சாதாரண ஒரு வாய்க்கால் தகராறு இரு சமூகத்தினருக்கு இடையேயான பிரச்சனையாக வெடித்து, அது 32 ஆண்டுகளுக்கும் மேலாக தீராப்பகையாக நீடித்து, இரு தரப்பிலும் தலா 25க்கும் மேற்பட்ட பழிக்குப் பழி கொலைகள் வாங்கி, தென் தமிழகத்தையே ரத்த பூமியாக்கி இருக்கிறது.
தெற்கின் இந்த ரத்த சரித்திரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘பைசன்’ திரைப்படத்திலும் பதிவாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பசுபதி பாண்டியன் – வெங்கடேஷ பண்ணையார் யார்? இவர்களுக்குள் என்ன நடந்தது? என்கிற தேடல் இப்போது அதிகரித்திருக்கிறது. ‘இருவர்’ கதையின் ஆதிமூலம் என்ன?
ஆதிமூலம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகே உள்ள மூலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் பண்ணையார். 5000 ஏக்கருக்கு மேலான சொத்துகளுக்கு அதிபதியாக விளங்கினார்.
இவருக்கு அசுபதி பண்ணையார், நாராயணன் பண்ணையார் என இரு மகன்கள். அசுபதியின் மகன் சுபாஷ் பண்ணையார். நாராயணனின் மகன் வெங்கடேச பண்ணையார்.
மூலக்கரையில் சிவசுப்பிரமணியன் பண்ணையாருக்கு சொந்தமான உப்பளம் இருந்தது. இந்த மூலக்கரையில் இருந்துதான் புல்லாவெளி கிராமத்திற்கு தேவையான தண்ணீர் சென்று வந்தது.

மூலக்கரை மேல்மடை என்பதால் அங்கிருந்துதான் கீழ்மடையான புல்லாவெளி கிராமத்திற்கு தண்ணீர் வந்தது. மேல்மடையில் இருந்த சுப்பிரமணியன் பண்ணையார் உப்பளத்திற்கு தண்ணீர் பாய்ந்தது போக மிச்சமுள்ள தண்ணீர்தான் கீழ்மடைக்கு சென்றது. இதனால் புல்லாவெளி கிராம மக்கள் திண்டாடி வந்தனர். தண்ணீர் வரத்து அதிகம் இல்லாததால் பலர் தங்களது நிலங்களை பண்ணையார் தரப்பிடமே விற்று வந்தனர்.
மேல்மடையில் இருந்து நேராக தண்ணீர் வராமல், தடுத்து வைக்கப்பட்டு கீழ்மடைக்கு வந்ததால் புல்லாவெளியில் உள்ள உப்பளத்திற்கு தேவையான தண்ணீர் பாய்ச்ச முடியாததால் வங்கி அதிகாரி ராஜகோபால், சுப்பிரமணியன் பண்ணையாரிடம் வாக்குவாதம் செய்தார். இது இருவருக்கும் இடையே தகராறாக மாறியது. இந்த பிரச்சனையில் நடந்த பஞ்சாயத்தில் ராஜகோபாலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் பசுபதி பாண்டியன்.
யார் இந்த பசுபதி பாண்டியன்?
தூத்துக்குடி மாவட்டம் மேல அலங்காரதட்டை பகுதியைச் சேர்ந்த சிதம்பரத்தின் மகன் பசுபதி பாண்டியன். 31.8.1990ல் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் சிலுவைப்பட்டி மைக்கேல் கொலை செய்யப்பட்ட வழக்கில் பசுபதி பாண்டியன் பெயரும் சேர்க்கப்பட்டது. அப்போது அவருக்கு 16 வயது. 16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கியதால் தன் சமூகத்தினர் இடையே பிரபலமானார் பசுபதி பாண்டியன்.
இதன் பின்னர் 25.12.1990ல் தூத்துக்குடி கிருஷ்ணாபுரம் அந்தோணிசாமி கொலை வழக்கிலும் பசுபதி பாண்டியன் பெயர் சேர்க்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளுக்கு பின்னர் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களிடையே மிகவும் பிரபலமானார் பசுபதி பாண்டியன்.

மருத்துவர் ராமதாஸ் 1989ல் பாமகவை நிறுவியபோது அவருக்கு தோள் கொடுத்தவர்களில் முக்கியமானவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்த பசுபதி பாண்டியன், தலித் ஏழுமலை.
தென் மாவட்டங்களில் பாமகவுக்கு ஒரு முகமாக விளங்கிய பசுபதி பாண்டியன், பாமகவின் இளைஞரணித் தலைவராக இருந்தார். அவரை 1993ஆம் ஆண்டின் இறுதியில் தடுப்புக்காவல் சட்டத்தின்படி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 6 மாதங்களுக்குப் பிறகும் அவர் விடுதலை செய்யப்படாத நிலையில், பசுபதி பாண்டியனை விடுதலை செய்ய வலியுறுத்தி 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். அதற்காக ஏப்ரல் 3ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றபோது அடுத்த நாள் ஏப்ரல் 4ஆம் தேதி அதிகாலையில் நடுவழியில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பலரும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர்.
பாமகவில் இந்த அளவுக்கு செல்வாக்குடன் இருந்த பசுபதி பாண்டியன் ஒரு கட்டத்தில் அக்கட்சியில் திடீரென்று இருந்து விலகி, தேவேந்திர குல இளைஞர் பேரவையை தொடங்கினார்.
அசுபதி பண்ணையார் கொலை:
ராஜகோபாலுக்கு ஆதரவாக பசுபதி பாண்டியன் நின்றதால் அவர் மேல் உள்ள ஆத்திரத்தை உப்பளத் தொழிலாளர்கள் மீது காட்டியது பண்ணையார் தரப்பு. உப்பளத்தில் வேலை பார்த்து வந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முள்ளக்காடு, பொட்டல், பழைய காயல் உள்ளிட்ட பகுதி மக்கள் அங்கேயே கூரை ஷெட்கள் அமைத்து வசித்து வந்தனர்.
இந்த உப்பளத் தொழிலாளர்கள் அமைத்திருந்த கூரை ஷெட்களை காலி செய்யும் படி அசுபதி பண்ணயார் நெருக்கடி கொடுத்து வந்தார். தொழிலாளர்கள் காலி செய்ய மறுத்து வந்தனர். இதனால் பண்ணையார் தரப்புக்கும் பசுபதி பாண்டியன் தரப்புக்கும் இடையே தகராறு வலுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக நடந்த பஞ்சாயத்து கைகலப்பானது. அப்போது 24.01.1993ல் அசுபதி பண்ணையார் படுகொலை செய்யப்பட்டார்.
அசுபதி பண்ணையார் படுகொலையால் பண்ணையார் குடும்பத்திற்கும் பசுபதி பாண்டியனுக்கும் இடையே தீராப்பகை உருவானது.

