குடும்பத் தலைவிகளின் உழைப்பை அங்கீகரித்து வரும்திராவிட மாடல் அரசு, அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வளர்ந்து சாதனைப் படைக்க எந்நாளும் பக்கபலமாய் நிற்பதை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ விழாவில் உணர முடிந்தது. திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பயனடையும் பெண்களின் நெகிழ்ச்சி உரைகளால் உணர்ச்சி வெள்ளத்தில் நிறைந்தது அரங்கம்.
தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு மேற்கொண்ட முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் விதமாகவே ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ கொண்டாட்ட விழா நடந்தது. திராவிட மாடல் அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் பல்வேறு முன்னோடித் திட்டங்களின் சாதனைகள், பயனைந்த மகளிரின் அனுபவங்கள் இவ்விழாவில் பகிரப்பட்டன.

இதில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த சரண்யா, ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம், சுதந்திரப்பறவையாக தமிழ்நாடு முழுவதையும் சுற்றி வரும் அனுபவத்தை மேடையில் பகிர்ந்துகொண்டார்.
’’என்னுடைய பெயர் சரண்யா. நான் திருப்பரங்குன்றத்துல இருந்து வர்றேன். என்னோட சொந்த ஊர் தேனி. நாலாவது பொண்ணு நானு. வீட்டுக்குள்ளேயே இருந்தேன் எல்லாத்துக்கும் அப்பா, தம்பிய எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். நான் ஒண்ணுமே செய்ய மாட்டேன். ஒரு பத்துக்கு பத்து ரூமு இருந்தா போதும். ஒரு புத்தகம் இருந்தா போதும். நான் அந்த ரூமுக்குள் இருந்து மதுரைக்கு வந்தேன். அதுக்கு அப்புறம் நான் கணவரை சார்ந்து இருக்க ஆரம்பிச்சேன். என் வீட்டுக்கு பின்னாடி இருந்த கம்ப்யூட்டர் செண்டர்லதான் தமிழ்நாடு அரசோட ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலமா நீ படிப்பா. முன்னாடிப் போப்பான்னு சொன்னாங்க. அது மாதிரியே பயிற்சி எடுத்து நாமக்கல் இன்போடெக்ல நான் ஜாப்ல இருக்கேன்.

இப்ப வந்து நான் யாரையும் எதிர்பார்க்கல. சென்னைக்கு இது என்னோட முதல் பயணம். யாரோட உதவியும் இல்லாம அப்பா, தம்பி, கணவரோட உதவி இல்லாம நான் தனியா வர்றேன். இப்போ பிங்க் பஸ்சை மிஸ் பண்ணிட்டா கூடா பரவாயில்ல நான் ஆட்டோவுல போறேன்னு சொல்லுற அளவுக்கு வந்துட்டேன். தமிழ்நாடு முழுக்க நாங்க ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கோம். இதுக்கு முதல்வருக்கு நன்றி சொல்லிக்கிறேன். என்னய சென்னைக்கு கூப்பிடும்போது கூட, திருப்பரங்குன்றம் மலைமேல நின்னு ’நான் ஜெயிச்சுட்டேன் முருகா’ன்னு கத்திட்டு வந்திருக்கேன். நன்றி முதல்வர் சார்’’ என்று பேசியதும், அதிலும் அவர் வெள்ளந்தியாக, ‘’நான் ஜெயிட்டேன் முருகா’’ என்று சொன்னபோது, முதலமைச்சர், துணை முதலமைச்சர் மட்டுமல்லாது அரங்கமே நெகிழ்ந்தது.
