஆய்வறிக்கையின்படி வெற்றி வாய்ப்பு வாய்ப்பு திமுகவுக்கு சாதகமாக இருக்கிறது’’என்கிறார்.
மேலும், ‘’எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஒரு தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்றார்கள் என்றால் அங்கு அரசியல் களம் அதிமுகவுக்கு சாதகமாக மாறிவிடும். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதுவரை 150 தொகுதிகளுக்கு மேல் பிரச்சாரத்திற்கு சென்று விட்டார். இருந்தாலும் அவர் பிரச்சாரத்திற்கு சென்ற தொகுதிகளில் கூட திமுக தான் வெல்லும் என்கிற அளவிற்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகிறது’’ என்கிறார்.
தினகரன், பன்னீர்செல்வத்தை தொடர்ந்து பழனிசாமியால் புறந்தள்ளப்பட்டிருக்கும் பலரும் திமுக பக்கம் சாய வாய்ப்பிருக்கிறது என்கிற பேச்சு வலைத்தளங்களில் உலவுகிறது.