பழிக்குப்பழி வேட்டை:
அசுபதி பண்ணையார் படுகொலைக்கு நடந்த பழிக்குப்பழி கொலைகளால் தென் தமிழகம் ரத்த பூமியானது. பண்ணையார் தரப்பிலும் பசுபதி பாண்டியன் தரப்பிலும் மாறி மாறி ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை வீசி கொலைகள் விழுந்து வந்தன. இரு தரப்பிலும் மாறி மாறி நடந்த படுகொலைகளால் இரு தரப்பின் பகை இரு சமூகத்தின் பகையாக மாறியது.
அசுபதி பண்ணையார் படுகொலைக்கு பசுபதி பாண்டியனை காவு வாங்க துடித்தது பண்ணையார் தரப்பு. இந்த பழிக்குப்பழி வேட்டையில் பசுபதி பாண்டியனை கொலை செய்ய 21.4.1993ல் பண்ணையார் தரப்பு செய்த முயற்சி தோல்வியடைந்து விட்டது. இதில் உஷாரான பசுபதி பாண்டியன் தரப்பு 8.6.1993ல் சிவசுப்பிரமணியன் பண்ணையாரை படுகொலை செய்தது. அடுத்தடுத்து தங்கள் தரப்பில் 2 உயிர்களை இழந்ததால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றது பண்ணையார் தரப்பு.

சிவசுப்பிரமணியன் பண்ணையார் மற்றும் அசுபதி பண்ணையார் கொலை வழக்கில் பாம் கண்ணன், பொட்டல் கண்ணன், பீர் முகமது, சிங்காரம் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர்.
சிவசுப்பிரமணியன் பண்ணையார், அசுபதி பண்ணையார் மறைவுக்கு பிறகு வெங்கடேச பண்ணையார் எதிர் தரப்பின் தலைமை இடத்திற்கு வந்தார். அதன்பின்னர் பாம் கண்ணன், பீர்முகமது உள்ளிட்ட பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர்.
வெங்கடேச பண்ணையாருடன் அவருடைய சகோதரர் சுபாஷ் பண்ணையாரும் பழி தீர்க்கும் படலத்தில் இணைந்தார். தூத்துக்குடி பழையகாயல் பகுதியில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையார் பெயர் சேர்க்கப்பட்டது. அப்போது சேலம் சட்டக்கல்லூரியில் படித்து வந்தார் சுபாஷ் பண்ணையார்.
21.4.1993ல் தூத்துக்குடி சுப்பையா முதலியார் புரத்தில் பொன் இசக்கி, 12.5.1993ல் பிரையண்ட் நகரில் ஸ்டேட் பேங்க் வங்க் அதிகாரி ராஜகோபால், 5.5.1995ல் தென் திருப்பேரையில் அரிஸ்டாட்டில், 31.8.1997ல் பாம் கர்ணன், 13.1.2001ல் பழையகாயலில் காயல் பாலகிருஷ்ணன், புல்லாவெளி கோட்டார் என 2 பேர், 21.3.2003ல் தூத்துகுடியில் பீர் முகம்மது ஆகியோர் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் கொல்லப்பட்ட வழக்கில் வெங்கடேச பண்ணையாரும் அவரது தம்பி சுபாஷ் பண்ணையாரும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
சபதம் – சவால்:
தாத்தா சுப்பிரமணியன் பண்ணையார், சித்தப்பா அசுபதி பண்ணையார் கொலைக்கு காரணமான பசுபதி பாண்டியனை கொல்லுவதை தனது லட்சியமாக வைத்திருந்தார் வெங்கடேச பண்ணையார். இதனால் வெங்கடேச பண்ணையார் தரப்புக்கும் பசுபதி பாண்டியன் தரப்புக்கும் எந்த அளவுக்கு தீராப்பகை இருந்தது என்பதற்கு இருவரும் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகளே சாட்சியங்களாக உள்ளன.
ஒரு புலனாய்வு இதழுக்கு வெங்கடேச பண்ணையார் அளித்த பேட்டியில், ’’எனக்கும் பசுபதி பாண்டியனுக்கும் நீண்டநாள் பிரச்சனை இருக்கிறது. நிச்சயமாகச் சொல்கிறேன்; என் கையால ஓடஓட விரட்டி பசுபதி பாண்டியனை கொல்லுவேன்’’ என்று சூளுரைத்திருந்தார்.
வெங்கடேச பண்ணையாரின் இந்த சபதத்திற்கு பதில் கொடுத்திருந்த பசுபதிபாண்டியன், ‘’நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் முன்கூட்டியே போஸ்டர் அடித்து ஒட்டி எல்லோருக்கும் தெரியப்படுத்திவிட்டுத் தான் சென்று வருகிறேன். இதே மாதிரி ஒரு போஸ்டர் அடித்துவிட்டு ஒரு நிகழ்ச்சிக்கு செல்லட்டும் வெங்கடேச பண்ணையார். அப்போது தெரியும், நான் வெங்கடேச பண்ணையாரை கொல்கிறேனா? இல்லை அவர் என்னை கொல்கிறாரா? என்பது தெரியும்’’ என சவால் விடுத்தார்.

சென்னை வாசம்:
பசுபதி பாண்டியனை கொலை செய்துவிட ஒரு பக்கம் முயற்சிகள் செய்து கொண்டிருந்தாலும், கட்டப்பஞ்சாயத்து, அரசியல் என்று வேறு வேறு தளங்களிலும் கால் பதித்து வந்தார் வெங்கடேச பண்ணையார். இது காவல்துறைக்கு பெரும் தலைவலியைத் தந்தது. இதனால், பண்ணையார் தரப்பை பல முறை காவல்துறை எச்சரித்து வந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் வெங்கடேச பண்ணையாரை வேறு இடத்திற்கு இடம்பெயரும் படி காவல்துறை அறிவுறுத்தியது. ஆதரவாளர்களும் இதுதான் நல்ல முடிவு என்று அறிவுறுத்தினர். குடும்பத்தினரும் தேவையான செல்வ வளம் இருக்கிறது. அதனால் இருக்கிற காலத்தை நிம்மதியாக கழிக்க வேண்டும் என்று வேறு இடம்தான் சரியாக இருக்கும் என்று அறிவுறுத்தினர். அதன்படி சென்னைக்கு இடம்மாறினார் வெங்கடேச பண்ணையார். சென்னைக்கு அவர் இடம்மாறுவதற்கு காரணம் மனைவி ராதிகா. சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராதிகா செல்வியை அவர் திருமணம் செய்ததால் சென்னையிலேயே வசிக்கத் தொடங்கினார் வெங்கடேச பண்ணையார். வெங்கடேச பண்ணையாரின் தலைக்கு மேல் எப்போதும் கத்தி தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தும் அவரை விரும்பி திருமணம் செய்து கொண்டவர் ராதிகா செல்வி.
தூத்துக்குடியில் சென்னை வந்தாலும் அவரை துரத்திக்கொண்டே வந்தது பஞ்சாயத்துகள். இதற்காக சென்னையில் இருந்து கொண்டே தூத்துக்குடியிலும் காய்களை நகர்த்தி வந்தார். ஆதரவாளர்களுக்காக சென்னையிலும் கட்டப் பஞ்சாயத்துகளை நடத்தி வந்தார். இதுவே அவரின் என்கவுன்டருக்கான கவுண்ட் டவுனை கொடுத்தது.

