கூட்டணியில் இருந்து கொண்டே என்.ஆர்.காங்கிரசுக்கு குடைச்சல் கொடுத்து வரும் பிஜேபி, என்.ஆர்.காங்கிரஸ் தயவில்லாமலேயே ஆட்சியைப் பிடிக்கும் முடிவில் புதுக்கட்சியை புதுச்சேரியில் களமிறக்குகிறது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிகப்பெரிய அளவில் அரசியல் கட்சிகளுக்கு ரூ.1386 கோடி அளவுக்கு நன்கொடை அளித்து தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டவர் லாட்டரி மார்டின்.
தமிழ்நாட்டிலும் லாட்டரியில் கொடி கட்டிப்பறந்தவர் லாட்டரி மார்டின். 2003ம் ஆண்டில் லாட்டரிக்கு தமிழ்நாட்டில் தடை போட்ட பிறகு அண்டை மாநிலங்களில் லாட்டரில் கொடிகட்டிப் பறந்து வருகிறார்.
தேர்தலுக்கு தேர்தலுக்கு அரசியல் கட்சிகளுக்கு பெரிய அளவில் நன்கொடை அளித்து வரும் மார்ட்டின் குடும்பத்தினர் ஆட்சியாளர்களாக மாற ஆயத்தமாகி வருகின்றனர்.
மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் புதுச்சேரி மாநில அரசியல் களத்தை கையில் எடுத்திருக்கிறார். மார்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா தமிழக அரசியல் களமிறங்கியிருக்கிறார்.
திமுக, விசிகவை அடுத்து தவெகவில் இணைந்து அங்கே பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஆதவ் அர்ஜுனா. ஜோஸ் சார்லஸோ, புதுச்சேரியில் புதுக்கட்சியையே தொடங்கிவிட்டார்.
‘’பல தலைமுறைகளுக்கு தேவையான சொத்துக்களை என் தந்தை சேர்த்து வைத்திருக்கிறார். அதனால் பணம் சம்பாதிப்பது என்பது எனக்கு முக்கியமல்ல. சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதே ஆர்வம்’’ என்று அரசியல் என்ட்ரி குறித்து ஜோஸ் சார்லஸ் வெளிப்படையாக சொல்லி வருகிறார்.

மும்பையில் போட்ட திட்டம்:
புதுச்சேரி மாநிலத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன் என்று சொல்லி அங்கே ஜேசிஎம் அமைப்பை தொடங்கி இருக்கிறார் ஜோஸ் சார்லஸ். இதை கட்சியாக மாற்றுவதுதான் திட்டம்.
இந்த திட்டத்திற்கான ஆலோசனை மும்பையில் நடந்திருக்கிறது.
ஜோஸ் சார்லஸ் மும்பையில் இருந்தபோது பாஜக பிரமுகர் ராம் மாதவ் உடன் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டில் அவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்ததாகவும் சொல்கிறார்கள். மும்பையில் இருந்து பாஜகவுக்கு நிதி உதவிகள் செய்து வந்தபோதுதான் தனியாக பாஜக ஆதரவில் தனியாக கட்சி தொடங்கும் எண்ணம் வந்திருக்கிறது.
புதுச்சேரி மாநில பாஜக எம்.எல்.ஏ. ஜான்குமார், லாட்டரி தொழில் செய்து வந்தபோது மார்ட்டினுடன் நல்ல பழக்கம். அந்த பழக்கத்தில் புதுச்சேரியை தேர்ந்தெடுத்துள்ளார் ஜோஸ் சார்லஸ்.
30 தொகுதிகளிலும் போட்டி:
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசுடன் பாஜக கூட்டணியில் இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்தே முட்டல் மோதலாகத்தான் இருக்கிறது. இதனால்தான் ஜே.சி.எம்-ஐ தங்களது பி.டீம் ஆக களமிறக்குகிறது பிஜேபி என்கிறார்கள்.
ஜே.சி.எம். கட்சி தொடங்குவதற்கு முன்பாக மக்களுக்கு அறிமுகம் வேண்டும் என்பதற்காகத்தான் அமைப்பாக தொடங்கி சமூக சேவைகளை தொடங்கி இருக்கிறார் ஜோஸ். வரும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவெடுத்துள்ளது ஜே.சி.எம்.
ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள 40 ஆயிரம் வாக்காளர்களையும் பண உதவிகள், நலத்திட்டங்கள் மூலம் கவர்ந்துவிடலாம் என்று நம்பிக்கை வைத்து அதற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது ஜேசிஎம்.
15 தொகுதிகளில் ஜே.சி.எம்.க்கு அலுவலகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 15 தொகுதிகளுக்கு இது விரிவுபடுத்தப்பட உள்ளன.
ஒவ்வொரு தொகுதியிலும் வேலைவாய்ப்பு முகாம்கள், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாக்கள், விளையாட்டுப்போட்டிகள் – விருதுகள், சமூக நலத்திட்டங்கள் வழங்கி வாக்காளர்களை கவர்ந்து வருகிறது ஜேசிஎம்.

