கொரோனாவுக்கு பிறகு 4 மடங்கு இதய நாள தளர்ச்சி (Coronary artery disease) ஏற்பட்டுள்ளதாக தமிழக மருத்துவர்கள் ஆய்வில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவும் அதன் பாதிப்புகளும்
கொரோனா என்பது மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கும் வைரஸ் குடும்பமாகும். 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் (SARS-CoV-2) உலகம் முழுவதும் பரவி COVID-19 என்ற சுவாச நோயை ஏற்படுத்தியது. இது முக்கியமாக இருமல் மற்றும் தும்மல் துளிகளின் மூலம் பரவுகிறது. காய்ச்சல், இருமல், சோர்வு, மூச்சுத் திணறல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும். தடுப்பூசி, சுகாதார பழக்கங்கள், கைகளை சுத்தப்படுத்துதல், தனி நபர் இடைவெளி போன்றவை கொரோனாவைத் தடுக்க உதவுகின்றன.

மேலும், இது அதிக வயதானவர்கள் மற்றும் நீண்டநாள் நோய்களுடன் இருக்கும் நபர்களுக்கு மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்த கொரோனாவின் தாக்கம் உடல்ரீதியாக மட்டுமன்றி, சமூக மற்றும் பொருளாதார ரீதியாகவும் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தது. மேலும் வேலை வாய்ப்புகள், கல்வி, பயணம், மனித உறவுகள் அனைத்திலும் அதன் தாக்கம் காணப்பட்டது.
இதய நாள தளர்ச்சி என்றால் என்ன ?
இதய நாள தளர்ச்சி (Heart Failure) என்பது இதயம் உடலுக்குத் தேவையான அளவு இரத்தத்தைப் பம்ப் செய்ய முடியாத நிலை ஆகும். இது இதயத் தசை பலவீனமடைவதால் அல்லது கடினமாவதால் ஏற்படுகிறது. இதனால் சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, கால்கள் அல்லது கணுக்கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதற்கு இதய வால்வு பிரச்சனைகள், கரோனரி தமனி நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.

அறிகுறிகள்:
- சுவாசிப்பதில் சிரமம்
- சோர்வு
- கால்கள், கணுக்கால்கள் மற்றும் கால்களில் வீக்கம்
- இதயம் வேகமாக அல்லது ஒழுங்கற்று துடிப்பது போன்ற உணர்வு.
- மார்பு வலி அல்லது அழுத்தம்.
சிகிச்சை மற்றும் மேலாண்மை:
- இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், திரவ தேக்கத்தைக் குறைக்கவும் உதவும் மருந்துகளை உபயோகிக்கலாம்.
- உப்பு குறைவான உணவு, புகைபிடித்தலை நிறுத்துதல், மன அழுத்தத்தைக் குறைத்தல், உடற்பயிற்சி.
- இதய வால்வை சரிசெய்ய அல்லது மாற்ற அறுவை சிகிச்சை, அல்லது பிற இதய பிரச்சனைகளுக்கு சிகிச்சை.
இதய நாள தளர்ச்சி என்பது ஒரு தீவிரமான நிலை என்பதால், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம் ஆகும்.

கொரோனாவுக்கு பிறகு அதிகரித்த இதய நாள தளர்ச்சி
இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இதய நாள தளர்ச்சி பாதிப்புக்குள்ளாவோரின் (கரோனரி ஆர்ட்டரி எக்டேசியாஸ்) எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்திருப்பதாக தமிழக அரசு மருத்துவர்களின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அதிலும், குறிப்பாக இணைநோய்கள் ஏதுமில்லாத இளம் வயதினருக்கு அத்தகைய பாதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கொரோனா தொற்றால் ரத்த நாள செல்களில் ஏற்படும் அழற்சி இதற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காரணம் என்ன ?
‘ஐரோப்பியன் ஹார்ட் ஜர்னல்’ என்ற உலகப் புகழ்பெற்ற ஆய்விதழில் இது தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதில், இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்கள் வழக்கத்தைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு அல்லது அதற்கு மேல் விரிவடைந்து வீக்கமாகும் நிலையை கரோனரி ஆர்ட்டரி எக்டேசியாஸ் என்றும் இதன் காரணமாக இதயத் தசைகளுக்கு ரத்த ஓட்டம் குறையும் அல்லது தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதனால் நாளங்களில் உறைவு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படக்கூடும் என்றும் இல்லையெனில் இதயத்தின் செயல்திறன் குறைந்து வேறு சில பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் கரோனாவுக்கு முன்பு வரை இதுபோன்ற பாதிப்புகள் நிகழ்வது அரிது என்றும் ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த பிரச்னை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
கொரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எண்டோதெலிக்கல் டிஸ்ஃபங்சன் எனப்படும் ரத்த நாள செல் செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது, நாளங்களுக்குள் வரிசையாக அமைந்திருக்கும் செல்கள் சேதமடைந்துவிடும். இதனால், ரத்த உறைவு, அடைப்பு, அழற்சி உருவாகலாம். இதன் விளைவாகவே, இதய நாள தளர்ச்சி ஏற்படுகிறது.

அதிகமாக பாதிக்கப்படும் இளம்வயதினர்
அத்தகைய பிரச்னைகளுக்கு இளம் வயதினர் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாகவும், அதாவது கொரோனாவுக்கு முன்பு 30-லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்களில் 7 சதவீதம் பேருக்கு மட்டுமே இதய நாள தளர்ச்சி இருந்தது என்றும் அது தற்போது 14 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதற்கு மேற்பட்ட வயதினரும் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் அதாவது 15 சதவீதத்திலிருந்து 62 சதவீதமாக உயர்ந்துள்ளது என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களை விட ஆண்களுக்கு பாதிப்பு அதிகம்
மேலும் ஒரு ஆய்வில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர் என்றும் மாறாக, கர்ப்பிணிகளையும், 18 வயதுக்கு குறைந்தவர்களையும் ஈடுபடுத்தவில்லை என்றும் இதய நாள தளர்ச்சி பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிக்கின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட அறிவுறுத்தல்
இதனால் ஆண்கள், குறிப்பாக இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தபட்டுள்ளது. மேலும், புகைப்பிடித்தலை தவிர்த்தல், சர்க்கரை அளவு, ரத்த அளவு, கொழுப்பு சத்துக்களை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் போன்றவைகளை இளைஞர்கள் கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இதில் சிறு அறிகுறிகள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு (Heart attack) மற்றும் இதய செயலிழப்பைத் தவிர்க்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
