பா.ஜ.க.வுடனான தேர்தல் கூட்டணிக்கு ஒப்புதல் பெறுவது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக நடைபெற்ற அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிரான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆளுங்கட்சியாக இருக்கும்போது எதிர்க்கட்சி மீதும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுங்கட்சி மீதும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது இயல்பானதுதான். அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று, நீதித்துறையில் தி.மு.க. தலையிடுவதைக் கண்டிக்கும் தீர்மானமாகும்.
திருப்பரங்குன்றம் கார்த்திகை விழாவில் வழக்கம்போல மரபான இடத்தில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், மலை உச்சியில், தர்காவைக் கடந்து சென்று விளக்கேற்ற வேண்டும் என்ற தனி நபரின் மனுவுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்த நீதிபதியின் செயல்பாட்டைக் கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இம்பீச்மென்ட் கோரிக்கையை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகரிடம் தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அளித்திருப்பது தொடர்பாகத்தான் அ.தி.மு.க. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது.
மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் அமர்பு கடந்த 2017ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தெளிவான தீர்ப்பினை வழங்கியிருக்கும் நிலையில், அதை மீறி தனி நீதிபதி அளித்துள்ள தீர்ப்பு தேவையற்ற பதற்றத்தையும் வன்முறையையும் தூண்டுவதாக உள்ளது என்பதும், இது ஒருசார்பான தீர்ப்பு என்பதும் இம்பீச்மென்ட் கோரிக்கைக்கான காரணமாகும். தனி நீதிபதியின் தீர்ப்பை ஆதரித்து ட்வீட் செய்தவர் அ.தி.முக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அவரது தலைமையிலான கட்சியின் பொதுக்குழுவில் தி.மு.க. அரசின் நீதிமன்றத் தலையீடு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அ.தி.மு.க. எந்தளவு நீதியை மதிக்கக்கூடிய கட்சி? அதனுடைய ஆட்சியில் நீதியை எப்படி மதித்தார்கள் என்பதற்கு சில உதாரணங்கள் உள்ளன. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மீது 1996ல் சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதாவது, முதலமைச்சராக மாதம் ஒரு ரூபாய் மட்டுமே ஊதியம் பெற்றதாக சொன்ன ஜெயலலிதா, தன்னுடைய 1991-96 வரையிலான 5 ஆண்டு பதவிக்காலத்தில் 64 கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கியிருந்தார். இன்றைய மதிப்பில் 10ஆயிரம் கோடிக்கு மேல் வரும்.
ஒரு ரூபாய் சம்பளத்தில் 64 கோடி ரூபாய்க்கு எப்படி சொத்து வாங்க முடிந்தது என்பதை கணக்கு காட்டியிருந்தால் வழக்கே நின்றிருக்காது. சாத்தியமில்லாத கணக்கை எப்படி காட்ட முடியும்? அதனால் பல ஆண்டுகள் அந்த வழக்கை இழுத்தடித்தார் ஜெயலலிதா. கடைசியில், 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் நாள் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, இந்த வழக்கின் ஆதாரங்களை அலசிப் பார்த்து ஜெயலலிதாவுக்கும் அவருடன் போயஸ் கார்டனில் தங்கியிருந்து இந்த சொத்துக்குவிப்பு ஊழலுக்குத் துணை நின்றவர்களுக்கும் சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
நீதிபதியின் தீர்ப்பை எப்படி மதித்தது அ.தி.மு.க.வும் அதன் ஆட்சியும்? நீதிபதி குன்ஹாவின் கொடும்பாவி கொளுத்தப்பட்டது. பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டது. ஆளுங்கட்சியினராக இருந்த அ.தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டு அரசு சொத்துகளை சேதப்படுத்தினர். சினிமா பிரபலங்களையும் இதில் இழுத்துவிட்டு, ‘தெய்வத்தை மனிதன் தண்டிக்கலாமா?’ என்ற பேனருடன் நீதிபதிக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க வைத்தார்கள். கடைசியில், சுப்ரீம் கோர்ட் வரை நீதிபதி குன்ஹா தீர்ப்புதான் நிலைத்து நின்றது. ஜெயலலிதா உள்பட அத்தனை பேரும் குற்றவாளிகள் என்பதே உறுதியானது.
கொடநாடு ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் முறைகேடு வழக்கை விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதியின் வீட்டிற்கு கரண்ட் கட் செய்து, குடிநீர் சப்ளையையும் துண்டித்தது ஜெயலலிதா அரசு. அந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, அ.தி.முக. எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனாலும், கலவரங்கள் நடந்தன. தர்மபுரி இலக்கியம்பட்டியில் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் சுற்றுலா வந்த பேருந்தை எரித்தனர். அதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். அந்தக் கொடூர செயலை செய்து தூக்குத் தண்டனை பெற்றவர்களின் தண்டனையைக் குறைத்து, அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்தது எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க அரசு.
ஊழல் வழக்குகளை விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதிக்கு எதிராக உயர்நீதிமன்ற சுவர்களில் போஸ்டர்கள், நீதிபதியின் மருமகன் மீது கஞ்சா வழக்கு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த சுப்பிரமணியசாமி அந்த வழக்கிற்காக வந்தபோது நீதிமன்ற வளாகத்திலேயே அ.தி.மு.க.மகளிரணியினர் தங்கள் உடையை உயர்த்திக்காட்டி நடத்திய ஆபாசக் கூத்து இத்தனையும்தான் அ.தி.மு.க நீதியை மதித்ததற்கான அத்தாட்சிகள்.