வெங்கடேச பண்ணையார் என்கவுன்டர்!
ஜெ., – சசி : யார் போட்ட உத்தரவு?
சினிமா பைனான்சியர் பெப்சி முரளி, வெங்கடேச பண்ணையாரின் நண்பர். இவர் ஜெய்கணேஷ் என்பவருக்கு கொடுத்த பணம் திரும்ப வராததால் அதை வசூலித்து தரும்படி வெங்கடேச பண்ணையாரிடம் முறையிட்டார். ஜெய்கணேசை பிடித்து மிரட்டியதில், அவர் ஷமீர் அகமதுவிடம் பணத்தை கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்கும் விபரம் தெரியவந்தது.
யார் அந்த சமீர் அகமது? என்று வெங்கடேச பண்ணையார் விசாரித்த போதுதான், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ‘லீடர்ஸ் கேபிடல் சர்வீஸ் இந்தியா’ எனும் மோசடி நிறுவனத்தை நடத்தி வருவதும், தீவிரவாத கும்பல்களுக்கு பணம் விநியோகிப்பது, கஷ்டம்சில் சிக்கிக்கொள்ளும் பொருட்களை மீட்டுக்கொடுப்பது, வெளிநாட்டு கரன்சிகளை மாற்றித் தருவது போன்ற பல மோசை வேலைகளை செய்து வருவது தெரியவந்தது.
தன் ஸ்டைலில் சபீர் அகமதுவை மிரட்டியதில் அவரும் ஜெய்கணேஷிடம் வாங்கிய பணத்தை திரும்ப தருவதாக ஒப்புக்கொண்டு முதல் தவணையாக 10 லட்சம் ரூபாயையும் திருப்பி கொடுத்துவிட்டார். இரண்டாவது தவணையை வசூலிப்பதில்தான் பிரச்சனை ஏற்பட்டது. ஷமீர் அகமது கொடுத்த காசோலைகள் திரும்ப வந்துவிட்டதால் தேனாம்பேட்டையை சேர்ந்த முருகனையும், கோபியையும் அனுப்பி ஷமீர் அகமதுவை அழைத்து வரச்சொன்னார் வெங்கடேச பண்ணையார்.

பஞ்சாயத்திற்கு சென்றால் பணத்தை திரும்ப கொடுத்தே ஆகவேண்டும் என்கிற நிலைமை வந்ததால் அரசியல் செல்வாக்கு மூலம் அதிலிருந்து தப்பிக்க நினைத்தார் சமீர் அகமது. அப்போது தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பாத்திமா பீபி தனது உறவினர் என்பதால் அவரின் கவனத்திற்கு இந்தப் பிரச்சனையை கொண்டு சென்றார் சமீர் அகமது. அவர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றார். இதுதான் வெங்கடேச பண்ணையாரின் என்கவுன்டருக்கு வழிவகுத்தது.
வெங்கடேச பண்ணையாரின் என்கவுண்டர் உத்தரவுக்கு ஆளுநர் பாத்திமா பீவியின் அழுத்தம் மட்டும் காரணம் அல்ல.
மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை துப்பாக்கி முனையில் மிரட்டி பஞ்சாயத்து செய்த வெங்கடேச பண்ணையார் மீது சசிகலாவுக்கு புகார் சென்றதும் ஒரு காரணம்.
அதிமுகவுக்கு ரொம்பவே விசுவாசமாக இருந்த வெங்கடேச பண்ணையார். சாத்தான்குளம் இடைத்தேர்தலில் தனது நாடார் சமூக செல்வாக்கை பயன்படுத்தி அதிமுக வெற்றி பெற உதவிய மெத்தனத்தில் அதிமுகவின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்து, நிர்வாகிகள் நியமனத்தில் தலையீடு செய்ததால் தொல்லை தாங்க முடியாமல் டிடிவி தினகரன் சசிகலாவிடம் முறையிட்டதும் ஒரு காரணம்.
சென்னை எழும்பூரில் 2001ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி அன்று நெல்லையைச் சேர்ந்த அகில இந்திய தேவர் முன்னேற்ற கழக இளைஞரணி செயலாளர் கட்டத்துரை கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உதவி செய்தார் என்று வெங்கடேச பண்ணையார் மற்றும் சுபாஷ் பண்ணையார் மீது குற்றச்சாட்டு உள்ளது. தவிர செம்மரக்கட்டை வழக்கு, சினிமா பைனான்சியர் பெப்சி முரளி கட்டப்பஞ்சாயத்து வழக்கும் இருவர் மீது இருந்தது.
வடபழனி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் என் . மோகன்ராஜ் மீது சோடாபாட்டில் , நாட்டு வெடிகுண்டு வீசிய கொலை முயற்சி வழக்கும் இருவர் மீது இருந்தது. இந்த வழக்குகளும் வெங்கடேச பண்ணையாரை என்கவுன்டர் செய்ய அழுத்தம் கொடுத்தன.
எத்தனையோ வழக்குகள் இருந்தாலும் அடிமடியிலேயே கை வைத்துவிட்ட ஆத்திரத்தில் ஜெயலலிதாவிடம் முறையிட்டார் சசிகலா. இதன் பின்னரே வெங்கடேச பண்ணையாரை என்கவுன்டர் செய்ய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அப்போது சென்னை கமிஷனராக இருந்தவர் விஜயகுமார். அவரிடம் வெங்கடேச பண்ணையாரை என்கவுன்டர் செய்ய உத்தரவு பறந்தது. சமீர் முகமதுவிடம் இருந்து மிரட்டல் புகார் வாங்கி அந்த வழக்கில் வெங்கடேச பண்ணையாரை தேடத் தொடங்கினார் விஜயகுமார்.

