
கரூரில் நடந்தது சதி திட்டம் என்று ஊடகங்களில் ஆவேசமாக சொல்லும் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, உச்சநீதிமன்றத்தில் தவெக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 156 பக்கங்கள் கொண்ட பிரமாணப்பத்திரத்தில் இதை குறிப்பிடவில்லை. இதே போன்று, ஊடகங்களின் முன்பாக நின்று அவர் குற்றம்சாட்டும் பலவற்றையும் உச்சநீதிமன்ற மனுவில் குறிப்பிடவில்லை. இதனால் வதந்திகளை பரப்பி திமுக அரசு மீதான வன்மத்தை கக்குகிறார் ஆதவ் அர்ஜூனா என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
இது குறித்து ஊடகவியலாளர் அரவிந்தாக்ஷன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். ‘’கரூரில் 27-09-25 அன்று இரவு 7.31 மணிக்கு உரையை முடித்ததும் போலீஸ் பாதுகாப்புடன் வெளியேறினார். அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த துயரங்கள் குறித்து எதுவுமே தெரியாது என்று கூறியுள்ளார்.

போலீஸ் நடத்திய தடியடியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க,எந்த இடத்திலும் காவல்துறையிடம் அனுமதி கேட்டதாகவோ, போலீஸார் வரவேண்டாம் என்று அனுமதி மறுத்ததாகவோ மனுவில் குறிப்பிடவில்லை.
அதேநேரம், அசம்பாவிதம் குறித்து தெரியாதென மனுவில் கூறியுள்ள தகவல் அப்பட்டமான பொய் . எப்படியென்றால், விஜய் பேசத்தொடங்கிய சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்ததல்லவா? அது தவெக ஏற்பாடு செய்ததே என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
கூட்டத்தில் பலர் மயக்கமடைந்தது மருத்துவக்குழு ஒருங்கிணைப்பாளருக்கு நன்றாக தெரியும் என்று கூறியுள்ளனர். விஜய் அவர்களே ஆம்புலன்சிற்கு வழிவிட கூறியதையும் குறிப்பிட்டுள்ளனர். அப்படியென்றால் மக்கள் மயங்கி விழுவது பற்றி தெரியும். விஜய்க்கும் தெரியும். ஆனாலும், அசம்பாவிதம் குறித்து விஜய்க்கு எதுவுமே தெரியாதென நீதிமன்றத்தில் பச்சையாக பொய் சொல்லியுள்ளனர்.

உயிரிழப்புக்கள் குறித்து விஜய்க்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டு மிக சாமர்த்தியமாக எத்தனை மணிக்கு என்பதை மறைத்துவிட்டனர்.
மனுவில் குறிப்பிட்டுள்ள விஷயங்களிலேயே அல்டிமேட் இது தான் . போலீஸார் நடத்திய தடியடியால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக உயிருக்கே ஆபத்து இருந்த போதிலும் மருத்துவ அணியின் தலைவர் பிரபு தன்னுடைய அடையாளத்தையெல்லாம் மறைத்துக்கொண்டு அங்கேயே உள்ளூர் மருத்துவமனையில் தங்கி மருத்துவர் என்றே குறிப்பிடாமல் உதவி செய்தாராம்.
எந்த மருந்துவமனை என்றெல்லாம் சொல்லவில்லை. 156 பக்க பிரமாணப்பத்திரத்தில் எந்த இடத்திலும் சதித்திட்டத்தால் தான் அசம்பாவிதம் ஏற்பட்டது என்றோ, குறிப்பிட்ட ஒரு நபரே அனைத்துக்கும் காரணம் என்றோ தமிழக வெற்றிக்கழகம் பதிவு செய்யவில்லை.

சதிக்கோட்பாடு என்ற வார்த்தையை தப்பிதவறி கூட கூறவில்லை. தவெக சார்பில் மனுவை தாக்கல் செய்தது ஆதவ் அர்ஜூனா தான். உச்சநீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவை பெற்ற பின் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி யளித்தாரல்லவா? அதில், திமுக மீதான தன்னுடைய மொத்த வன்மத்தை கக்கி, வதந்திகளையே பரப்ப முயன்றுள்ளார்.
41 பேர் உயிரிழந்தது குறித்து எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வெறும் பொய்களை மட்டுமே பேசியுள்ளார். நீதிமன்றத்தில் எதையுமே சொல்ல மாட்டோம் ஆனால், வதந்திகளை மட்டுமே இஷ்டத்துக்கு பரப்புவோம் என்ற மனநிலை உண்மையில் மிகவும் ஆபத்தானது.’’