தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லாது என்றும், தன்னை அதிமுகவில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை என்று இப்போதும் உரிமை முழக்கம் எழுப்பி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இதே நிலைப்பாட்டினை செங்கோட்டையனும் எடுப்பார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் செங்கோட்டையன். கட்சியின் சீனியர்கள் 5 பேருடன் பழனிசாமி வீட்டிற்கே சென்று வலியுறுத்திப்பார்த்தார் செங்கோட்டையன். அப்போதும் இதற்கு சம்மதிக்கவே இல்லை பழனிசாமி. பொறுத்துப் பொறுத்துப்பார்த்துவிட்டு, பொதுவெளியில் பழனிசாமிக்கு கெடு விதித்தார் செங்கோட்டையன். இது பழனிசாமிக்கு நெருக்கடியை கொடுத்தது. அதனால் செங்கோட்டையனின் கட்சிப்பொறுப்புகளை பறித்து அவரை டம்மியாக்கி வைத்திருந்தார் பழனிசாமி.

இதையடுத்து அதிமுகவில் இருந்து பழனிசாமியால் நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் நேற்று பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியில் இணைந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பை வலியுறுத்தினார் செங்கோட்டையன்.
முன்னதாக பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பயணித்து பரபரப்பை ஏற்படுத்தினார் செங்கோட்டையன். கட்சியில் இருந்துகொண்டே கட்சித்தலைமைக்கு எதிராக இப்படி காய் நகர்த்துகிறாரே செங்கோட்டையன், சீனியர் என்பதால் இத்தனை துணிச்சலா? என்ற கேள்வி எழுந்தபோது, இதன் பின்னணியில் பாஜக இருக்கிறது என்ற தகவல் பரவியது. அதற்கேற்றார்போல் வெளிப்படையாகவே பாஜக தலைமையை அடிக்கடி சந்தித்து வருகிறார் செங்கோட்டையன்.

கட்சித்தலைமைக்கு எதிராக நடந்துகொண்ட செங்கோட்டையனை உடனே கட்சியை விட்டு நீக்க முடியாதபடி நெருக்கடியில் இருந்தார் பழனிசாமி. வழக்கமாக கட்சியில் இருந்து நீக்கும் முடிவை உடனடியாக எடுக்கும் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் போனதற்கு அவர் தன்னை விட கட்சியில் சீனியர் என்பதால் மட்டும் இல்லை. செங்கோட்டையன் பின்னணியில் பாஜக இருக்கிறது என்பது புரிந்ததால்தான் பழனிசாமி கையை பிசைந்து நிற்கிறார் என்கிற பேச்சு எழுந்தது. அழுத்தத்தை உணர்ந்து ஒருங்கிணைப்புக்கு பழனிசாமி சம்மதிப்பார் என்ற எதிர்பார்ப்பும் கட்சியினர் மத்தியில் இருந்தது.
ஆனால் இன்றைக்கு செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி உத்தரவிட்டுவிட்டார் பழனிசாமி.
தன்னை நீக்க பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை என்று பன்னீர்செல்வம் போலவே செங்கோட்டையனும் உரிமை முழக்கம் எழுப்ப வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் அதிமுக கொறடாவின் விதிகளுக்கு எதிராக நடந்துகொண்டால்தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது வரும். தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளதால் அப்படி ஒரு நெருக்கடியை அதிமுகவும் கொடுக்காது என்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரம்.
ஓ. பன்னீர்செல்வம் போலவே செங்கோட்டையனும் நீதிமன்றம் செல்வதற்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது. இந்த சம்பிரதாயங்கள் எல்லாம் முடிவதற்குள் தேர்தலும் வந்துவிடும். எதிர்க்கட்சித் துணைத்தலைவர் நாற்காலிக்குஏ பல காலம் உதயகுமாருக்கு தண்ணி காட்டி வந்தார் பன்னீர்செல்வம். அப்படி இருக்கும்போது செங்கோட்டையனின் எம்.எல்.ஏ. பதவி என்பது அப்படியேத்தான் இருக்கும் என்கிறார்கள் அதிமுக சீனியர்கள் சிலர்.

ஒருவேளை அனுதாபம் தேடும் முயற்சியாக தானாகவே முன்வந்து எம்.எல்.ஏ. பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்யவும் வாய்ப்பிருக்கிறது என்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரம்.
இதே நிலைமையில் இருந்து, வரும் சட்டமன்ற தேர்தலை சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து எதிர்கொள்ளப்போகிறாரா? இல்லை, அதிமுகவில் பாஜகவின் திருவிளையாடல்களின் முடிவு என்னவாக மாறும் என்பதெல்லாம் டிசம்பர் இறுதிக்குள் தெரிந்துவிடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இந்த நீக்கம் குறித்து உடனே எதுவும் சொல்லாமல், நாளை விரிவாகப்பேசுகிறேன் என்று செங்கோட்டையன் சஸ்பென்ஸ் வைப்பது கூட, அமித்ஷாவின் அடுத்த சிக்னலுக்கு காத்திருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
