பத்தாண்டு காலம் தமிழகத்தை அச்சத்தில் ஆழ்த்தி வந்த பவாரியா கொலை, கொள்ளை கும்பலின் கொடூரத்தை கதைக்களமாக கொண்டு கடந்த 2017ம் ஆண்டு வெளிவந்தது ’தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம். அப்படம் திரைக்கு வந்தே 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. கதைக்களம் அமைய முக்கியக் காரணமாக இருந்த சுதர்சனம் கொலை வழக்கில் இப்போதுதான் தீர்ப்பு வழங்க இருக்கிறது நீதிமன்றம். இருபது ஆண்டுகளுக்கு பின்னர் இப்போதுதான் வரும் 21.11.2025 அன்று அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் படுகொலை வழக்கில் தீர்ப்பு வழங்க இருக்கிறது நீதிமன்றம்.
பவாரியா கொள்ளைக்குழு:
ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் உள்ள நாடோடி குற்றக் கும்பல்தான் ‘பவாரியா’.
நாடு முழுவதும் சென்று கொள்ளை அடித்து கொள்ளைக்கு இடையூறாக இருந்தால் கொலையும் செய்து தங்கள் சொந்த இடங்களுக்கு சென்று தலைமறைவாகி விடுவது இக்குழுவின் வழக்கம்.
அப்படித்தான் தமிழகத்தில் 1995ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டு வரையிலும் 10 ஆண்டுகாலமாக 13 கொலை, 24 கொள்ளை குற்றங்களை கொடூரத்தை அரங்கேற்றி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தனர். அதிமுக எம்.எல்.ஏ.வை கொன்று கொள்ளை அடித்தபோதுதான் வெகுண்டெழுந்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா போட்ட அதிரடி உத்தரவுக்கு பிறகு பவாரியா கொள்ளைக்கும்பலுக்கு முடிவு கட்டியது தமிழக காவல்துறை.

-கொள்ளைகளின் பின்னணியில் இருந்த தரம்சிங்
தேசிய நெடுஞ்சாலை ஓர வீடுகள் குறி:
கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை நிகழ்த்திவிட்டு எளிதாக தப்பித்துச் செல்லவதற்காகவே தேசிய நெடுஞ்சாலைகள் ஓரம் உள்ள தனிமையான வீடுகளையே குறிவைத்தனர் பவாரியா கொள்ளையர்கள். வெளி மாநிலங்களில் இருந்து லாரியில் கும்பலாக வந்துதான் சம்பவங்களை நிகழ்த்தி இருக்கின்றனர் பவாரியா குழுவினர்.
தேசிய நெடுஞ்சாலை ஓரம் தனிமையாக உள்ள வீடுகளை தேர்ந்தெடுக்க இந்த கும்பலில் உள்ள பெண்கள் பாத்திரங்கள், துணிகள் விற்பது மாதிரி பகல் பொழுதுகளில் சுற்றுவார்கள். அவர்கள் தேர்வு செய்து கொடுக்கும் வீட்டில் இரவில் அக்குழுவில் உள்ள ஆண்கள் சென்று கொள்ளையடிப்பார்கள். தங்களை யாரும் பிடித்து விடக்கூடாது என்பதற்காக உடல் முழுவதும் எண்ணெய் தடவிக்கொண்டு செல்வார்கள். தங்களை பின் தொடர்ந்து வந்துவிடக்கூடாது என்பதற்காக சம்பவ இடத்திலேயே செல்போன்களையும் ஆயுதங்களையும் விட்டுச் சென்றுவிடுவார்கள்.

கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்ற இரும்பு கோடாரிகள், இரும்பு கம்பிகள், நாட்டு துப்பாக்கிகளுடன் லாரியில் வருவதுதான் பவாரியா கொள்ளையர்களின் வழக்கம்.
சம்பவத்தை செய்துவிட்டு 1 கிலோ மீட்டர், 2 கிலோ மீட்டர் நடந்து சென்று லாரியில் தப்பிச்செல்வது வழக்கம். கும்பலாக லாரியில் வரும் இவர்கள் 1 அல்லது 2 கிலோ மீட்டர் தூரத்தில்தான் லாரியை நிறுத்தி வைத்துவிட்டு சம்பவத்திற்கு செல்வார்கள்.
முதல் வேட்டை:
வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டையில் 1995ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் தேதிதான் தமிழகத்தில் முதல் வேட்டையாட தொடங்கியது இந்த பவாரியா குழு. வீடு புகுந்து மோகன்குமாரை கொன்று, அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் படுகாயப்படுத்திவிட்டு நகை, பணத்துடன் தப்பியது பவாரியா குழு. அதே வேலூரில் அதே ஆண்டில் சங்கர் வீட்டிலும் தங்கள் கைவரிசையை காட்டியவர்கள் அதன் பின்னர் 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் பக்கமே தலைவத்து படுக்கவில்லை.

மீண்டும் வேட்டை:
வேலூரில் இரண்டு சம்பவங்களை செய்த பின்னர் அமைதியாக இருந்த பவாரியாக குழு 2001ல் மீண்டும் தமிழகத்தில் காலடி வைத்தது. அவிநாசி, தர்மபுரி, சேலத்தில் அடுத்தடுத்து சம்பவங்களை அரங்கேற்றி பதறவைத்தார்கள்.
2002ல் ஆத்தூர், பர்கூர், ஸ்ரீபெரும்புதூர், காங்கேயம், கும்பிடிப்பூண்டி, கரியமங்களத்தில் தொடர் சம்பவங்களை அரங்கேற்றி தமிழகத்தை அச்சத்தில் ஆழ்த்தினர் பவாரியா கொள்ளையர்கள்.

தாளமுத்து நடராஜன் வீடு அட்டாக்:
காங்கிரஸ் பிரமுகர் தாளமுத்து நடராஜன் வீட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பின்னர்தான் பவாரியா கொள்ளைக் கும்பலின் பயங்கரம் வெளி உலகத்திற்கு தெரியவந்தது.
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் தாளமுத்து நடராஜன். சீலநாயக்கன் பட்டியில் இருந்தது இவரது வீடு. கடந்த 2002ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 11ம் தேதி அன்று இரவு பவாரியா கும்பல் தாளமுத்து நடராஜன் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தது. இந்தக் கும்பலை பார்த்ததும் விரட்டுவதற்காக ஓடி வந்த காவலாளி கோபாலை இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொன்றனர். அதன் பின்னர் கதவை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றனர். தாளமுத்து நடராஜனின் மகன்களை இரும்பு கம்பியால் பலமாக அடித்து ஒரு அறையில் தூக்கிப்போட்டு பூட்டினர். மேலும் வீட்டில் இருந்த 6 பேரையும் இரும்பு கம்பியால் அடித்து படுகாயமடையச் செய்துவிட்டு கொள்ளச் சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அறைக்குள் இருந்து துப்பாக்கியுடன் வெளிவந்த தாளமுத்து நடராஜனை லாவகமாக மடக்கி இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தனர்.
வீட்டில் இருந்த 250 பவுன் நகைகளுடன் கை துப்பாக்கி, டபுள் பேரல் துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியது கும்பல்.
இதற்குள் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வீட்டை நோக்கி ஓடிவந்தனர். அவர்களை துப்பாக்கியைக் காட்டி, வானத்தை நோக்கி சுட்டு மிரட்டி விட்டு, 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஏறி தப்பிச்சென்றனர் பவாரியா கொள்ளையர்கள்.
அன்னதானப்பட்டி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 18 பேரை குற்றவாளிகளாக சேர்த்தனர். ஓம் பிரகாஷ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

-ஓம் பிரகாஷ் என்கிற ஓமா பவரியா
போலீசாருக்கு தலைவலி: 2003ம் ஆண்டில் வாலாஜாபேட்டை, நாட்றம்பள்ளி, சோழவரத்தில் 4 கொள்ளை சம்பவங்களை செய்தனர். இந்த சம்பவத்தில் 3 பேரை கொன்றார்கள்.
2004ம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூர், திருவேற்காடு, வெள்ளவேடு, திருவலம் பகுதிகளில் கொள்ளைச் சம்வத்தை அரங்கேற்றி 2 கொலைகளையும் செய்தனர்.
இந்த தொடர் சம்பவங்கள் தமிழக போலீசாருக்கு பெரும் தலைவலையத் தந்தன.

