பண்டிகை நாளிலோ, பந்த் நடக்கும்போதோ சென்னையின் பேருந்து முனையத்திலும் ரயில் நிலையங்களிலும் மக்கள் எந்தளவுக்கு கூட்டமாக நிற்பார்களோ அதைவிட அதிகமானக் கூட்டத்தை சென்னை விமான நிலையத்தில் கடந்த வார இறுதியில் காண முடிந்தது. சென்னையில் மட்டுமல்ல, இந்தியாவின் பல விமான நிலையங்களிலும் அதே நிலைதான். என்ன காரணம்? குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய பிறகு விமான போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டிற்கான விதிகளை மத்திய அரசின் இந்திய விமானப் பொது போக்குவரத்து இயக்ககம் (DGCA ) கடந்த நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்திய விமான போக்குவரத்து துறையில் சுமார் 64 % பங்குகளை வைத்திருக்க கூடிய இண்டிகோ தனியார் விமான நிறுவனம், மத்திய அரசுக்கு நெருக்கடி உருவாக்கும் வகையில், தன்னிடம் டிக்கெட் வாங்கிய பயணிகளை வாட்டி வதைத்தது. இதற்காகவே ஒரு செயற்கை நெருக்கடியை உண்டாக்கி, விமான சர்வீஸ்களை ரத்து செய்தது. இதன் காரணமாகத்தான் விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. எந்தவித முன்னறிவிப்புமின்றி விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்ததால், மருத்துவ காரணங்களுக்காகவும், வணிகச் சூழலுக்காகவும், பணச் செலவைவிட நேர மேலாண்மையை முதன்மையாக கருதுவோரும் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். இன்றைய நிலையில், பணக்காரர்கள் பறக்கும் விமானங்கள் பலவும் நடுத்தர மக்களின் அவரவர் துறை சார்ந்த பயணங்களுக்குரியதாக உள்ளது. அதனால்தான் விமானநிலையத்தில் குவிந்து, தங்களின் பயணம் குறித்தும், டிக்கெட் பணம் குறித்தும் கேள்விகளை எழுப்பினார்கள். திருமண வரவேற்புக்காக புவனேஸ்வரிலிருந்து பெங்களூரு வர வேண்டிய ஜோடி, விமானம் ரத்தானதால் வீடியோ கான்ஃபரன்ஸில் மணமக்கள் பங்கேற்க வேண்டியதாயிற்று. அவசர மருத்துவ சிகிச்சைக்காக மனைவியை அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர், என்ன செய்வதென்று தெரியாமல் அழுது கொண்டே இருந்தார். இந்த சூழலை வைத்து மற்ற விமான நிறுவனங்கள் பல மடங்கு விலையில் டிக்கெட் விற்பனை பார்த்த வணிக அவலமும் நடந்தது.. இண்டிகோ நிறுவனத்திடம் 2200 உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் உள்ளன. ஏர்இந்தியா மகாராஜாவை மத்திய பா.ஜ.க. அரசு தனியாரிடம் விற்றபிறகு, இண்டிகோதான் இந்திய விமானத்துறையின் மகாராஜா. இண்டிகோவின் கட்டளையே சாசனம் என்றாகிவிட்டது. அரசாங்கத்திடம் விமான சேவை இருந்திருந்தால், அவசரத் தேவைகளுக்காக பயணிக்கக் காத்திருந்தவர்களுக்கு வழி கிடைத்திருக்கும். இண்டிகோ நிறுவனத்துடன் பேசி, உரிய ஏற்பாடுகளை செய்திருக்க முடியும். அதற்கு மாறாக, மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்த விமானப் பணியாளர்கள் நேரம் தொடர்பான புதிய விதிகளை புதிய விதிகளை அமல்படுத்த போதிய அவகாசம் கொடுக்க வில்லை என்றும், புதிய விதிகளை பின்பற்ற போதிய விமான பணியாளர்கள் இல்லை என்ற காரணங்களை கூறி விமான சேவைகளை ரத்து செய்துள்ளது இண்டிகோ நிறுவனம் . அத்துடன், மோசமான வானிலை, தொழில் நுட்ப கோளாறு போன்றவற்றையும் காரணங்களாக இண்டிகோ கூறுகிறது. மற்ற விமான நிறுவனங்களும் இந்த குளிர்காலத்தில் வானத்தில் பறக்கத்தான் செய்கின்றன. அவற்றுக்கு ஏற்படாத தொழில்நுட்ப சிக்கல்களை இண்டிகோ முன்வைப்பதற்கு காரணம், இந்திய விமானத்துறையில் அதற்குள்ள ஏகபோகம்தான். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறுகிற நேரம் இது. விமானத்துறையில் ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு பா.ஜ.க. அரசு விட்டுக்கொடுத்துள்ள ஏகபோகம்தான் விமானப் பயணத்தை நம்பி அதிகக் கட்டணத்தில் டிக்கெட் எடுத்த பயணிகளை அல்லல்பட வைத்திருக்கறிது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார். இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை நிறுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து காங்கிரஸ் எம்பி ப்ரமோத் திவாரி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கும், சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி விதி 180 கீழ் விவாதிக்க கொடுத்த நோட்டீஸிற்கும் வெளிப்படைத் தன்மையுடனான பதிலை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. விமான நிறுவனங்கள் தனியாரிடம் இருந்தாலும் வான்வெளி என்பது அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த புதிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்தியப் பயணிகளையும் வெளிநாட்டுப் பயணிகளையும் பரிதவிக்க வைத்த இண்டிகோ நிறுவனத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, புதிய விதிகளை திரும்ப பெறுவதாக DGCA அறிவித்துள்ளது. தனியார் நிறுவனத்திடம் மத்திய பா.ஜ.க அரசு சரணடைந்துவிட்டதா? அல்லது வேறு மறைமுக காரணங்கள் இருக்கின்றனவா?
