பத்தாவது முறையாக பீகார் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார் ஐக்கிய ஜனதா தளக் கட்சி தலைவரும் தற்போதைய முதல்வருமான நிதீஷ் குமார். 10 முறை என்றால் 50 ஆண்டுகால ஆட்சி என்று கணக்குப் போடக்கூடாது. ஒரு கூட்டணியில் வெற்றி பெற்று முதலமைச்சராகி, அதன்பின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அடுத்த கூட்டணியில் சேர்ந்து மறுநாளே மீண்டும் முதலமைச்சரான வரலாறு ஐக்கிய ஜனதாதளக் கட்சித் தலைவர் நிதீஷ் குமாருக்கு உண்டு.
பீகார் மாநிலம் சமூக நீதியின் குரலை ஒலிப்பதில் தமிழ்நாட்டுக்கு அடுத்த நிலையில் உள்ள மாநிலம். இடதுசாரி சிந்தனைகள் வலிமையாக இருந்த மாநிலம். முற்போக்கு சிந்தனைகள் கொண்ட மாநிலம். ஆனால், முன்னேற்றம் காணாத மாநிலம். காலத்திற்கேற்ற வளரச்சி இல்லாத காரணத்தால், அந்த மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
நிதீஷ் குமாருக்கும் முன்னாள் முதலமைச்ச்ர லாலு பிரசாத்துக்கும் ஏற்பட்ட உள்கட்சிப் போட்டியால் பீகாரில் ஜனதாதளம் சிதறுண்டபோது ஐக்கிய ஜனதாதளத் தலைவராக நிதீஷூம், ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சித் தலைவராக லாலுவும் அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக நிற்கத் தொடங்கினர். இவர்களின் பிளவை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் செய்தது பா.ஜ.க.
லாலு உறுதியான பா.ஜ.க. எதிர்ப்பாளர். அத்வானியின் ரதயாத்திரையைத் தடுத்து அவரைக் கைது செய்த துணிச்சல்காரர். நிதீஷ்குமார் அரசியல் களத்தின் சூழல்களைப் பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாதி. இந்தியா கூட்டணியில் அவரைத்தான் முதலில் முன்னிலைப்படுத்தினார்கள். அவரோ தேர்தலுக்கு முன்பே பா.ஜ.க. பக்கம் போய்விட்டார். பா.ஜ.க. ஐக்கிய ஜனதாதளம், ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமையிலான கட்சி ஆகியவற்றுக்குள் பல பிரச்சினைகள் இருந்தாலும் தேர்தல் களத்தில் ஒன்றாக நின்று, சீட் பங்கீடு-பிரச்சாரம் எல்லாவற்றையும் முறையாக முன்னெடுத்தனர்.
ராஷ்ட்ரிய ஜனதாதளத்தை வழிநடத்தும் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துடிப்பான இளைஞர். ஆனால், கூட்டணி அமைப்பதில் அவருக்குப் பல சிக்கல்கள் இருந்தன. பீகாரில் காங்கிரஸ் கட்சி தன் வலுவை இழந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும், அந்த மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணியில் கூடுதல் இடம்கேட்டு நெருக்கடியைத் தந்தார்கள். வெற்றி வாய்ப்பைவிட தங்கள் சொந்த லாபத்தைக் கணக்கிட்டார்கள். பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. ராகுல்காந்தியின் அக்கறையே இந்த கூட்டணி அமைவதற்கு காரணமாக அமைந்தது.
தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி அரசு பெண்களின் தொழில் மேம்பாட்டுக்காக தலா 10ஆயிரம் ரூபாய் என 1 கோடியே 25 இலட்சம் குடும்பங்களுக்கு நிதி அறிவித்தது. மத்திய அரசு உடனே அந்த நிதியை ஒதுக்கியது. தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்தபோதும், அந்தப் பணத்தை வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. அதனால் பீகார் பெண்களின் வங்கிக்கணக்கில் ஒரே நாளில் 10ஆயிரம் ரூபாய் சேர்ந்தது. வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, ஓவைசியின் ஏ.எம்.ஐ.எம். ஆகியவை வழக்கம்போல எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு சாதகமாக வேண்டிய ஆளுங்கட்சி மீதான அதிருப்தி வாக்குகள் ஒருங்கிணையாமல் பார்த்துக்கொண்டன.
எஸ்.ஐ.ஆர். எனும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் தொடங்கப்பட்டது பீகார் மாநிலத்தில்தான். முதல் கட்டத்தில் 65 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். பின்னர் அதில் 33 இலட்சம் பேர் உரிய ஆவணங்கள் மூலம் தங்கள் பெயரை சேர்த்தனர். தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்க, அதில் கூடுதல் தொகுதிகளை நிர்பந்தித்து வாங்கிய காங்கிரசின் தோல்வி படுமோசமாக அமைந்தது.
கட்சி ரீதியான வாக்குகளைப் பார்க்கும் போது 89 தொகுதிகளில் வென்ற பா.ஜ.க. வாங்கியுள்ள வாக்கு சதவீதம் 20.05%. அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் 78 இடங்களை வென்றுள்ள நிலையில் 19.25% வாக்குகளைப் பெற்றுள்ளது. 25 தொகுதிகளை மட்டுமே வென்றுள்ள எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதளம் பெற்றுள்ள வாக்கு சதவீதம் 23%.
அதிக வாக்கு சதவீதம் கொண்ட கட்சிதான் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போயிருக்கிறது. இதுதான் இந்தியத் தேர்தல் முறை. ஒட்டுமொத்தமாக எவ்வளவு வாக்குகள் வாங்குகிறோம் என்பதைவிட, ஒவ்வொரு தொகுதியிலும் முன்னணி பெறும் வகையில் வாக்குகளைப் பெறுகிறோமா என்பதுதான் முக்கியமானது. எஸ்.ஐ.ஆர். செயல்பாடு குறிவைத்து நடத்தப்பட்டிருந்தாலும் இந்த நிலைமையை உருவாக்க முடியும். பீகார், தமிழ்நாட்டுக்கு ஒரு பாடம்.