தன்னை என்கவுன்டர் செய்யப்போகும் விபரத்தை காவல்துறையில் இருந்த தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் தெரிந்து கொண்ட வெங்கடேச பண்ணையார், வண்ணாரப்பேட்டை வீட்டில் தங்காமல், நுங்கம்பாக்கத்தில் லயோலா கல்லூரி எதிரில் உள்ள மகாலட்சுமி அபார்ட்மெண்டில் தனது நண்பர் ஜான்சனுக்கு சொந்தமான வீட்டில் தலைமறைவாக இருந்தார்.
பெப்சி முரளி விவகாரத்தில் தொடர்புடைய தேனாம்பேட்டை முருகனையும், கோபியையும் கீழ்ப்பாக்கம் போலீசார் மூலமாக கைது செய்தார் விஜயகுமார். அவர்களிடம் எவ்வளவு விசாரித்து பார்த்தும் வெங்கடேச பண்ணையார் இருக்கும் இடம் தெரியாததால் இந்த என்கவுண்டரில் இருந்து எப்படியும் தப்பிவிட நினைத்த வெங்கடேச பண்ணையார், தனக்கு நெருக்கமான அதிமுக அமைச்சர்கள் மூலம், அதிமுக தலைமையிடம், கட்சிக்காக எவ்வளவோ செய்திருக்கும் தன்னையே என்கவுன்டர் செய்தால் எப்படி? என்று பேசிப்பார்த்தார்.
அதிமுகவுக்கு வெங்கடேச பண்ணையார் செய்த நன்மைகளை எல்லாம் மனதில் கொண்டு ஜெயலலிதா யோசித்திருந்த வேளையில், அவருக்கே தெரியாமல் அப்போது தனக்கிருந்த அதிகாரத்தை பயன்படுத்தி என்கவுன்டர் உத்தரவை சசிகலா பிறப்பித்துவிட்டார் என்றும் காவல்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்தது.
சினிமா பைனான்சியர் பெப்சி முரளி மூலமாகவும், வெங்கடேச பண்ணையாருக்கு காவல்துறையில் நண்பராக இருந்து வந்த டி.சி.கிருஷ்ணமூர்த்தி மூலமாகவும் மகாலட்சுமி அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேச பண்ணையார் தங்கியிருக்கும் விபரம் போலீசாருக்கு தெரியவந்தது. அது குடியிருப்புகள் மிகுந்த பகுதி என்பதால் இரவில் என்கவுன்டர் செய்யாமல் அதிகாலையில் என்கவுன்டர் செய்ய போலீசார் திட்டமிட்டனர்.
ஏதேனும் ஒரு சந்தேகத்தில் அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு வெங்கடேச பண்ணையார் தப்பித்துச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, பெப்சி முரளியை விட்டு வெங்கடேச பண்ணையாருக்கு போன் செய்யச் சொன்னார்கள் போலீசார். அதன்படியே வெங்கடேச பண்ணையாருக்கு போன் செய்து, தான் விசாரித்த வரையில் ஒரு பிச்சனையும் இல்லை. அதனால் நிம்மதியா தூங்குங்க. காலையில் வந்து பார்க்குறேன் என்று சொன்னார் பெப்சி முரளி.
இரவு முழுவதும் மகாலட்சுமி அடுக்குமாடி குடியிருப்பைச் சுற்றி காவலுக்கு நின்றனர் போலீசார். 26.9.2003 அதிகாலையில் டி.சி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உதவி கமிஷனர் லட்சுமிநாதன், இன்ஸ்பெக்டர் இக்பால், நவீன் ஆகியோர் அடங்கிய டீம் ஒன்றும், சப் இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், அருள்மணி, தமிழ்வாணன் ஆகியோர் அடங்கிய டீமும் மகாலட்சுமி அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்தது.
வெங்கடேச பண்ணையார் வசித்த வீட்டின் கதவை பெப்சி முரளியை வைத்து தட்ட வைத்தனர் போலீசார். கதவை தட்டுவது போலீசாரா? என்ற சந்தேகத்துடன் கதவை இலேசாக திறந்தார் வெங்கடேச பண்ணையார். வெளியே பெப்சி முரளி நிற்பதைப் பார்த்ததும், அவருக்கு அருகில் டி.சி.கிருஷ்ணமூர்த்தி நிற்பதையும் பார்த்து, தன் நண்பர்கள்தான் வந்திருக்கிறார்கள் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு கதவை நன்றாக திறந்தார்.
அப்போது திடுதிடுவென்று போலீசார் ஓடிவருவதைப் பார்த்ததும் சுதாரித்துக் கொண்டு அவர்களை தாக்க முற்பட்டார் வெங்கடேச பண்ணையார். அதற்குள் போலீசாரின் துப்பாக்கிக் குண்டுகள் வெங்கடேச பண்ணையாரின் உடலை துளைத்துவிட்டன.
ஜெயலலிதாவுக்கு எதிராக முழக்கம்:
வெங்கடேச பண்ணையார் என்கவுன்டர் செய்யப்பட்ட தகவல் காட்டுத்தீயாக பரவியது. அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சென்னை கீழ்ப்பாக்கம் கே.எம்.சி. மருத்துவமனையில் ஆதரவாளர்கள் குவியத்தொடங்கினர். ஆறுமாத கர்ப்பிணியாக இருந்த மனைவி ராதிகா செல்வி கணவரின் உடலைப்பார்த்து கதறி அழுதார்.
வெங்கடேச பண்ணையாரின் ஆதரவாளர்கள் கோபம் மொத்தமும் அதிமுக பக்கம் திரும்பியது. அதிமுகவுக்கு எதிராகவும், ஜெயலலிதாவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
27.9.2003 அன்று 12.30 மணிக்கு வெங்கடேச பண்ணையாரின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆதரவாளர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். அங்கேயும் அதிமுக ஆட்சிக்கு எதிராகவும், ஜெயலலிதாவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
வெங்கடேச பண்ணையாரின் என்கவுண்டர் எதிரொலியாக கானகம் என்ற ஊரில் அரசு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்பட்டது. அசம்பாதவீதங்களை தவிர்க்கும் பொருட்டு, தாமதம் செய்யாமல் உடனடியாக இறுதிச்சடங்கு செய்யச்சொல்லி காவல்துறை அழுத்தம் கொடுத்ததால் அன்று மாலை 4 மணிக்கே வெங்கடேச பண்ணையாருக்கு சொந்தமான அவரது தோட்டத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
என்கவுன்டர் சர்ச்சை:
வெங்கடேச பண்ணையாரின் என்கவுன்டர் பல சர்ச்சைகளை ஏற்படுத்தின. அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரின் உடலில் 7 குண்டுகள் பாய்ந்திருந்தன என்றும், அந்த 7 குண்டுகளில் 6 குண்டுகள் உடலை துளைத்து வெளியேறி இருந்தன என்றும், ஒரு குண்டு மட்டும் முனை மழுங்கி உடலை விட்டு வெளியேறாமல் இருந்தது எனவும், ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று சுடப்பட்டதாகவும் இருந்தது.
போலீசாரை தாக்க முற்பட்டதால் வெங்கடேச பண்ணையார் மீது என்கவுன்டர் செய்ததாக சொல்லப்பட்ட நிலையில், போலீசாரை தாக்கியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அதனால் மரணத்தில் மர்மம் உள்ளது என்று வெங்கடேச பண்ணையார் ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராமன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிட்டார் ஜெயலலிதா. இதில் திருப்தி அடையாத வெங்கடேச பண்ணையார் ஆதரவாளர்கள், தேர்தலில் அதிமுகவுக்கு பதிலடி கொடுப்போம் என்று சபதம் எடுத்தனர்.