சுதர்சனம் வீடு அட்டாக்:
2001 -2006 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் சிறிது காலம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார் சுதர்சனம்.
அப்போது கும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்தார். 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் பெரியபாளையம் அருகே தானாகுளத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார் சுதர்சனம்.

வீட்டின் அருகே இருந்த தென்னை மரத்தின் வழியாக ஏறி மேல்மாடிக்குச் சென்று அங்கிருந்து வீட்டிற்குள் நுழைந்தனர் 6 பேர் கொண்ட பவாரியா கொள்ளைக்கும்பல். மாடி அறையில் இருந்த சுதர்சனத்தின் மகன்கள் விஜயகுமார், சதீஷை கொடூரமாக தாக்கிப்போட்டுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு கீழ் அறையில் இருந்து ஓடி வந்த சுதர்சனத்தை ஒருவன் துப்பாக்கியால் சுட்டு சாய்த்தான். பின்னர் பீரோ, அலமாரிகளை உடைத்து 64 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு தப்பினார்கள்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மீது வெடிகுண்டுகளை வீசி விரட்டி அடித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று நின்றிருந்த லாரியில் ஏறி தப்பினர்.

சுட்டுப்பிடிக்க உத்தரவு:
சுதர்சனம் வீடு அட்டாக்கில் பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
தன் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, குற்றவாளிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார் . குற்றவாளிகளை பிடிக்க ஜாங்கிட் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவையும் அமைத்தார்.

அடையாளம் தெரிந்தது எப்படி?
1995ல் இருந்து 2005ம் ஆண்டு வரையிலும் 10 ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்த அனைத்து சம்பவங்களும் ஒரே மாதிரியாக இருந்ததால் சிறப்பு புலனாய்வுக்குழுவின் விசாரணையில் இந்த குற்றச்சம்பவங்களை செய்தது பவாரியா கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. கைரேகை ஆய்வில் இது உறுதியானது. 1996முதல் 2000 வரையிலும் தமிழகத்தில் இவர் சம்பவங்களை செய்யாமல் இருந்ததற்கு காரணம், அப்போது இவர்கள் சிறையில் இருந்தார்கள் என்பதும் தெரியவந்தது.

ஓம் பிரகாஷ் கூட்டாளிகள்:
ஜாங்கிட்டின் தனிப்படையினர் அதிரடியில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் மற்றும் அசோக், ராகேஷ், ஜெயில்தர் சிங் ஆகியோரை கைது செய்தனர்.
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஓம் பிரகாஷ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தான். அவனது சகோதரர் ஜெகதீஸ் பரா, 2005ம் ஆண்டில் இருந்து புழல் சிறையில் விசாரணை கைதியாக உள்ளான்.

நீதிபதி அதிர்ச்சி:
கடந்த 2021ம் ஆண்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 15 ஆண்டுகளாயும் ஏன் இன்னும் இந்த வழக்கு முடிக்கப்படவில்லை? எந்த முன்னேற்றம் இல்லையே? என்று பெரியபாளையம் போலீசாரிடம் கேட்டு அதிர்ச்சியை வெளிப்படுத்தினார் நீதிபதி பாரதிதாசன்.
தீர்ப்பு:
20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த வழக்கில் வரும் 21.11.2025 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. தீர்ப்பு என்ன? என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
பவாரியா கொள்ளையர்கள் சம்பவத்தை கதைக்களமாக வைத்துதான் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் வந்தது. அந்த திரைப்படம் வெளியாகி 7 ஆகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
