ஓபிஎஸ் அணியில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தவெகவில் இணைவதாக தகவல் பரவுகிறது.
அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து வருகிறார் வைத்திலிங்கம். பன்னீசெல்வம் தொடங்கிய அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார் வைத்திலிங்கம்.
சசிகலாவின் தீவிர ஆதரவாளனரான இவர் அவரை அதிமுகவில் இணைக்க தீவிரம் காட்டி வந்தார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை என்பதை உணர்ந்து பன்னீர்செல்வம் அணியில் இருந்த மருது அழகுராஜ் , மனோஜ் பாண்டியன் ஆகியோர் திமுகவில் இணைந்துவிட்டனர். பன்னீர் செல்வத்தையும் தினகரனையும் அதிமுகவில் இணைப்பதாகச் சொல்லி போராடிய செங்கோட்டையனுக்கு அதிமுகவில் இருந்து வெளியேற்றப்படும் கதிக்கு ஆளாகி அவரும் அதில் கடுப்பாகி தவெகவில் இணைந்துவிட்டார்.
இந்த நிலையில்தான் பன்னீர்செல்வத்தையும் தினகரனையும் டெல்லி அழைத்துச் சென்று அமித்ஷாவிடம் பேச வைத்து என்.டி.ஏ. கூட்டணிக்குள் இருவரையும் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார் அண்ணாமலை.

டிசம்பர் இறுதிக்குள் இது நடந்து விடும் என்று பேசப்பட்டு வரும் நிலையில் இதில் வைத்திலிங்கத்திற்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. அதே நேரம், தவெகவில் இணைந்தால் நல்ல பொறுப்பு வழங்கப்படும். நல்ல செல்வாக்கு இருக்கும் என்று செங்கோட்டையன் சொல்லி இருக்கிறார். ஒரத்தநாடு பகுதியில் செல்வாக்குடன் இருப்பதால் தவெகவும் வைத்திலிங்கத்திற்கு சிவப்புக்கம்பளம் விரித்திருக்கிறது.
இந்த நிலையில்தான் வைத்திலிங்கம் தவெகவில் இணைகிறார் என்றும், இன்னும் இரண்டொரு நாளில் இந்த இணைப்பு சாத்தியப்படும் என்றும், முன்னதாக அவர் செங்கோட்டையன் போலவே சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார் என்றும் தகவல் பரவுகிறது.
