எல்லைப் பிரச்சினை (Border issue)காரணமாக தாய்லாந்து – கம்போடியா நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதால் இருநாடுகளுக்கும் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்னை
நூற்றாண்டு பழமையான எல்லைப் பிரச்னையும், குறிப்பாக பிரசாக் தா மோன் தோன் என்ற இந்து கோவில் அமைந்துள்ள பகுதி குறித்த உரிமை கோரலும்தான் தாய்லாந்து-கம்போடியா நாடுகளுக்கு இடையேயான முக்கியப் பிரச்னையாக அமைகிறது.

எல்லைப்பகுதியில் வெடித்த ராணுவ மோதல்
இது அடிக்கடி ராணுவ மோதல்களாக வெடிப்பதுடன், 2025 ஜூலையில் பெரிய ஆயுத மோதலுக்கும் வழிவகுத்தது. இந்த மோதல்கள் எல்லைப் பகுதிகளில் நிலவும் நிலப்பரப்புப் பிரச்னைகள், சுற்றுலாப் பயணிகள் பிரச்னைகள் மற்றும் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே ஏற்படும் துப்பாக்கிச் சூடுகள் போன்ற காரணங்களால் தீவிரமடைந்தன.

30ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
தாய்லாந்து-கம்போடியா (Cambodia) எல்லை மோதலில், ஆரம்பகட்ட தகவல்களின்படி குறைந்தது 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோதல் தீவிரமடைந்தபோது, இரு தரப்பிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 32-40 ஆக உயர்ந்தது. மேலும், குறைந்தபட்சம் 12 தாய்லாந்து (Thailand) நாட்டவர் கொல்லப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் எனவும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர்.

இரு நாடுகளும் பரஸ்பரம் எல்லைக் கட்டுப்பாடு விதிப்பு
அதைத் தொடர்ந்து மீண்டும் பதற்றம் ஏற்பட்டதால் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலைமையை எட்டியது. மேலும், கடந்த இரண்டு மாதங்களில், இரு நாடுகளுமே பரஸ்பரம் எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்து வந்தன. இதனையடுத்து, தாய்லாந்தில் இருந்து காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய கம்போடியா அரசு தடை விதித்தது.மேலும், அங்கிருந்து பெறப்பட்டு வந்த மின்சாரம் மற்றும் இணைய சேவைகளையும் நிறுத்தியது.
அண்மைத் தாக்குதல் பற்றி தாய்லாந்து கருத்து
ஜூலை 24ஆம் தேதி என்ன நடந்தது என்பது பற்றி தாய்லாந்தும் கம்போடியாவும் வெவ்வேறு விளக்கங்களை அளித்துள்ளன.குறிப்பாக, எல்லையில் உள்ள தாய்லாந்து ராணுவ நிலைகளை உளவு பார்க்க கம்போடிய ராணுவம் டிரோன்களை அனுப்பியதாக தாய்லாந்தின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூறியது. இதனையடுத்து, ஏவுகணைகளால் ஏவப்படும் எறிகுண்டுகளை ஏந்திய கம்போடிய வீரர்கள் எல்லையில் குவியத் தொடங்கினர் என்றும் தாய்லாந்து தரப்பில் இருந்த வீரர்கள் கூக்குரலிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து, கம்போடிய வீரர்கள் தாக்குதலைத் தொடங்கியதால் தாய்லாந்து தரப்பினர் பதில் தாக்குதல் நடத்த வேண்டியிருந்ததாகவும் தெரிவித்தனர்.குறிப்பாக பிஎம்-21 ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்திருந்த வீடுகள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பொது இடங்களையும் சேதப்படுத்தியதாகவும் தாய்லாந்து குற்றம் சாட்டியது.

தாய்லாந்து மீது குற்றம் சாட்டும் கம்போடியா
ஆனால், தாய்லாந்து வீரர்கள்தான் மோதலைத் தொடங்கியதாகவும், முந்தைய ஒப்பந்தத்தை மீறிய தாய்லாந்து வீரர்கள், எல்லை அருகே இருக்கும் கெமர்-இந்து கோவில் வரை முன்னேறி வந்து முள்வேலி அமைத்ததாகவும் கம்போடியா தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், தாய்லாந்து படையினர் முன்னறிவிப்பின்றி கம்போடிய படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மாலி சோசியாட்டாவை மேற்கோள் காட்டி ப்னோம் பென் போஸ்ட் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. மேலும், தாய்லாந்து அதிகப்படியான படைகளைக் குவித்து, கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி, கம்போடிய பகுதியில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
டிரம்ப் முன்னிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து
இதையடுத்து, இம்மோதலை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் மத்தியஸ்தம் செய்தனர். இதையடுத்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சி மாநாட்டில்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில், சண்டையை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம்
இந்நிலையில், தாய்லாந்து – கம்போடியா நாடுகளுக்கு இடையே மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உபோன் ரட்சதானி மாகாணத்தில் கம்போடியா படைகள் தாய்லாந்து படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதற்கு தாய்லாந்து வீரர்கள் எதிர்த்தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்து தெரிவித்தது. ஆனால் தாய்லாந்து தான் முதலில் தாக்கியதாக கம்போடியா கூறியது.மேலும், இந்த தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்ததாகவும் 4 பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து அரசு கூறியுள்ளது.இதன் பின்னர் போர் விமானங்களை பயன்படுத்தி கம்போடியா மீது தாய்லாந்து பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் கம்போடியா – தாய்லாந்து நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
