பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரும் வெற்றியைப் பெற்றதால், நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக தேர்வு பெறுவது உறுதியானது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர் இதுவரை 10 தடவைகளில் ஒருமுறையும் தேர்தலில் நேரடியாக போட்டியிடவில்லை.
பீகார் சட்ட மேலவை உறுப்பினராக இருந்தபடியே 9 முறை முதலமைச்சரான நிதிஷ், இம்முறையும் மேலவை உறுப்பினர் என்பதனால், போட்டியில்லாமல் 10ஆவது முறையாக பதவி ஏற்கிறார்.
1977-ல் முதல் முறையாக தேர்தலில் தோல்வி கண்ட அவர், 1985-ல் தான் முதல் வெற்றி பெற்றார். அதன் பிறகு 5 முறை மக்களவை உறுப்பினர், 10 முறை முதலமைச்சர், கூட்டணி மாற்றங்கள் என பீகார் அரசியலில் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
எதிர்பாராத தகவல் என்னவென்றால், இவ்வளவு நீண்ட கால அரசியல் பயணத்திற்குப் பிறகும், நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு வெறும் 1.64 கோடி ரூபாய் மட்டுமே. இதில் அசையும் சொத்துகள் 16.97 லட்சம் ரூபாய்; அசையா சொத்துகள் 1.48 கோடி ரூபாய் என 2024-ல் அரசு வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.
