செங்கோட்டையனை அடுத்து ஓபிஎஸ், புகழேந்தி உள்ளிட்டோர் தவெகவுக்கு செல்வதாக ஒரு பக்கம் பரபரப்பு போய்க்கொண்டிருக்க, அமமுகவும் தவெக கூட்டணியில் இணைவதாகத் தெரிகிறது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பேச்சு இதைத்தான் உறுதிப்படுத்துகிறது.
’’சர்வே நிறுவனங்களைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தவரையில் சொல்கிறேன். இன்றைக்கு தவெக ஒரு வளந்து வரும் கட்சியாக உள்ளது. மறைந்த விஜயகாந்த் எப்படி 2006 தேர்தலில் வந்தபோது அது எல்லா கட்சிகளுக்கும் இடையூறைத் தந்ததோ அதுபோலவே தவெகவும் உள்ளது. விஜயகாந்த் போலவே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறார் தவெக தலைவர் விஜய்.

30 ஆண்டுகளாக உச்சபட்ச நடிகராக இருந்து வந்த விஜய், இன்றைக்கு அரசியலில் வரும்போது இளைஞர்கள், இளம்பெண்கள் ஆதரவு உள்ளது. இதையெல்லாம் வைத்துச் சொல்கிறேன்.
விஜய் தலைமையில் நல்ல கூட்டணி அமைகின்ற பட்சத்தில் அது ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையும். விஜய் தலைமையில் மெகா கூட்டணி அமைந்தால் என்.டி. ஏ. கூட்டணி மூன்றாவது இடத்திற்கு சென்றுவிடும் என்பது நிச்சயம்’’ என்கிறார் டிடிவி தினகரன்.
இவர் இப்படி சொல்வதைப் பார்த்தால் தவெகவுடன் கூட்டணியா? என்றால்,
’’அமமுகவிற்கு எல்லா வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளது . அமமுக இடம்பெறுகின்ற கூட்டணிதான் வெற்றி பெறும் கூட்டணியாக இருக்கும். அந்த கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்’’ என்கிறார். கூட்டணி தொடர்பாக பல இடங்களில் பேச்சுவார்தை நடந்து கொண்டிருக்கிறது என்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
அதே நேரம், கூட்டணியிலும் அதிமுகவிலும் தன்னை இணைக்க சம்மதிக்காத எடப்பாடியை வெறுப்பேற்றுவதற்காகவே விஜயை இப்படி ஏகத்துக்கும் புகழ்கிறாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
