தமிழ்நாட்டில் சமீபத்தில் முடிவடைந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் (GIM), உலகம் முழுவதிலும் இருந்து தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீடுகள் பெரும் அளவில் ஈர்க்கப்பட்டது.
குறிப்பாக மின் வாகன உற்பத்தித் துறையில் கணிசமான முதலீடுகளை குவித்ததன் மூலம், தமிழ்நாடு சுமார் 6.6 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று சாதித்துள்ளது.
ஏற்கனவே வாகன உற்பத்திக்கான மையமாக பார்க்கப்படும் சென்னை ‘ஆசியாவின் டெட்ராய்ட்’ (Detroit of Asia) என்று அழைக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு மெதுவாக இந்தியாவின் மின் வாகன உற்பத்தித் தலைநகராக மாறி வருகிறது.
இந்தியா முழுவதிலும் கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மின் வாகனங்களில் சுமார் 40%, தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டதாகும். இந்தியாவில் கடந்தாண்டு விற்பனை செய்யப்பட்ட 10 லட்சம் மின் வாகனங்களில், 4 லட்சத்துக்கும் அதிகமானவை தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை.
இந்தியாவில் விற்கப்படும் அனைத்து இரு சக்கர மின் வாகனங்களில், தமிழ் நாட்டின் பங்கு சுமார் 68 சதவீதமாக இருந்து வருகிறது.
மாநிலத்தில் தற்போதுள்ள மின் வாகன தொழிற்சாலைகளுடன் சேர்த்து, சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல புதிய முதலீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வியட்நாமிய எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான VinFast, தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலையை அமைக்க 16000 கோடி ரூபாய்($2 பில்லியன்) முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது.
தூத்துக்குடியில் முதல் கட்டமாக $500 மில்லியன் முதலீட்டில் இந்த ஆண்டே தொழிற்சாலை கட்டுமானத்தைத் தொடங்க VinFast திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 1,50,000 மின் வாகங்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.
Elon Musk-ன் Tesla நிறுவனத்துடன் உலகளவில் போட்டிப்போடும் VinFast நிறுவனம், தமிழ் நாட்டில் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ள நிலையில், Tesla நிறுவனம் குஜராத்தை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Hyundai மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ் நாட்டில் மின் வாகன உற்பத்தி ஆலையை அமைக்க ₹6180 கோடி முதலீடு செய்ய உள்ளது. மேலும், அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழ் நாட்டில் ₹20,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் Hyundai நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு, Ola எலக்ட்ரிக் நிறுவனம் தமிழ் நாட்டில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய மின் வாகன தொழிற்சாலையை அமைக்க 7600 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது.
இரு சக்கர மின் வாகன உற்பத்தி நிறுவனமான Ather Energy, ஏற்கனவே ஓசூரில் இரண்டு ஆலைகளைக் கொண்டுள்ளது. அந்த ஆலைகளை மேலும் விரிவாக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பொருளாதார அறிக்கையின்படி, தமிழ்நாடு தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% ஆட்டோமொபைல் துறையில் இருந்து ஈட்டுகிறது.
Ford மற்றும் Mahindra நிறுவனங்கள் இணைந்து முதன் முதலாக சென்னைக்கு அருகில் கார் உற்பத்தி ஆலையை அமைத்தன. அப்போதிருந்து, தமிழ்நாட்டில் வாகன உற்பத்தித் துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலைகளை அமைக்க தொடங்கின.
மின் வாகன உற்பத்தியில் தமிழ் நாடு ஏற்கனவே இந்திய அளவில் முதன்மையான இடத்தில் உள்ள நிலையில், தற்போதைய மத்திய அரசின் முழு உதவியோடு குஜராத் மாநிலம் அந்த இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by அசோக் முருகன்