தமிழ்நாட்டில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR – Special Intensive Revision) தொடங்கியுள்ளது. இதன் மூலம், நமது மாநிலம் மட்டுமல்லாமல், மொத்தம் 9 மாநிலங்களும் 3 யூனியன் பிரதேசங்களும் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுகின்றன.
இந்த எஸ்.ஐ.ஆர் குறித்து பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இது என்ன?, ஏன் இது தேவை?, இதில் நாம் என்ன செய்ய வேண்டும்? என்று. இந்தக் கட்டுரையில், அந்த அனைத்திற்கும் எளிய பதில் கிடைக்கும்.

எஸ்.ஐ.ஆர் (SIR) என்றால் என்ன?
பொதுவாக, தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு சுருக்க திருத்தம் (SSR – Special Summary Revision) என்ற பெயரில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும். அதில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவர், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படுவர், மற்றும் முகவரி போன்ற விவரங்கள் திருத்தப்படுகின்றன.
ஆனால் எஸ்.ஐ.ஆர் என்பது அதைவிட வேறுபட்டது. இது சிறப்பு சூழ்நிலைகளில் மட்டும் நடத்தப்படும் ஒரு விரிவான கணக்கெடுப்பு. இதில், பட்டியலில் ஏற்கனவே உள்ள வாக்காளர்களும் கூட மீண்டும் ஒரு முறை தங்கள் விவரங்களை படிவம் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் கடைசியாக எஸ்.ஐ.ஆர் நடந்தது 2002 முதல் 2005 வரை. இப்போது மீண்டும் இப்போது 2025-ல் தொடங்கியுள்ளது.
எப்போது நடக்கிறது?
தேர்தல் ஆணையம் இதை ஐந்து கட்டங்களாக நடத்துகிறது. இது நவம்பர் 4, 2025 அன்று தொடங்கி பிப்ரவரி 7, 2026 அன்று முடிவடைகிறது.
- முதல் கட்டம் (நவம்பர் 4 – டிசம்பர் 4)
வீடு தோறும் வாக்குச்சாவடி அலுவலர்கள் சென்று கணக்கெடுப்புப் படிவம் வழங்குவர். - இரண்டாம் கட்டம் (டிசம்பர் 4 வரை)
சேகரிக்கப்பட்ட படிவங்கள் சரிபார்க்கப்படும். - மூன்றாம் கட்டம் (டிசம்பர் 9 – ஜனவரி 8)
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்; புதிய விண்ணப்பங்கள் பெறப்படும். - நான்காம் கட்டம் (டிசம்பர் – ஜனவரி)
முறையீடுகள், ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்படும். - ஐந்தாம் கட்டம் (பிப்ரவரி 7, 2026)
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்காளர்கள் செய்ய வேண்டியவை என்ன?
முதல் கட்டத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) வருவார். அவர்கள் கணக்கெடுப்பு படிவம் வழங்குவார்கள்.
அந்தப் படிவத்தில் உங்கள் பெயர், முகவரி, வாக்குச்சாவடி எண் போன்றவை முன்பே அச்சிடப்பட்டிருக்கும்.
நீங்கள் செய்ய வேண்டியது என்னென்ன..?
அந்த விவரங்கள் சரியாக உள்ளனவா எனச் சரிபார்க்கவும்,
திருத்த வேண்டிய இடங்களை பூர்த்தி செய்யவும்,
பூர்த்தி செய்த படிவத்தை BLO-விடம் கொடுக்கவும்.
நீங்கள் கொடுத்ததை நிரூபிக்கும் அத்தாட்சி சீட்டும் அவர்களிடமிருந்து பெறலாம்.
வீட்டில் யாராவது வெளிநாட்டில் இருந்தால்?
குடும்பத்தில் யாராவது கல்வி, வேலை காரணமாக வெளிநாட்டில் இருந்தால், அவர்களின் சார்பில் குடும்பத்தில் ஒருவரே அந்தப் படிவத்தை பூர்த்தி செய்து தரலாம். அதற்கான வசதி படிவத்திலேயே உள்ளது.
ஒரே ஊரில் வேறு இடத்தில் குடிபெயர்ந்திருந்தால்?
ஒரே நகரத்தில் வேறு முகவரிக்கு மாற்றியிருந்தாலும், அதற்குரிய வாக்குச்சாவடியில் உள்ள அலுவலரிடம் புதுப்பிப்பு படிவத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். இதன் மூலம் உங்கள் பெயர் சரியான வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்படும்.

யாருக்கெல்லாம் சிக்கல் வரக்கூடும்?
வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியில் யாரும் வசிக்கவில்லை என்றால், அந்த முகவரியில் பெயர் நீக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
நிரந்தரமாக வேறு ஊரில் வசிக்கிறீர்கள் ஆனால் பழைய ஊருக்கே வாக்களிக்கச் செல்கிறீர்கள் என்றால், இம்முறை உங்கள் பெயர் நீக்கப்படலாம்.
அந்த நேரத்தில், நீங்கள் புதிய முகவரியில் வாக்காளராக மீண்டும் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தை சமர்ப்பிக்கும் போது ஆவணங்கள் தேவைப்படாது.
ஆனால், தேர்தல் அலுவலர் விளக்கம் கேட்கும்போது, பிறந்த தேதி மற்றும் இருப்பிடத்தை நிரூபிக்க சில ஆவணங்கள் கேட்கப்படலாம்.
அவை: பிறப்பு சான்றிதழ்
கல்வி சான்றிதழ்
ஆதார் அட்டை
கடவுச்சீட்டு
அரசு ஊழியர் அடையாள அட்டை
நிரந்தர முகவரி சான்றிதழ்
மாநில அரசு வழங்கிய குடும்ப பதிவேடு
01.07.1987-க்கு முன் பிறந்தவர்கள் தங்கள் பிறப்பு ஆவணத்தை வழங்க வேண்டும்.
1987 – 2004-க்குள் பிறந்தவர்கள் தங்களது அல்லது பெற்றோரின் ஆவணத்தை வழங்கலாம்.
2004க்கு பின் பிறந்தவர்கள் தங்களது, தந்தை மற்றும் தாயின் ஆவணங்களையும் சேர்க்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் எதைச் செய்கிறது?
தேர்தல் ஆணையம்( Election Commission ) இதற்காக BLO மற்றும் Booth Level Agents (PLA-2) ஆகியோருக்கு சிறப்பு பயிற்சி அளித்துள்ளது. அவர்கள் வீடு தோறும் சென்று படிவங்களை வழங்கி சேகரிப்பார்கள்.
அரசியல் கட்சிகளும் தங்களது முகவர்களை தயார்படுத்தி உள்ளன.
வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி அலுவலர் பெயர், எண் போன்ற தகவல்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளம் (https://eci.gov.in) மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஏன் இதைச் நாம் செய்ய வேண்டும்?
இந்த எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் முக்கிய நோக்கம் வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்துவது,இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயரை நீக்குவது, உண்மையான வாக்காளர்களை உறுதிப்படுத்துவது.
இதன் மூலம் 2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தவறில்லாத வாக்காளர் பட்டியல் உருவாகும். கணக்கெடுப்பு அலுவலர் வரும்போது, நிச்சயம் வீட்டில் ஒருவர் இருப்பதை உறுதி செய்யுங்கள். படிவத்தை முழுமையாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யுங்கள்.
ஆவணங்கள் கேட்கப்பட்டால் அவற்றை நேரத்துக்குள் அளியுங்கள். இவை அனைத்தும் செய்யப்படாவிட்டால், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இவை அனைத்தையும் நன்கு அறிந்து நடந்து கொண்டால் இந்த நடைமுறையில் ஏற்படும் பல சிக்கல்களை தவிர்க்கலாம்.
அரசியல் கட்சிகளின் பெரும் அச்சம்
தமிழ்நாட்டில் நடைபெறும் எஸ்.ஐ.ஆர் (SIR) வாக்காளர் பட்டியல் சீராய்வில் அடையாள ஆவணங்கள் தொடர்பான விதிமுறைகள் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பொதுமக்கள் வைத்திருக்கும் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போன்ற ஆவணங்கள் ஏற்கப்படாமல், சில குறிப்பிட்ட ஆவணங்கள் தேவைப்படுவது, பல தகுதியான வாக்காளர்களை நீக்கப்படும் நிலைக்கு தள்ளும் என்று அரசியல் கட்சிகள்கூறுகின்றன.
பீகார் மாநிலத்தில் இதே முறை நடைமுறையில் இருந்தபோது, 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதைக் கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டிலும் இதே தவறு மீண்டும் நடைபெறுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
அதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம், அனைவரும் வழங்கக்கூடிய பொதுவான ஆவணங்களை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளன.
எஸ்.ஐ.ஆர் என்பது ஒவ்வொரு வாக்காளரின் உரிமையைப் பாதுகாக்கும் முக்கியமான செயல்முறை. நாம் அனைவரும் விழிப்புடன் இதில் பங்கேற்று, “என் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? சரியாக உள்ளதா?” என உறுதி செய்துக்கொள்ள வேண்டும். ஓர் நாடு வலுவாக இருப்பதற்கு வலுவான வாக்காளர் பட்டியல் மிகவும் அவசியம் .
