அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
குண்டாஸ் ரத்தானது ஏன்?
சென்னையில் கடந்த 23.12.2024 இரவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி சக மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, பல்கலைக் கழகத்தின் அருகே பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் அங்கு சென்று இருவரையும் மிரட்டி அந்த மாணவரை அடித்து விரட்டிவிட்டு, மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.
பாதிக்கப்பட்ட மாணவின் பெற்றோர் தந்த துணிச்சலுடன் கோட்டூர்புரம் மகளிர் போலீசில் புகாரளிக்கவும், விரைந்து நடவடிக்கை எடுத்து ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர்.
பகலில் பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் தினமும் இரவில் 7 மணிக்கு மேல் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 15க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளும் நிலுவையில் இருந்து சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. ஏற்கனவே 3 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த ஞானசேகரன், மாணவி வழக்கில் 4வதுமுறையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானார்.

இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். 30 ஆண்டுகள் எந்த தண்டனை குறைப்பும் இன்றி ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டிருந்தார்.
சிறையில் இருந்து வரும் ஞானசேகரனின் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவரது தாயார் கங்காதேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரின் இந்த மனுவை ஏற்று ஞானசேகரன் மீதான குண்டாசை ரத்து செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
மாணவி வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு நீடிக்க வேண்டுமா? என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, காவல்துறை அளித்த பதிலின் அடிப்படையில் குண்டர் சட்டம் ரத்தாகி இருக்கிறது.