ராதிகா செல்வி சபதம்:
வெங்கடேச பண்ணையாரின் என்கவுன்டரால் தென் தமிழகத்து நாடார் சமூகம் அதிமுகவுக்கு எதிராக திரும்பியது. இந்த நிலையில்தான் அதிமுகவை பலிவாங்க துடித்துக்கொண்டிருந்த ராதிகா செல்வியை 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அன்றைய திருச்செந்தூர் தொகுதியில் களமிறக்கியது திமுக. வெங்கடேச பண்ணையார் தரப்பினரின் கோபம், நிச்சய வெற்றி என்பதை முன்கூட்டியே கணித்தது. எதிர்பார்த்தது மாதிரியே 1,81,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் ராதிகா செல்வி.
28 வயதில் எம்.பி. ஆன ராதிகா செல்வி, 31 வயதில் மத்திய இணை அமைச்சர் ஆனார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது, இணை உள்துறை அமைச்சரானார் ராதிகா செல்வி.
மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் சென்னை திரும்பிய ராதிகா செல்வி, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தன் கணவரின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று சபதம் எடுத்தார்.
தன் கணவர் வெங்கடேச பண்ணையாரின் என்கவுன்டர் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று 2005ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார் ராதிகா செல்வி. 2017ம் ஆண்டில்தான் அந்த மனு மீதான விசாரணை நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகமுத்து, அனிதா சுமந்த் அமர்வு, ’’சிபிஐ மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உகந்ததுதான் வெங்கடேச பண்ணையார் என்கவுன்டர் வழக்கு. ஆனால், காலதாமதம் ஆகிவிட்டதால், இப்போது விசாரிக்க உத்தரவிட்டால், அது விரைவான விசாரணை என்கிற அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக அமைந்துவிடும்’’ என்று சொல்லி, ராதிகா செல்வியின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
ஜெசிந்தா பாண்டியன் படுகொலை:
வெங்கடேச பண்ணையார் என்கவுன்டர் செய்யப்பட்டு விட்டதால் இனிமேல் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றுதான் நினைத்திருந்தது பசுபதி பாண்டியன் தரப்பு. ஆனால் பழிக்குப்பழி வேட்டை தொடர்ந்தது.
வெங்கடேச பண்ணையாரை என்கவுன்டர் செய்யச்சொல்லி காவல்துறைக்கு பசுபதி பாண்டியன் அழுத்தம் கொடுத்தார் என்ற பேச்சும் எழுந்தது. இதனால் சுபாஷ் பண்ணையாருக்கும் பசுபதி பாண்டியனுக்கும் இடையே நெருப்பு கனன்று கொண்டிருந்தது.
21.4.1993ம் ஆண்டிலேயே தூத்துக்குடியில் சுப்பையா முதலியார்புரத்தில் பசுபதி பாண்டியனை கொல்ல நடந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. அந்த முயற்சியில் பசுபதி பாண்டியன் நண்பர் பொன் இசக்கி பலியானார்.
இரு தரப்பிலும் உயிர்ப்பலிகள் அதிகரித்து வந்த நிலையில் நிலைமையை சமாளிக்க அப்போது தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆக இருந்த ஜாங்கிட், பசுபதி பாண்டியனை தூத்துக்குடியை விட்டு வெளியேறச் சொல்லி உத்தரவிட்டார். முதலில் ராமநாதபுரம் செல்ல திட்டமிட்டார் பசுபதி பாண்டியன். பின்னர் தன் மனைவி ஊர் திண்டுக்கல் என்பதால் அங்கு செல்வதாக முடிவெடுத்தார்.

திண்டுக்கல் சென்ற பசுபதி பாண்டியனை எக்காரணம் கொண்டும் தூத்துக்குடி பக்கம் வரவே கூடாது என்று எச்சரித்தார் ஜாங்கிட்.
பசுபதி பாண்டியனும் திண்டுக்கல் புறநகர்ப் பகுதி நந்தவனப்பட்டியிலேயே 7 ஆண்டுகளாக வசித்து வந்தார். வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகும்போது மட்டும் போலீசார் மற்றும் ஆதரவாளர்கள் துணையுடன் தூத்துக்குடி வந்து சென்றார். வழக்கறிஞர் பசுபதி பாண்டியன் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அவரது மனைவி ஜெசிந்தாவே ஆஜராகி வாதாடி வந்தார்.
நெல்லை , தூத்துக்குடி மாவட்டங்களில் பசுபதி பாண்டியன் மீது 9 கொலை வழக்குகள் உள்பட 18 வழக்குகள் இருந்தன. பசுபதி பாண்டியன் சிறையில் இருந்த காலங்களில் அவரது மனைவி ஜெசிந்தாவும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக தூத்துக்குடியில் வழக்கு இருந்தது.
அதிமுக தொழிற்சங்க பிரமுகர் பால்ராஜ் கொலைவழக்கில் 7.4.2006அன்று தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜராகுவதற்காக முதல்நாள் இரவே கோவில்பட்டி அடுத்த தெற்கு திட்டங்குளத்தில் தங்கியிருந்தார் பசுபதி பாண்டியன். மறுநாள் சிவப்பு நிற குவாலிஸ் காரில் மனைவி ஜெசிந்தாவுடன் சென்றார் பசுபதி பாண்டியன். காருக்கு 2 பைக்குகளில் 4 பேர் பைலட்டுகள் போல் சென்றார்கள். குவாலிஸ் காருக்கு பின்னே 2 சுமே கார்களில் ஆதரவாளர்கள் பின் தொடர்ந்து சென்றனர்.
எப்போதும் வென்றான் கிராமத்திற்கு முன்பே குறுகிய பாலத்தை கடக்கும்போது, பாலத்தின் குறுக்கே லாரி ஒன்று நின்றிருந்தது. ஏன் இப்படி லாரி குறுக்காக நிற்கிறது? யோசித்திருந்த நேரத்தில் லாரிக்கு பின்னே 2 சுமோ கார்கள் சீறீப்பாய்ந்து வந்து நின்றன. அதிலிருந்து இறங்கிய ஆட்கள் வெடிகுண்டுகள் வீசியதில் முன்னே பைக்கில் இருந்த 4 பேரும் படுகாயமடைந்தனர். சுதாரித்துக் கொண்டு குவாலில் காரை உடனே திருப்ப முடியாததால், காரில் இருந்து இறங்கி ஓடி பின்னே நின்றிருந்த ஆதரவாளர்கள் சுமோவில் ஏறி தப்பித்துச் சென்று எட்டயபுரம் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்து விட்டார் பசுபதி பாண்டியன்.
சரமாரியாக வீசப்பட்ட வெடிகுண்டுகளில், சுடப்பட்ட துப்பாக்கி தோட்டாக்களில் சிக்கி பசுபதி பாண்டியன் மனைவி ஜெசிந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பெண் என்பதால் இரக்கப்பட்டு மனைவியை கொல்ல மாட்டார்கள் என்கிற நினைப்பில் அவரை காரிலேயே விட்டுவிட்டு தப்பியதாகவும், ஆனால், பாவிகள் அவரை கொன்று தீர்த்துவிட்டனர் என்று எட்டயபுரம் காவல்நிலைய வாசலில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆத்திரப்பட்டார் பசுபதி பாண்டியன்.
பசுபதி பாண்டியன் படுகொலை:
1993ம் ஆண்டில் இருந்தே பசுபதி பாண்டியனை கொலை செய்ய பண்ணையார் தரப்பு முயன்று வந்ததில், 2012ம் ஆண்டில்தான் அவர்களது முயற்சி கைகூடியது.
10.1.2012ல் திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப் பட்டியில் இரவு 8.30 மணியளவில் வீட்டிற்குள் இருந்த பசுபதி பாண்டியனுக்கு செல்போனில் அழைப்பு வர, எடுத்துப் பேசினார். எதிர்முனையில் பேசிய நிர்மலா தேவி, ’’சிக்னல் சரியா இல்லையே? குரல் சரியா கேட்கலையே’’ என்று சொல்ல, அவர் பேசிக்கொண்டே வீட்டை விட்டு வாசலுக்கு வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த ஆறுமுகசாமி, நாற்காலியை இழுத்துப்போட்டு, ’’உட்கார்ந்து பேசுங்க அண்ணே’’ என்று சொன்னார். அவர் பேசிக்கொண்டே நாற்காலியில் உட்கார்ந்ததும், பின்னால் இருந்து கத்தியால் கழுத்தில் குத்தினார் ஆறுமுகசாமி. அதன் பின்னர் சட்டை அணியாமல் மின்னல் வேகத்தில் ஓடிவந்தார்கள் ஆறுமுகசாமியுடன் வந்தவர்கள். அவர்கள் பசுபதி பாண்டியனை சரமாரியாக வெட்டிக்கொன்று வெடிகுண்டுகளையும் வீசிச்சென்றனர்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது வழக்கறிஞரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், சம்பவம் இப்படித்தான் நடந்தது என்று வாக்குமூலம் அளித்திருந்தார்கள் பசுபதி பாண்டியன் கொலையாளிகள்.

