தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக வந்துவிட்ட போதிலும் கூட திமுக கூட்டணியைச் சமாளிக்க மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என்கிற முயற்சியில் தவெகவை இழுக்க முயற்சித்து வருகிறது பாஜக.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘’தமிழ்நாட்டிற்குள் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்று துடிக்கிறது பாஜக. இதற்காக பழைய அடிமை போதாது என்று புது அடிமையை தேடுகிறது பாஜக. புது அடிமை யார் என்பது மக்களுக்குத் தெரியும். யார் வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் கால் வைக்க கூட அல்ல, தொட்டுக் கூட பார்க்க முடியாது. கருப்பு சிவப்பு கரை கொண்டு திமுககாரன் இருக்கும் வரையிலும் அது நடக்காது’’ என்று அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார்.

தவெகவை பாஜக வளைக்க முயற்சித்து வரும் நிலையில் காங்கிரசுடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கரூர் சம்பவத்திற்கு பின்னர் விஜயுடன் ராகுல்காந்தி பேசியதும், அதைத் தொடர்ந்து காங்கிரசிடம் விஜய் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் பரவுகிறது.
இதனால் திமுக கூட்டணியை விட்டு தவெகவுடன் கூட்டணி அமைக்கிறதா காங்கிரஸ் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கேற்றார் போல் காங்கிரஸ் கூட்டங்களிலும் தவெக கொடிகள் பறக்கின்றன. காங்கிரஸ் கூட்டத்தில் தவெக கொடிகள் பறக்கின்றன என்று அக்கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகையே உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இதனால் திமுக கூட்டணி குறித்து பலரும் சந்தேகம் எழுப்பி வரும் வேளையில்தான், ‘’ ‘கை’ நம்மை விட்டுப்போகாது. என் கை என்னை விட்டு போகாது என்று சொன்னேன்’’ என்று திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் போகாது என்பதை சூசகமாக சொல்லி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
