அமெரிக்க தொழில்நுட்ப மாபெரும் நிறுவனமான அமேசான் (Amazon), இந்தியாவில் தனது நீண்டகால வளர்ச்சி திட்டத்தின் அடுத்த கட்டத்தை அறிவித்து, 2030 ஆம் ஆண்டுக்குள் கூடுதல் $35 பில்லியன் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
AI-ஆல் இயக்கப்படும் இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலம் :
அமேசான் தனது புதிய முதலீட்டில் முக்கிய கவனம் செலுத்தவிருக்கும் பகுதி AI-உந்துதல் டிஜிட்டல் (Digital) மயமாக்கல் ஆகும். அந்நிறுவனத்தின் திட்டப்படி,15 மில்லியன் சிறு வணிகங்களுக்கு AI பயன்பாட்டை எளிதாகக் கிடைக்கச் செய்வது, நூற்றுக்கணக்கான மில்லியன் வாங்குபவர்களுக்கு AI நன்மைகளை democratize செய்வது,இந்தியாவின் அரசு பள்ளிகளில் 4 மில்லியன் மாணவர்களுக்கு AI கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்குவது உள்ளிட்டவைகளாகும். மேலும், இந்த முன்முயற்சிகள், இந்தியாவின் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப திறன்களை உலகத் தரத்தில் உருவாக்கும் முயற்சிகளுக்கு வலுவூட்டும்.
ஒரு மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள்:
இது நாட்டின் வளர்ச்சியில் வேலைவாய்ப்பு உருவாக்கம் முக்கிய பங்கை வகிக்கிறது. இதற்காக அமேசான், 2030க்குள் 1,000,000 புதிய வேலை வாய்ப்புகள், லாஜிஸ்டிக்ஸ், ரீட்டெயில், டெக், கிளவுட், மீடியா உள்ளிட்ட பல துறைகளில் விரிவான பணியமர்த்தல், சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு தொழில்நுட்ப ஆதரவு மூலம் மறைமுக வேலைவாய்ப்புகள் என்ற இலக்குகளை நிர்ணயித்துள்ளது. மேலும் கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் அமேசான் ஏற்கனவே உருவாக்கிய வேலைவாய்ப்புகளுடன் இது இணைந்தால், நாட்டின் வேலைவாய்ப்புத் துறைக்கு இது மாபெரும் மாற்றத்தை கொண்டு வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் .

ஏற்றுமதி இலக்கு $80 பில்லியன்:
அமேசான் தற்போது வரை இந்தியாவில் இருந்து $20 பில்லியன் மதிப்பிலான மின்வணிக ஏற்றுமதிகளை செயல்படுத்தியுள்ளது. ஆனால் முற்றிலும் புதிய இலக்காக 2030க்குள் $80 பில்லியன் மொத்த ஏற்றுமதி, இந்திய உற்பத்தி கிளஸ்டர்களுக்கு உலக சந்தையை இணைக்கும் வசதிகள்,சிறு உற்பத்தியாளர்களை சர்வதேச விற்பனையாளர்களாக மாற்றும் பயிற்சிகள் உள்ளிட்டவைகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்த இலக்கை அடைய, அமேசான் புதிய முயற்சியாக ‘Accelerate Exports’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய உற்பத்தியாளர்களுக்கான உலக நுழைவாயில்
இந்த முயற்சி குறிப்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்முனைவோர்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, திருப்பூர், கான்பூர், சூரத் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட உற்பத்தி கிளஸ்டர்களில் நேரடி ஆன்போர்டிங், இந்திய ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலுடன் (AEPC) புதிய கூட்டாண்மை,உலக சந்தைகளுக்கு தேவையான பயிற்சி, லாஜிஸ்டிக்ஸ் உதவி, தரநிலைச் சான்றிதழ் வழிகாட்டுதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாக கருதப்படுகிறது.

மைக்ரோசாப்டின் அறிவிப்புக்கு அடுத்தே அமேசானின் மெகா முதலீடு
மைக்ரோசாப்ட் இந்தியாவில் AI மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பிற்கு $17.5 பில்லியன் முதலீட்டை அறிவித்த ஒரு நாளில், அமேசானின் $35 பில்லியன் அறிவிப்பு வெளியானது.
உலகத் தர போட்டியில் இந்தியா
அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் (Microsoft) அறிவித்துள்ள இந்த மாபெரும் முதலீடுகள், இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் உற்பத்தி துறைகளை உலக தரத்தில் போட்டியிடக்கூடியதாக மாற்றும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். AI, கிளவுட், மின்வணிகம், ஏற்றுமதி மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் இந்த திட்டங்கள், இந்தியாவின் தொழில்நுட்ப–பொருளாதார எதிர்காலத்தை தீவிரமாக வடிவமைக்கும்.