அரிவாள், கத்தியால் சரமாரியாக் வெட்டியதில் பசுபதி பாண்டியன் உடலில் மொத்தம் 13 இடங்களில் ஆழமான வெட்டுக்காயம் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் பதிவானது.
கொலை செய்வதற்காக வாடகை சைக்கிளில் வந்தவர்கள், கொலை செய்த பின்னர் அவ்வழியாகச் சென்ற லாரியில் ஏறி கரூருக்கு தப்பினர். கரூருக்கு சென்றதும் ஆளுக்கொரு திசையில் பிரிந்து சென்றுவிட்டனர் என்பது பின்னர் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
பசுபதி பாண்டியன் படுகொலையினால் தென் மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டது. கடையடைப்பு, கல்வீச்சு, வன்முறை சம்பவங்களால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. 11.1.2012 அன்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் இரவு 8.30 மணியளவில் அலங்கார திட்டைக்கு பசுபதி பாண்டியன் உடல் கொண்டு செல்லப்பட்டது. மனைவி ஜெசிந்தாவின் கல்லறைக்கு அருகே பசுபதி பாண்டியன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கையை இழந்த சுபாஷ் பண்ணையார்:
வெங்கடேச பண்ணையார் என்கவுன்டருக்கு பிறகு சுபாஷ் பண்ணையார் அந்த இடத்திற்கு வந்தார்.
பசுபதி பாண்டியனால் தங்கள் தரப்பின் இழப்புகளை நினைத்துப் பார்த்த சுபாஷ் பண்ணையார் கோஷ்டி, அதற்காக பசுபதி பாண்டியனை பழி வாங்கத் துடித்தது. இதற்காக பசுபதி பாண்டியனை கொல்ல வெடிகுண்டுகள் தயாரித்தபோது எதிர்பாராமல் அவை வெடித்ததில் சுபாஷ் பண்ணையாரின் கை துண்டாகிவிட்டது. பிளாஸ்டிக் கையோடு வலம் வந்தாலும் பசுபதி பாண்டியனை கொல்லும் பகை நெருப்பு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.
நாகர்கோவில் சிறைக்குள்ளேயே சென்று சிறையில் இருந்த லிங்கத்தின் தலையை வெட்டி எடுத்து வந்து நாகர்கோவில் பஸ்டாண்டில் போட்ட சம்பவம் தமிழ்நாட்டின் கிரைம் வரலாற்றில் முதல் சம்பவம். இதற்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த ’தாத்தா’ செந்திலை தங்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுக்க வைத்திருந்தார் சுபாஷ் பண்ணையார் .
19 ஆண்டுகள் தீராப்பகையின் காரணமாக 2012ல் பசுபதி பாண்டியனை பலி தீர்த்தது பண்ணையார் தரப்பு. சுபாஷ் பண்ணையாரின் தூண்டுதலில்தான் பசுபதி பாண்டியன் கொலை நடந்தது என்று திண்டுக்கல் மாவட்ட எஸ்.பியாக இருந்த ஜெயச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

ஆறுமுகசாமி தலை துண்டிப்பு:
சுபாஷ் பண்ணையாரை பலி தீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர் பசுபதி பாண்டியன் தரப்பினர். 8.3.2016 அன்று காலையில் பழையகாயல் சர்வோதயபுரியில் உள்ள தனது தென்னந்தோப்பில் இருந்தார் சுபாஷ் பண்ணையார். அப்போது 10 பைக்குகள் மற்றும் ஒரு காரில் வந்த 20க்கும் மேற்பட்ட கும்பல் சுபாஷ் பண்ணையாரை சுத்துப்போட்டது. சுபாஷ் பண்ணையார் மீதும் தோட்டத்தில் அவருடன் இருந்தவர்கள் மீது நாட்டு வெடி குண்டுகளை சரமாரியாக வீசினார்கள். இந்த தாக்குதலில் சுபாஷ் பண்ணையார் அங்கிருந்து தப்பித்துவிட்டார். தவனை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமியும், பழையகாயலைச் சேர்ந்த சவரத் தொழிலாளி கண்ணனும் சிக்கிக்கொண்டனர். இருவரையும் அரிவாளால் வெட்டி, நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்தது கும்பல்.
அந்த இரண்டு பேரில் ஆறுமுகசாமி என்பவர் சுபாஷ் பண்ணையாரின் நெருங்கிய கூட்டாளி என்பதாலும், பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதாலும் அவரது தலையை துண்டித்த கும்பல், அங்கிருந்து 35 கிலோ மீட்டர் தூரம் தலையை எடுத்துச்சென்று, தெய்வசெயல் கிராமத்தில் உள்ள பசுபதி பாண்டியனின் கொடி கம்பத்திற்கு கீழ் வைத்துவிட்டு சென்றது.
இதற்கு பழிக்குப் பழியாகவே பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் கண்ணபிரான், குமுளி ராஜ்குமார், தீபக் ராஜா, சிங்காரத்திற்கு குறிவைத்தது பண்ணையார் தரப்பு.

