இந்த சொல் இப்போது ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இம்பீச்மென்ட் என்பதற்கு பதவி நீக்கத்திற்கான குற்றச்சாட்டு என அர்த்தம். தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் (G.R.Saminathan) மீது இம்பீச்மென்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களிடம் கடிதம் அளித்துள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படையான திருப்பரங்குன்றம் (Thiruparankundram) மலையில் கார்த்திதைத் திருநாளில் மரபுப்படி தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்ட நிலையில், இந்து அமைப்புகளின் அரசியல் நோக்க மனுவை விசாரித்து, பக்கத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என உத்தரவிட்டு, அதனை அறநிலையத்துறையும் காவல்துறையும் நிறைவேற்றாத காரணத்தால், அவமதிப்பு வழக்காக விசாரித்து, இரண்டாவது முறை உத்தரவிட்டு, அப்போதும் பொதுமக்களிடம் அமைதியான சூழல் நிலவவேண்டும் என்பதனால் அரசுத் தரப்பு மறுத்த நிலையில்தான், அந்த நீதிபதி மீது இம்பீச்மென்ட் நடவடிக்கை கோரி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் மீது இப்படி நடவடிக்கை எடுக்க முன்னுதாரணம் இருக்கிறதா? அதுவும் தமிழ்நாட்டில் இப்படியான நடவடிக்கைகள் இதற்கு முன் இருந்துள்ளதா என்பவர்களுக்கு பத்திரிகையாளர் யுவகிருஷ்ணா எழுதியுள்ளவை விரிவான விளக்கத்தைத் தரக்கூடியதாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டை சார்ந்த நீதியரசர் ஒருவர் மீது நம்பிக்கையில்லை என்று நாடாளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் கொண்டு வருவது ஒன்றும் புதிதல்ல.உச்சநீதிமன்றத்தில் நீதியரசராக பணியாற்றிய வி.ராமசாமி மீது 1991ல் இம்பீச்மெண்ட் கொண்டுவரப்பட்டது இவர் 1991ல் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக வெற்ற பெற்ற சஞ்சய் ராமசாமியின் தந்தை. நீதிபதி தனது பிறந்த ஆண்டை தவறாக கொடுத்துவிட்டார் என்பதுதான் இம்பீச்மென்ட் குற்றச்சாட்டு. அதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தபோது அரசுப் பணத்தை முறைகேடாக செலவழித்தார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. பாஜக மற்றும் இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் இவர் மீது இம்பீச்மெண்ட் கொண்டுவந்தார்கள்.
நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட கமிட்டி விசாரித்து, இவர் மீது சாட்டப்பட்ட 14 குற்றங்களில் 11 குற்றங்கள் நிரூபணமாகின என்று அறிவித்தது. எனினும் மக்களவையில் ஓட்டெடுப்பு வந்தபோது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான அதிமுக எம்பிக்கள் ஓட்டெடுப்பை புறக்கணித்தனர். எனவே நாடாளுமன்றம் மூலமாக அவரது பதவி பறிப்பு தப்பித்தது. சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக ஒரு நீதியரசர் மீதான இம்பீச்மென்ட் நடவடிக்கைகள் நடந்தது ராமசாமி விவகாரத்தில்தான். பின்னாளில் அவர் அதிமுகவில் சேர்ந்து, 1999 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகாசி எம்.பி. தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்பீச்மெண்ட் (Impeachment) மூலமாக பதவி இழந்த இந்தியாவின் முதல் நீதியரசர் கல்கத்தா உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த செளமித்ராசென். பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டு, கடைசியாக 2011ல் மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இவருக்கு எதிராக பெரும்பான்மையான உறுப்பினர்கள் வாக்களித்து பதவி இழந்தார். இந்தியாவில் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் நீதியரசர் இவர்தான்.
தமிழ்நாட்டைச் சார்ந்த பி.டி.தினகரன், சிக்கிம் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். சட்டத்துக்கு மீறிய வகையிலான சொத்துகளை அவர் சொந்த ஊரில் குவித்து வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற வாய்ப்பிருந்த சூழலில், அவர் மீதான பதவி நீக்க நடவடிக்கைகள் வலுபெறத் தொடங்கின. நாடாளுமன்றத்தில் தீர்மானம் வருவதற்கு முன்பாக அவரே ராஜினாமா செய்தார். பின்னாளில் தன் ராஜினாமாவை திரும்பப்பெற விரும்புவதாக அவர் சொன்னபோதும்கூட, சட்ட அமைச்சகம் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.
நீதியரசர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்கிற கோரிக்கை இந்தியாவில் அரிதிலும் அரிதாகதான் எழும்பும். அத்தகைய அரிதிலும் அரிதிலான பெருமையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் நீதியரசர் தற்போது பெற்றிருக்கிறார். தன்னை குறிப்பிட்ட அமைப்பின் ஆதரவாளர் என வெளிப்படையாக அறிவித்தவரான அந்த நீதியரசருக்கு அந்த அமைப்பிற்கு ஆதரவானவர்கள் அதிகளவில் எம்.பி.க்களாக இருப்பதால், இவர் மீதான இம்பீச்மென்ட் வெற்றி பெறுவது கடினம். அதாவது, இந்த நடவடிக்கை மூலம் பதவி பறிப்பு நடக்காது. எனினும், வரலாற்றில் சம்மந்தப்பட்ட நீதியரசரின் நம்பகத்தன்மை நிரந்தரமான கேள்விக்கு உள்ளாக்கப்படும்
