புதிய கட்சி தொடங்கும் முடிவில் ‘அதிமுக உரிமை மீட்புக்குழு’வை ’அதிமுக உரிமை மீட்ப்புக்கழகம்’ ஆக்கி இருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் ஏன்? என்ற கேள்வி எழக்காரணமாகி இருக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றிருந்தார் பன்னீர்செல்வம். சசிகலாவுக்கு திடீரென முதலமைச்சர் நாற்காலி ஆசை வந்ததால் வழுக்கட்டாயமாக பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வேண்டியதாகிவிட்டது.

இதனால் சசிலாவுக்கு எதிராக தர்மயுத்தம் ஆரம்பித்தார் பன்னீர்செல்வம். கடைசியில் சசிகலாவே சிறைக்கு செல்ல வேண்டியதாகிவிட்டதால் பழனிசாமி முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தார்.
பழனிசாமியும் பன்னீர்செல்வமும் பிரிந்து நின்றதால் இரட்டை இலை சின்னத்திற்கு பங்கம் வந்தது. இதனால் இருவரும் இணைந்தனர். அதன் பின்னர் தர்மயுத்தத்தின் போது பன்னீர்செல்வம் பக்கம் நின்றவர்களை எல்லாம் தன் பக்கம் இழுத்துவிட்டார் பழனிசாமி.

இந்த நேரத்தில் ஒற்றைத் தலைமை விவகாரத்தினால் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டார் பன்னீர்செல்வம். அப்போது அவருடன் வைத்திலிங்கம், மருது அழகுராஜ், பெங்களூரு புகழேந்தி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட சிலர் மட்டுமே உடன் இருந்தனர்.
ஒருங்கிணைப்பு விவகாரத்தில் பழனிசாமி கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்காமல் இருந்து வந்த நிலையில், அதிரடியாக எந்த முடிவையும் எடுக்காமல் பன்னீர்செல்வம் அமைதியாக இருந்ததால் தங்களின் எதிர்காலம் கருதி மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் அதிமுக உரிமை மீட்பு குழுவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்துவிட்டனர். பெங்களூரு புகழேந்தியும் விலகியே இருக்கிறார். தளபதியாக இருக்கும் வைத்திலிங்கமும் திமுகவில் இணையப் போகிறார் என்று தகவல் வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில்தான், பூக்கள் எல்லாம் உதிர்ந்த பின்னர் வெறும் மாலையாக இருந்து என்ன பயன்? என்று யோசித்திருக்கிறார் பன்னீர்செல்வம்.

அதாவது டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய பின்னரும் கூட பழனிசாமி ஒருங்கிணைப்புக்கு ஒத்துவராததால்தான் புதுக்கட்சி முடிவை எடுத்திருக்கிறார் பன்னீர்செல்வம். புதுக்கட்சி தொடங்கி என்.டி.ஏ. கூட்டணியில் வந்துவிடலாம் என்பது அமித்ஷா கொடுத்த ஐடியா என்கிறார்கள். அதே நேரம் தனிக்கட்சி தொடங்கி தவெகவுடன் இணைய உள்ளார் என்றும் தகவல்.
வரும் 23ம் தேதி அன்று சென்னை வேப்பேரியில் பன்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி இருக்கிறார் பன்னீர்செல்வம். அன்றைய தினமே அல்லது மறுநாள் எம்.ஜி.ஆர். நினைவு நாளில் புதுக்கட்சியை அறிவிக்க இருக்கிறார் பன்னீர்செல்வம். எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா செங்கோல் தருவது போன்று புதிய கட்சிக் கொடியை வடிவமைத்திருக்கிறார் என்கிறார்கள். இது ஜெ. தீபாவின் கட்சிக்கொடி போன்று இருக்கிறதே? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
எப்போதோ எடுத்திருக்க வேண்டிய முடிவு இது. ஆதரவாளர்கள் எல்லோரும் அதிருப்தியில் வெளியேறிய பின்னர் இப்போது இந்த முடிவை எடுத்திருக்கிறார். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் ஏன்? என்று கேட்கின்றனர்.