தொடரும் பழிக்குப் பழி கொலைகள்:
பசுபதி பாண்டியன் கொலையோடு பழிக்குப் பழி கொலைகள் முடிந்துவிடும் என்று பார்த்தால் தொடர் கதையானதுதான் சோகம்.
பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்குப் பழியாக தீபக் ராஜாவுடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் பழைய காயல் அருகே 2 பேரையும், ராஜபாளையத்தில் 2 பேரையும் கொலை செய்த வழக்கில் கைதாகி பரபரப்பை ஏற்படுத்தியவர் திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவரான கண்ணபிரான்.

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோழி அருள். நீதிமன்றத்தில் சரணடைந்த இவரை காவல் நிலைய வாசலிலேயே வைத்து வெட்டிக்கொல்ல பசுபதி பாண்டியன் தரப்பு முயற்சிக்க அதிலிருந்து தப்பினார். லாரி டிரைவராக பல மாநிலங்களில் தலைமறைவாக சுற்றிக்கொண்டே, செல்போன் மூலம் மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து வந்த கோழி அருள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த போது 2025ம் ஆண்டில் கையும் களவுமாக போலீசிடம் பிடிபட்டார்.
பாம் கண்ணன், காயல் பாலகிருஷ்ணன், அரிஸ்டாட்டில், பொன்.இசக்கி, சிங்காரம் என்று பசுபதி பாண்டியன் தரப்பை பழிக்குப் பழி தீர்த்தனர் பண்ணையார் தரப்பினர். இதற்கு பழிவாங்க, ஆறுமுகசாமி, அய்யாக்குட்டி உள்ளிட்டோரை கொன்றார்கள் பசுபதி பாண்டியன் தரப்பினர்.
பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டதில் 3வது குற்றவாளியான ‘புறா’மாடசாமி ராஜபாளையத்தில் படுகொலை செய்யப்பட்டார். சொக்கநாதபுரம் பாட்சா, சுரண்டை ஆறுமுகசாமி படுகொலை செய்யப்பட்டனர். 13வது குற்றவாளியான முத்துப்பாண்டியன், 15.4.2014ல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல் ஒன்றியத்தில் 18வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்த முத்துப்பாண்டியன் மீது பசுபதி பாண்டியன் கொலை வழக்கு, பெரியசாமி கொலை வழக்கு உள்பட 13 வழக்குகள் இருந்தன. என்கவுன்டருக்கு பயந்து சில காலம் தலைமறைவாக இருந்தார். எப்போதும் கூட்டாளிகளுடனேயே வலம் வந்தார்.
அப்படித்தான் தன் சகாக்களுடன் பவுர்ணமி அன்று மதுரை அழகர்கோவிலுக்கு ஜீப்பில் சென்றார் முத்துப்பாண்டியன். அங்கே அவரை பலி வாங்க காத்திருந்தது கும்பல்.
18ம் படி கருப்பணசாமி சன்னதிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அதிகாலையில் பக்தர்கள் அரிவாளுடன் சாமியாடுவது வழக்கம். சிவன் கோயில் முன்பாகவும், தெப்பக்குளத்தின் முன்பாகவு அரிவாளுடன் சாமியாடுவார்கள். இதை கும்பல் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. பக்தர்களுடன் கலந்து கொலைவெறி கும்பலும் சாமியாடிக் கொண்டிருந்தது.
அதிகாலை 5.30 மணி அளவில் அழகர் கோயில் சன்னதி முன்பாக முத்துப்பாண்டியனின் ஜீப் வந்து நின்றது. மகுடேஸ்வரன் என்பவர் ஜீப்பில் இருந்து இறங்கி கோவிலுக்குள் தண்ணீர் பிடிக்கச் சென்றார். முத்துப்பாண்டியன் உள்ளிட 4 பேர் ஜீப்பிலேயே அமர்ந்திருந்தனர்.
அப்போது அரிவாளுடன் சாமியாடிக் கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஒருந்து ஓடிவந்த ஒரு கும்பல் ஜீப்புக்குள் ஆவேசமாக நுழைந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் முத்துப்பாண்டியனுக்கு முதுகில் 4 வெட்டுகள் விழுந்தன. அதோடு அவர் ஜீப்பில் இருந்து குதித்து ஓடியபோது ஓடி வந்து தலையில் வெட்டினர். இதில் ஓடிக்கொண்டிருந்த முத்துப்பாண்டியன் தலையின் ஒருபக்கம் பிளந்து சரிந்தது. இதில் நிலைதடுமாறி விழுந்த முத்துப்பாண்டியன் உயிரிழந்தார்.
நிர்மலா தேவி தலை துண்டிப்பு:
பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் நந்தவனம்பட்டியைச் சேர்ந்த 60 வயது நிர்மலாதேவி. 2012ல் நடந்த பசுபதி பாண்டியன் படுகொலைக்கு 9 ஆண்டுகள் காத்திருந்து 2021ல் நிர்மலாதேவியை பழிக்குப் பழி வாங்கினர் பசுபதி பாண்டியன் தரப்பினர்.
திண்டுக்கல் இ.பி. காலனி பகுதியில் காலை 10 மணி அளவில் 100 நாள் வேலை திட்டத்தில் கால்வாய் தூர்வாரும் பணியில் பெண்களுடன் பேசிக்கொண்டிருந்த நிர்மலா தேவியை கொன்று அவரது தலையை துண்டித்து, ரத்தம் சொட்டச் சொட்ட பைக்கில் எடுத்துச்சென்று நந்தவனம் பட்டியில் உள்ள பசுபதி பாண்டியன் வீட்டு வாசலில் அவரை கொலை செய்த இடத்தில் போட்டுவிட்டு சென்றனர் கொலையாளிகள்.
பசுபதி பாண்டியனைக் கொன்ற கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காகவும், சம்பவத்தன்று பசுபதி பாண்டியனிடம் செல்போனில் பேசி அவரை வீட்டை விட்டு வெளியே வர வைத்ததற்காகவும் கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்று கூறி அவரை பழிக்குப் பழி தீர்த்தனர்.

