ஒருங்கிணைப்பை வலியுறுத்தி தொடர்ந்து பேசி வந்த அதிமுக சீனியர் செங்கோட்டையன், கெடு விதித்ததால் அவரின் கட்சி பொறுப்புகளை பறித்தார் எடப்பாடி பழனிசாமி. இதன் பின்னர் தேவர் ஜெயந்தி நாளில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியவர்களோடு பேசியதால், மதுரையில் இருந்து பசும்பொன்னும் ஓபிஸ்சுடன் ஒரே காரில் பயணம் செய்ததால், கட்சியின் விதிகளை மீறியதாகச் சொல்லி கட்சியை விட்டே நீக்கப்பட்டார் செங்கோட்டையன்.

அதிமுகவில் 53 ஆண்டுகால சீனியரான தனக்கு விளக்கம் கேட்டு முறைப்படி நோட்டீஸ் அனுப்பிருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாமல் தன்னை நீக்கி இருப்பது சர்வாதிகாரம் என்று கூறியிருந்தார்.
தன்னை அதிமுகவில் இருந்து நீக்கிய பின்னர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார் செங்கோட்டையன். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் விரைந்து விசாரணை நடத்த வலியுறுத்தி அவர் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உண்மையான அதிமுக இல்லை என்றும், அதை நிரூபிக்க கால அவகாசம் வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரியிருக்கிறார் செங்கோட்டையன்.
தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லாது என்றும், எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளர்தான் என்றும், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என்றும் உரிமை முழக்கம் எழுப்பி வழக்கு தொடந்து அது நீதிமன்றத்தில் உள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் எடுத்த அதே அஸ்திரத்தை இப்போது செங்கோட்டையனும் எடுத்திருப்பதால் அதிர்ந்து போயிருக்கிறது எம்.ஜி.ஆர் மாளிகை.
