இந்தியாவின் தேசிய கீதம் நம் அனைவருக்கும் தெரியும். மகாகவி இரவீந்திரநாத் தாகூர் எழுதிய, ‘ஜன கன மன‘ எனத் தொடங்கும் பாடலை சுதந்திர இந்தியா தனது தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டது. அரசு நிகழ்ச்சிகள், பள்ளி நிகழ்ச்சிகள், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் பன்னாட்டு நிகழ்வுகள்-விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் இதுதான் இசைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ‘வந்தே மாதரம்’ தேசிய பாடலின் 150வது ஆண்டுவிழாவை நாடு முழுவதும் கொண்டாட மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்திருக்கிறது.
அது என்ன வந்தே மாதரம்? சுதந்திரப் போராட்டம் தொடர்பான திரைப்படங்கள், வெப்சீரிஸ்களில் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடும் தேசபக்தர்கள் வந்தே மாதரம் என்ற முழக்கத்தை எழுப்புவதையும், அதற்காக பிரிட்டிஷ் இந்தியா போலீசிடம் அவர்கள் அடிவாங்குவதையும் தண்டனை பெறுவதையும் பார்த்திருக்க முடியும். வந்தே மாதரம் என்பதற்கு ‘தாயை வணங்குகிறேன்’ என்று அர்த்தமாகும்.
வங்காளத்தின் புகழ் பெற்ற இலக்கியவாதியான பக்கிம் சந்திர சாட்டர்ஜி என்பவர் எழுதி 1882ல் வெளியான ‘ஆனந்த மடம்’ என்ற நாவலில், வந்தே மாதரம் என்று தொடங்கும் பாடல் இடம்பெற்றிருந்தது. அந்தப் பாடலின் தொடக்கத்தை முழக்கமாகவும், பாடலின் ஆரம்ப வரிகளை மேடைகளில் பாடும் பாடலாகவும் காங்கிரஸ் இயக்கம் கடைப்பிடித்து வந்தது. ஆனாலும், ஆனந்த மடம் நாவலில் இடம்பெற்றிருந்த முழுப் பாடலைப் பாட மாட்டார்கள்.
என்ன காரணம்? அந்த நாவலின் கதை என்பது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கம் பரவிக்கொண்டிருந்த வேளையில், பல பகுதிகளிலும் இருந்த முஸ்லிம் ஆட்சியாளர்களை எதிர்த்து இந்துக்கள் போராட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டது. இதற்கு பிரிட்டிஷாரின் வலிமையைப் பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம்களை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் கதை அமைப்பைக் கொண்டது. அதற்கேற்ற கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்களுடன் அமைந்த நாவல் அது.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் வங்காளத்தை இந்து வங்காளமாகவும், முஸ்லிம் வங்காளமாகவும் பிரித்த 1905ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்த நாவல் கவனம் பெற்றது. எனினும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து பங்கேற்ற சூழலில், வந்தே மாதரம் பாடலை மேடைகளில் பாடுவது குறித்த சர்ச்சை தொடங்கியது. முஸ்லிம் லீக் அமைப்பினர் இந்த நாவலின் நோக்கத்தை முன்வைத்து அதனை எதிர்த்தது. அத்துடன், முஸ்லிம்கள் தங்கள் மார்க்கத்தின்படி, இறைவனான அல்லாவைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டார்கள். வந்தே மாதரம் என்பது தாயை வணங்குகிறேன் என்ற அர்த்தத்தில் இருப்பதால், அது தங்கள் மார்க்கத்திற்கு புறம்பானது என்பதையும் தெரிவித்தனர்.
மகாத்மா காந்தி இந்த கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்திருந்தார். அதனால் வந்தே மாதரம் பாடல் பாடுவது தவிர்க்கப்பட்டது. மத அடையாளங்களை முன்வைப்பதற்குப் பதில், இந்தியாவின் பன்முகத்தன்மையையும் அதன் புவியியல் அமைப்பையும் சிறப்பித்துக் கூறும் பாடல் ஒன்றை தேசிய கீதமாக வைக்கவேண்டும் என்ற முடிவின் அடிப்படையில், இரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன கன மன பாடலை சுதந்திர இந்தியாவின் தேசிய கீதமாகத் ஜவகர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் கூடித் தேர்ந்தெடுத்தனர். சுதந்திரப் போராட்ட உணர்வுக்குப் பயன்பட்ட வந்தே மாதரத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்ற வகையில் அதனை தேசியப் பாடலாகத் தேர்வு செய்தார்கள். தேசிய கீதம் என்பதே அதிகாரப்பூர்வமாக அனைத்து இடங்களிலும் பாடப்படுவதாகும். 75 ஆண்டுகளுக்கும் மேலாக இதுதான் நடைமுறை.
இந்திய சுதந்திரப் பொன்விழாவின் போது, புதிய வந்தே மாதரம் பாடல் ஒன்று ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி, தமிழ் உள்பட பல மொழிகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாட முன்வந்துள்ள மத்திய பா.ஜ.க. அரசு, நாடாளுமன்றத்திலும் அதனை விவாதமாகவும் முன்னெடுத்தது. பிரதமர் மோடியே அந்த விவாதத்தை முன்னெடுத்தார். வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக வைக்காமல் செய்தவர் நேருதான் என்று விமர்சித்தார்.
உண்மையில், சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கேற்பதை தடுப்பதற்காகவே வந்தே மாதரத்தை இந்துத்துவவாதிகள் பயன்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தார் திமுக எம்.பி ஆ. ராசா
மகாத்மா காந்தியே தவிர்க்கச் சொன்ன பாடலை, மோடி வரிந்து கட்டி முன்னெடுப்பதன் நோக்கம் என்ன என்பது பற்றி நாடாளுமன்றத்தில் பேசியவர்கள் கேள்வி எழுப்பினார்கள். காந்தியை சுட்டுக்கொன்ற ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களுக்கு விடுதலைப் போராட்டத்தில் எந்த முக்கிய பங்களிப்பும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை செயல்படுத்தும் வகையில் நடைபெறும் மோடி அரசின் தேவையில்லாத ஆணிதான் வந்தே மாதரம் பாடலுக்கான முக்கியத்துவமாகும்.