சிங்காரம் கொலை:
பசுபதி பாண்டியன் கோஷ்டியின் கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டு வந்தவர் சிங்காரம். கொலைகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பவர் சிங்காரம். தூத்துக்குடி மாவட்டம் புல்லாவெளியைச் சேர்ந்த இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, தகராறு என்று தூத்துக்குடி மாவட்டத்தில் 9 வழக்குகள் இருந்தன.
தெற்கு சிவந்த கதைக்கு மூலமாக இருந்தது அசுபதி பண்ணையார் கொலை. அந்த அசுபதி பண்ணையார் கொலையில் சம்பந்தப்பட்டு மிச்சமிருந்த ஒரே நபர் சிங்காரம்தான். உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் சிங்காரத்தை சிறையிலேயே இருக்கும்படி போலீசார் பார்த்துக்கொண்டனர். போலீசாரால் தாக்கப்பட்டதில் இவரின் கால் உடைந்தது. இதனால் கம்பு உதவி இல்லாமல் இவரால் நடக்க முடியாது. அப்படி இருந்தும் அவர் கொல்லப்பட்டார்.
2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி அன்று திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சிங்காரத்தை ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றபோது மிளகாய் பொடி கலந்த தண்ணீரை ஊற்றி சிங்காரத்தை கொலை செய்ய முயன்றனர். இந்த சம்பவத்தில் போலீசார் சிங்காரத்தை காப்பாற்றினர். திருச்செந்தூரில் தப்பியவர் நெல்லையில் சிக்கினார்.

2017ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 24ம் தேதி அன்று பாளையங்கோட்டை சிறையில் இருந்து தூத்துக்குடி 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது பாளையங்கோட்டை கேடிசி நகர் நான்கு வழி சாலையில் போலீஸ் ஜீப்பை, 3 கார்கள் மற்றும் மினிலாரியில் வந்த கும்பல் வழிமறித்து மிளகாய் பொடி கரைசலை ஊற்றி, போலீஸ் ஜீப்புக்குள் இருந்த சிங்காரத்தை வெளியே இழுத்துப்போட்டு சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிங்காரம் உயிரிழந்தார்.
நீதிமன்ற விசாரணையில் கொலைகும்பல் வீசியது மிளகாய் பொடி அல்ல, அது செங்கல் தூள் என்று எதிர்தரப்பு குற்றம்சாட்டியது. சிங்காரம் கொலைக்கு போலீசாரே உடந்தையாக இருந்தார்கள் என்றும் எதிர்தரப்பு குற்றம்சாட்டியது.

சிங்காரம்(47) கொலை வழக்கில்13 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த சுபாஷ் பண்ணையார் நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார். சிங்காரமும் சுபாஷ் பண்ணையாரும் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள்தான். ஆனால் புல்லாவெளி சம்பவத்தால் வந்த தீராப்பகை இருவரையும் எதிரிகளாக்கியது.
சிங்காரம் கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையாருக்கு தொடர்ப்பிருப்பதாக போலீசார் சந்தேகித்ததால் அவரை தேடினர். அவர் தலைமறைவாகி விட்டதால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம். இதனால் மும்பை, கேரளா சென்று சுபாஷ் பண்ணையாரை தனிப்படை போலீசார் தேடினர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தார் சுபாஷ் பண்ணையார்.

தீபக்ராஜா கொலை:
சிங்காரம் கொலையோடு பகைவேட்டை முடியவில்லை. 2016ம் ஆண்டில் சுபாஷ் பண்ணையாரை தென்னந்தோப்பில் கொல்ல முயன்ற கும்பலில் இருந்த பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர் தீபக்ராஜா, கடந்த 2024ம் ஆண்டில் மே மாதம் 20ம் தேதி அன்று வெட்டிக் கொல்லப்பட்டார்.
தென்னந்தோப்பில் நடந்த அட்டாக்கில் சுபாஷ் பண்ணையார் அன்றைக்கு உயிர் தப்பினாலும் அவருடன் இருந்த ஆறுமுகசாமியும் கண்ணனும் வெட்டிக்கொல்லப்பட்டனர். இந்த இரட்டை கொலை வழக்கில் தீபக் ராஜாவின் பெயர் சேர்க்கப் பட்டிருந்தது. மேலும், கொலை, கொலை முயற்சி, அடிதடி என்று தீபக் ராஜா மீது 23 வழக்குகள் நிலுவையில் இருந்தன. நெல்லை, தூத்துக்குடியை தாண்டி தஞ்சாவூரிலும் இவர் மீது வழக்குகள் இருந்தன.

எதிர்ப்புகளால் எப்போதும் கைத்துப்பாக்கியுடன் முகத்தை மறைத்துக் கொண்டு வெளியே சென்று வந்த தீபக் ராஜா, சம்பவத்தன்று காதலியை சட்டக்கல்லூரியில் காரில் அழைத்துச் சென்று விட்டுவிட்டு, மதியம் இடைவேளை வரை கல்லூரி வளாகத்திலேயே காத்திருந்து காதலியையும் அவரது தோழிகள் இருவரையும் காரில் அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை கேசிடி நகரில் உள்ள பிரபல ஓட்டலுக்குச் சென்றார். அங்கு சாப்பிட்டுவிட்டு காரை எடுக்க வெளியே வந்த தீபக்ராஜாவை 6 பேர் கொண்ட கும்பல் சுத்துப்போட்டது. அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய தீபக்ராஜா காரில் இடறி கீழே விழ, அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு காரில் தப்பியது கும்பல். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் தீபக்ராஜா.

சுபாஷ் பண்ணையாருக்கு குறி:
2024ம் ஆண்டில் ஜூன் மாதம் 17ம் தேதி அன்று பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளிகள் சென்றனர். திண்டுக்கல் அருகே கமலாபுரம் பிரிவு சாலையில் இவர்களின் கார்கள் கடந்து சென்ற பின்னர் இவர்கள் வந்த கார் என்று நினைத்து சுமோ கார் மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். அந்த சுமோ நிற்காமல் சென்று தப்பியது. சத்தம் கேட்டு டிப்பர் லாரி, பைக்குகளில் அரிவாள், கத்தி, வெடிகுண்டுகளுடன் வந்திருந்த பசுபதி பாண்டியன் கூட்டாளிகளை விரட்டிச் சென்றனர் போலீசார். பிடிபட்டவர்களில் 3 பேர் கொடுத்த வாக்குமூலத்தில், ’’சுபாஷ் பண்ணையாருக்குத்தான் குறி வைத்தோம். குறி தப்பிவிட்டது’’ என்று கூறியிருந்தார்கள்.
தெற்கின் குரல்:
தீபக்ராஜாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 3 ஆயிரம் இளைஞர்களும் தாங்கள் ஒவ்வொருவரும் பசுபதி பாண்டியனாக மாறுவோம் என்று உரக்க குரல் கொடுத்தது தென் தமிழகத்தை அதிர்ச்சி அடைய வைத்தது. மறுபடியும் முதலில் இருந்து தொடங்குகிறதா? என்ற கவலையைத் தந்தது. சுபாஷ் பண்ணையாரை கொல்லவும் குறி வைத்துக் கொண்டிருப்பதால் பழிக்குப் பழி மரணங்களுக்கு முடிவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.
ஆனாலும், தீபக் ராஜாவின் கொலைதான் இரு சமூகத்திற்கு இடையேயான பகையின் கடைசிக் கொலையாக இருக்க வேண்டும் என்றே இரு தரப்பில் இருந்தும் சில குரல்கள் எழுகின்றன. அதுவே தெற்கின் குரலாகவும் ஒலிக்கிறது.
