1948-ம் ஆண்டு மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் செய்யப்பட்டு மனித உரிமைகள் பாதுகாக்கும் வகையில் இனப்படுகொலையைத் தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கைகள் ஐ.நா சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் ஆட்சிக்கு வந்த தென்னாப்பிரிக்கத் தேசிய கட்சி நிறவெறியை அமல்படுத்தியதும், இஸ்ரேலியப் படைகள் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை வன்முறை (நக்பா) மூலம் வெளியேற்றியதும் அதே 1948-ம் ஆண்டில் தான். இரண்டு அமைப்புகளும் மேற்கத்தியக் காலனித்துவ ஆதரவை அப்போது நம்பியிருந்தன.
75 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அமெரிக்காவின் தலைமையிலான சக்திவாய்ந்த மேற்கத்திய அரசாங்கங்களின் உடந்தையுடன், இஸ்ரேல் கடந்த பல மாதங்களாக காசாவில் திட்டமிட்டு இன சுத்திகரிப்பு செய்து வருவதை உலகம் அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறது.
பல தசாப்தங்களாக இஸ்ரேலின் பயங்கரங்கள் எந்தத் தடையும் இன்றி, மேலும் அதீத வன்முறைக்கு உணவளித்து வந்தன. தென்னாப்பிரிக்காவில் 1988-ம் ஆண்டு நிறவெறி அகற்றப்பட்டு தற்போது ஏறக்குறைய 30 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலுக்குச் சவால் விடுவதில் இந்த முறை பிற உலக நாடுகளை விஞ்சி முன்னணியில் உள்ளது.
இஸ்ரேல் உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா, போரை நிறுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இறங்கி செயல்பட்டு வருகிறது.
தென்னாப்பிரிக்காவின் வழக்கு
கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 29 அன்று, முதல் நாடாக ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதித்துறைப் பிரிவான சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice), பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் இனப்படுகொலைக்கு எதிராகத் தென்னாப்பிரிக்கா வழக்குத் தொடர்ந்தது.
தென்னாப்பிரிக்காவின் 84-பக்க வழக்கு ஆவணம் இஸ்ரேலிய நடவடிக்கைகளின் வன்முறைகளை விவரித்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
“பாலஸ்தீனிய தேசிய இனத்தை அழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களை அழித்து ஒழித்து வருகிறது” எனத் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த வழக்கு ஆவணத்தில் இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 7 துவங்கி இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால், இதுவரை காசாவில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் பெரும்பான்மையானோர் குழந்தைகள் மற்றும் பெண்களாகும்.
இன்றும் இஸ்ரேலின் கொடுமைகள் தொடர்ந்து வரும் சூழலில் பட்டினி பிடியில் சிக்கி பாலஸ்தீன மக்கள் உதவியின்றி தவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று (ஜனவரி 11) தொடங்கி, சர்வதேச நீதிமன்றத்தில் இரு நாட்கள் விசாரணைக்கு வருகிறது.
தென் ஆப்பிரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு வெனிசுவேலா, மலேசியா, பிரேசில், துருக்கி, ஜோர்டான், மாலதீவுகள், நமீபியா, பாகிஸ்தான், பொலீவியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த வழக்கு குறித்து தனது நிலைப்பாட்டை இந்தியா இதுவரை வெளிப்படுத்தவில்லை.
சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice)
ஐ.நா பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றால் ஒன்பது வருட காலத்திற்கு 15 நீதிபதிகள் கொண்ட அமர்வு சர்வதேச நீதிமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள். இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டால், சர்வதேச நீதிமன்றத்து அமர்வில் தங்கள் நாட்டவரைத் தற்காலிக நீதிபதியாக நியமிக்கலாம்.
இந்நிலையில், தற்காலிக நீதிபதிகளாகத் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் துணைத் தலைமை நீதிபதி டிக்காங் மொசெனெகேவும், ஓய்வு பெற்ற இஸ்ரேல் உச்சநீதிமன்ற தலைவர் அஹரோன் பராக்கை இஸ்ரேலும் நியமித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா 1998-ம் ஆண்டு முதலும், இஸ்ரேல் 1951-ம் ஆண்டு முதலும் இனப்படுகொலையைத் தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கைகளை ஏற்றுக்கொண்ட உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த உடன்படிக்கையில் இந்தியா உட்பட 137 நாடுகள் இதுவரை ஏற்றுக்கொண்டுள்ளன.
Published by அசோக் முருகன்