வீடியோ ஹால் மூலமாக கரூரில் பாதிக்கப்பட்டவர்களிடம் தவெக தலைவர் விஜய் பேசியதாக தகவல் பரவி வரும் நிலையில், வரும் 10ம் தேதி அன்று சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக கரூருக்கு செல்கிறார் விஜய் என்கிறது பனையூர் வட்டாரம்.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி அன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். குறித்த நேரத்திற்கு பிரச்சாரத்திற்கு செல்லாமல் 7 மணி நேரம் தாமதமாக சென்றார் விஜய். பகல் 12 மணி முதல் வெயிலில் தண்ணீர், உணவு இல்லாமல் சாலையில் காத்திருந்த மக்கள் நீர்ச்சத்து குறைபாட்டினால் அரை மயக்கத்தில் இருந்திருக்கிறார்கள். இதில் விஜயின் பிரம்மாண்ட பிரச்சார பேருந்து கூட்டத்திற்குள் நுழைந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நடந்தவுடன் விஜய் அங்கிருந்து அம்மக்களுக்கு துணை நிற்காமல் சென்னைக்கு வந்துவிட்டார். அவரது கட்சி நிர்வாகிகளும் என்ன செய்வது என்று தெரியாமல், பிரச்சனையை சமாளித்து நிற்காமல் அச்சத்தில் தப்பியோடிவிட்டனர்.

மிகவும் உற்சாகமாக சென்று கொண்டிருந்த பிரச்சாரப் பயணம் இப்படி அதிர்ச்சி தந்ததால் இதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத விஜய் பயந்து விட்டார். அந்த அச்சத்தில் இருந்து அவர் வெளியே வரவில்லை.
சென்னை வந்ததும் எக்ஸ் தளத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தார் விஜய். அதன் பின்னர் உயிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். ஆனாலும் விஜய்யும் அவரது கட்சி நிர்வாகிகளும் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்கவில்லை. நேரில் ஆறுதல் சொல்லவில்லை என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. நீதிமன்றமும் இதை கடுமையாக கண்டித்தது.
சம்பவம் நடந்து மூன்று நாள் கழித்து வீடியோ வெளியிட்ட விஜய், போகிற போக்கில் கரூர் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்திருந்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியதை அடுத்து அரசியல் கட்சித் தலைவர், விஜய்க்கு மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லை என்று கடும் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னமும் விஜய் கரூர் சென்று அம்மக்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், அறிவித்த நிவாரணமும் இன்னமும் பாதிக்கப்பட்டோரைச் சென்றடைய வில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தவெக நிர்வாகிக சிலர் பாதிக்கப்பட்டோரைச் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்
இதையடுத்து விஜய் கரூர் செல்வதா? அல்லது, பாதிக்கப்பட்டோரை பனையூர் வீட்டிற்கு அழைத்து வந்து ரூ.20 லட்சம் நிவாரணம் கொடுத்து ஆறுதல் சொல்லுவதா? என்று விஜய் ஆலோசனை நடத்தி வந்தார்.
இதில், நிர்வாகிகள் நிவாரணத்தை நேரில் கொண்டு சென்று கொடுத்ததும், விஜய்க்கு வீடியோ கால் செய்து கொடுக்க, அப்போது அவர்களிடம் விஜய் பேசி ஆறுதல் சொல்லுவது என்று முடிவானது. இதன்படி நேற்று மாலை முதல் விஜய் வீடியோ காலில் பேச ஆரம்பித்துள்ளார் என்று தகவல்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இளைஞர் தனுஷ்குமாரின் தாய் உமா மகேஸ்வரி, தங்கை ஹர்சினியிடம் நேற்று மாலை 4.30 மணிக்கு வீடியோ காலில் பேசி உள்ளார் விஜய். சுமார் 15 நிமிடங்கள் வீடியோ காலில் பேசி இருக்கிறார் விஜய்.
சில வார்த்தைகள் மட்டுமே பேசி இருக்கிறார் விஜய். அழுதபடி மவுனமாகவே இருந்திருக்கிறார் விஜய். ’’நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. இது எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு’’ என்று சொல்லி தேற்றி இருக்கிறார். ‘’எப்போதும் உங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பேன்’’ என்றும், ’’விரைவில் நேரில் உங்களை சந்திப்பேன்’’ என்றும் அளித்திருக்கிறார்.
தனுஷின் தங்கையிடம் பேசியபோது, அண்ணன் ஸ்தானத்தில் இருந்து எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி அளித்திருக்கிறார் விஜய்.
அதே நேரம், விஜய் நிர்வாகிகள் சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது அவரை வந்து அதாவது விஜய்யை வந்து சந்திக்கச் சொல்லுங்க என்று சிலர் கடுமை காட்டியதாகவும், மேலும், புகைப்படம், வீடியோ எடுக்க வேண்டாம் வேண்டாம் என்று பாதிக்கப்பட்டோர் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
இதையடுத்து விஜய் வரும் 10ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் சொல்ல கரூர் செல்கிறார் என்கிறது பனையூர் வட்டாரம்.
