புதுச்சேரி மாநிலத்தின் உப்பளத்தில் இன்று தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பை நடத்தினார். அதில் பேசிய விஜய், தனக்கு வேண்டப்பட்ட முதல்வர் என்.ஆர்.காங்கிரஸ் என்.ரங்கசாமியை பாராட்டிப்பேசினார் விஜய். அதே சமயம் ஆட்சியைப்பற்றி விமர்சித்ததால் கூட்டணியில் இருக்கும் பாஜக வெகுண்டெழுந்துள்ளது. புதுச்சேரி ஒன்றிய அரசு ஒன்றும் செய்யவில்லை என்ற விஜய் பேச்சில் கடுப்பாக பாஜகவினர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
‘’ரேசன் கடைகள் மத்திய கண்ட்ரோலில் இருக்கிறதா? இல்லை மாநில அரசு கண்ட்ரோலில் இருக்கிறதா? இலவச அரிசித் திட்டம் மாநில அரசின் ரேசன் கடைகள் மூலம்தான் விநியோகம் செய்யப்படுகிறது . அது கூடத் தெரியாம பேசிட்டு இருக்கிறார் விஜய்’’ என்கிறார் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்(பாஜக).

அவர் மேலும், ‘’ ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக மத்திய அரசை குறை சொல்லி இருக்கிறார் விஜய். ஆனாலும் இதை வன்மையாக கண்டிக்கிறேன். புதுச்சேரியின் எந்தெந்த வளர்ச்சியில் பாஜக துணை நிற்கவில்லை என்று வெளிப்படையாக சொல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாக பேசிவிடுவது சரியல்ல. என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியில் மத்திய அரசு எவ்வளவோ நல்ல திட்டங்களை புதுச்சேரிக்கு தந்திருக்கிறது. விஜய் அரசியலுக்கு புதிது. யாரோ சொல்லிக்கொடுத்ததைத்தான் அவர் பேசுகிறார்’’ என்கிறார்.
விஜய் பேச்சில் கடுப்பான தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனோ, ‘’எந்த விபரமும் தெரியாமல் பேசுகிறார் விஜய். கவுன்சிலர் கூட ஆகாத விஜய் முதல்வராக ஆசைப்படுகிறார்’’ என்று விளாசி இருக்கிறார்.

’’தமிழ்நாடு, புதுச்சேரி என்று இரண்டு இடங்களிலும் முதல்வராக முடியாது என்பது தவெக தலைவர் விஜய்க்கு தெரியவில்லை. இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநர் வேண்டுமானால் ஆகலாமே தவிர முதல்வராக முடியாது’’ என்கிறார் திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்.
’’தமிழ்நாடு , புதுச்சேரி பாதுகாப்பு குறித்து விஜய் ஒப்பிடுவதே தவறு. தமிழ்நாட்டில் நடத்திய ரோடு ஷோ. ஆனால் புதுச்சேரியில் ஒரு மைதானத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ந்தது’’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
