’நாளைய தீர்ப்பு’ முதல் ‘புலி’ படம் வரையிலும் 27 வருடங்கள் நடிகர் விஜய்க்கு பி.ஆர்.ஓ. பணி செய்து வந்தவர் பி.டி.செல்வகுமார். ’பந்தா பரமசிவம்’, ‘ஒன்பதுல குரு’ உள்ளிட்ட படங்களை தயாரித்த செல்வகுமார், ’புலி’ படத்தையும் தயாரித்தார்.
’கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் இருந்து நடிக்கவும் செய்தார் செல்வகுமார். ‘நாட்டாமை’ உள்ளிட்ட கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பல படங்களில் குணசித்திர மற்றும் கவுண்டமணியின் காமெடி காட்சிகளில் நடித்தவர் செல்வகுமார். வசந்தபாலன் இயக்கிய ‘ஜெயில்’ படத்தில் வழக்கறிஞர் பாத்திரத்தில் நடித்தவர் செல்வகுமார்.

’புலி’ படம் படுதோல்விப்படமாக அமைந்ததால் செல்வகுமாருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அந்த படத்தின் ரிலீசுக்கு முதல்நாள் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியதால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார் செல்வகுமார்.
இந்த ரெய்டுக்கு பின்னர் செல்வகுமாரை தனக்கு பி.ஆர்.ஓ. பணி செய்ய வேண்டாம் என்று அனுப்பி விட்டார் விஜய். இதனால் சொந்த ஊர் கன்னியாகுமரி சென்று ‘கலப்பை மக்கள் இயக்கம்’ தொடங்கி அம்மாவட்டத்தில் 10 ஆண்டுகளாக சமூக சேவைகள் செய்து வருகிறார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் இயக்கம் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார்.

இதன் பின்னர் விஜய் தவெக தொடங்கி புதிய நிர்வாகிகளுடன் கைகோர்த்து செல்கிறார். செல்வகுமாரை அழைத்து அரவணைக்கவேயில்லை. அதே நேரம், கலப்பை மக்கள் இயக்கத்திற்கு முக்கியத்தும் அளித்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கரூர் சம்பவத்தில் தவெக செய்தது தவறு என்றும், திமுக மீது எந்த தவறும் இல்லை என்று அழுத்தமாக தனது கருத்தை முன்வைத்தவர் செல்வகுமார்.
தவெகவில் சரியான தலைமை இல்லை. அக்கட்சி மக்கள் பணியில் முறையாக செயல்படவில்லை என்று சொல்லி வந்தவர் செல்வகுமார். அவர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது இயக்கத்தினர் 100 பேருடன் திமுகவில் இணைந்தார் செல்வகுமார்.

இதையடுத்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ‘’புலியால் ரொம்ப கடிபட்டு விட்டேன். அதனால் பயந்து பயந்து ஓடிக்கொண்டிருக்கிறேன். இனிமேல் அந்த புலி பற்றி பேசவேண்டாம். எனக்கு போஸ்டர் ஒட்டியவர்களுக்குத்தான் முதல் உரிமை என்று சொன்னார் விஜய். ஆனால் ரசிகர்களுக்கு விஜய் முக்கியத்துவம் தரவில்லை. விஜயின் வளர்ச்சிக்கு ஒரு துணாக இருந்தேன்.
விஜய் கூட இருந்த 8 பேர் என்னுடைய இடத்திற்கு வர ஆசைப்பட்டு தவறான தகவல் கொடுத்து ரெய்து வரச்செய்து விட்டார்கள். தன் தந்தை சந்திரசேகரையே சேர்க்க மறுக்கிறார் விஜய்.

அரசியலில் விஜய் ஒரு நிலவு. ஒரு நாள் அமாவாசையாகிவிடுவார். விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் புரட்சி ஆகாது. அத்தனையும் ஓட்டாக மாறாது. நடிக்கருக்கு கூடும் கூட்டம்தான் இது’’ என்கிறார்.