காமராஜர் தொகுதியில் ஜோஸ்:
தான் நிற்கும் தொகுதி நிச்சய வெற்றியைத் தரும் தொகுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஜோஸ் சார்லசுக்கு தன் தொகுதியையே விட்டுக்கொடுத்திருக்கிறார் ஜான்குமார். காமராஜர் நகர் தொகுதியில் இப்போதிலிருந்தே தீவிரமாக வேலைகள் செய்து வருகிறார் ஜோஸ்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார் ஜோஸ். இதில் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் ஆகிய பாஜக எம்.எல்.ஏக்களும், பாஜக ஆதரவில் உள்ள அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி நிவாஸ், அசோக் ஆகிய 6 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றிருந்தனர்.
மாஜிக்களுக்கு சீட்! சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு ஸ்வீட்!
இப்போதே ஜேசிஎம் கட்சிக்கு 6 எம்..எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது. தங்கள் கட்சிக்கு வரும்படி பல அரசியல் கட்சியினருக்கு அழைப்பு விடுத்து வருகிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு சீட் உறுதி என்று ஜேசிஎம்க்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்து வருகிறார்கள். அதே நேரம் சிட்டி எம்.எல்.ஏக்களையும் குளிர்வித்தால் தங்கள் பக்கம் வந்துவிடுவார்கள் என்று அவர்களுக்கு குளிர்சாதன பெட்டியுடன் மேலும் பல தீபாவளி பரிசுகளையும் வழங்கி இருக்கிறார் ஜோஸ்.

தீபாவளி பரிசாக முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு இரட்டைக்கதவு குளிர்சாதன பெட்டி, ஸ்வீட் பாக்ஸ், பட்டாசுகள் வழங்கி இருக்கிறார் ஜோஸ். நமக்கு ஆப்பு வைக்க நமக்கே குளிர்சாதன பெட்டியா என்று வெகுண்டெழுந்த ரங்கசாமி, தனது ஆதரவாளர்களுக்கு வந்த பரிசுகளை திருப்பி கொடுத்துவிடச்சொல்லி ஆவேசப்பட்டிருக்கிறார்.
என்.ஆர். காங்கிரஸ் அதிருப்தி:
இந்த அரசுக்கு ஆளத்தகுதி இல்லை என்றும், பல ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் ரங்கசாமி புதுச்சேரிக்கு எதுவும் செய்யவில்லை. அவர் செய்யாததால்தான் தான் செய்ய முன் வந்திருப்பதாக ஜோஸ் சார்லஸ் சொல்லி வருவதை முதல்வர் ரங்கசாமி ரசிக்கவில்லை. பாஜகவின் பின்னணியில்தான் ஜோஸ் வருகிறார் என்பதால் பாஜக தலைமை மீது ரங்கசாமி கடும் அதிருப்தியில் உள்ளார்.

பாஜகவின் பி டீம்:
பாஜகவின் பி டீம்தான் ஜேசிஎம். அதனால்தான் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஜோஸ் உடன் வலம் வருகிறார்கள். அவருடன் இணைந்து தீபாவளி பரிசு விநியோகிக்கிறார்கள். தங்களின் பி டீம் இல்லை என்றால் பாஜக மாநில தலைவர் தலைவர் வி.பி.ராமலிங்கம் ஏன் இதை கண்டிக்கவில்லை? ‘இந்த அரசுக்கு ஆளத்தகுதியில்லை’ என்று கூட்டணி அரசை ஜோஸ் விமர்சிப்பதை எல்லாம் ரசித்துக்கொண்டிருக்கிறார். ஏன் இதை கண்டிக்கவில்லை? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் முதல்வருமான நாராயணசாமி.
இதையடுத்து வி.பி.ராமலிங்கம், கண்டித்திருக்கிறேன். கட்சித்தலைமைக்கும் தகவல் கொடுத்திருக்கிறேன் என்று பேட்டியளித்து சமாளித்திருக்கிறார். தனக்கு வந்த தீபாவளி பரிசை திருப்பி கொடுத்துவிட்டதாகவும் சமாளித்திருக்கிறார்.

காங்., தொகுதிகளுக்கு குறி:
பாஜக தொகுதிகளை விட்டு, காங்கிரஸ் தொகுதிகளை மட்டுமே குறிவைத்து வேலை செய்கிறது ஜேசிஎம். இதன் மூலமே இது பாஜகவின் வேலைதான் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என்கிறார் நாராயணசாமி. என்னதான் செய்தாலும் பாஜகவின் கனவு பலிக்காது என்றும் சவால் விடுகிறார் நாராயணசாமி.
