இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரிவிதிக்க பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மீது 50 சதவிகிதம் வரி விதிப்பு
உக்ரைன், ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதனால் ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு கடுமையான வரிவிதிப்பு (Taxation) நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியா மீது 50 சதவிகிதம் அளவுக்கு வரிகளை விதித்தார்.
இருநாடுகளுக்கிடையேயான உறவு பாதிப்பு
இதனால் துணி, கடல் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், இருநாடுகளுக்கிடையேயான உறவு பாதிப்படைந்தது.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வட்டமேசை கூட்டம்
இந்த நிலையில், வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் (White House) வட்டமேசை கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டு விவசாயிகளுக்கான 12 பில்லியன் டாலர்களை விடுவித்தார். அக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், மலிவான வெளிநாட்டுப் பொருள்கள் அமெரிக்காவில் உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது என்று தெரிவித்தார்.

இந்திய அரிசியால் அமெரிக்க விவசாயிகள் பாதிப்பு
குறிப்பாக, இந்தியாவில் இருந்து அமெரிக்க சந்தையில் இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் மலிவு விலை உரத்தாலும் அமெரிக்கவிவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கடுமையாக அதிபர் டிரம்ப் (US President Trump) சாடியுள்ளார் . மேலும் பேசிய அவர், அவர்கள் நம்மை ஏமாற்றுகிறார் என்றும் இதனால் வரிகள் தொடரலாம் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
