நாட்டை அதிர வைத்த கேரள நடிகை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் (Kerala Actress Assualt Case), முக்கிய திருப்பமாக எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்த இந்த வழக்கில், நடிகர் திலீப் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் தெரிவித்ததால் அவர் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தீர்ப்பு வெளியான நேரத்தில் திலீப் உட்பட இந்த வழக்கில் பெயர் சேர்க்கப்பட்ட 10 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தனர்.
6 பேருக்கு குற்றம் நிரூபிப்பு
இதே நேரத்தில், பல்சர் சுனில், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஸ், சலீம், பரதீப் என மொத்தம் 6 பேரின் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு தண்டனை எவ்வளவு என்பதை வரும் டிசம்பர் 12ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
ஏன் விடுதலை
இந்த வழக்கில் திலீப் 8வது பிரதிவாதியாக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு சம்பவத்துடன் தொடர்பு உள்ளதாக போலீசார் முன்பு குற்றஞ்சாட்டியிருந்தாலும், விசாரணை மற்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில் திலீப்பை குற்றம் நிரூபிப்பதற்கான தகுதியான சாட்சிகள் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.இதன் அடிப்படையில் பல வருடங்களாக நீதிமன்றத்தைக் கடந்து வந்த நடிகர் திலீப் இவ்வழக்கில் இருந்து முற்றிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தண்டனை நாள் எதிரொலி
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 6 பேருக்கான தண்டனை அளவு குறித்து அடுத்த வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு கேரள திரையுலகிலும் பொதுமக்களிடையிலும் பெரிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.
