உலகின் பல நாடுகளிலும் மதவெறியும் அதனையொட்டிய தீவிரவாதமும் பரவி வருகின்றன. இந்தியாவில் பாபர் மசூதியை இடிப்பதற்காக 1990ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரத யாத்திரையின் விளைவாக, மதவெறிக்கும் தீவிரவாதத்திற்கும் விதை தூவப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் கொடூரத்தை அண்மைக்காலம் வரை இந்திய மக்கள் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 1992ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1993ஆம் ஆண்டு மும்பையில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பு, 1998ல் கோவையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு, 2008ல் மும்பை நகரத்தில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்கள், அக் ஷர்தாம் கோவில் தாக்குதல், மாலேகான் குண்டுவெடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பு கொடூரமும் அதனைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் கட்டவிழ்த்துவிடப்பட்ட மதக்கலவரமும் எனப் பட்டியல் போட்டால் நீளமாகப் போய்க் கொண்டே இருக்கும். ஒரு நாட்டில் பெரும்பான்மையாக உள்ள மதத்தினரின் நடுவே அந்த நாட்டில் சிறுபான்மை மதத்தினர் எந்தளவு அச்சமின்றி வாழ்கிறார்களோ அதுதான் உண்மையான பாதுகாப்பாக அமையும். இந்தியாவில் அத்தகைய நிலை கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகிறது. சிறுபான்மை மத மக்களான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பயத்துடனும் பதற்றத்துடனும் வாழ வேண்டிய சூழலுக்கு கடந்த 10 ஆண்டுகளாகத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் இப்படி என்றால், பாகிஸ்தான், இலங்கை, பர்மா உள்ளிட்ட அண்டை நாடுகளில் அங்கு வாழும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மதத்தினரும் இதே அச்சத்தில்தான் வாழ்கின்றனர். மதரீதியான போதனைகளும், பணச் செல்வாக்கும் உலகெங்கும் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுகின்றன. 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த புகழ்மிக்க இரட்டை கோபுரம் தாக்கித் தகர்க்கப்பட்டது. இலண்டன், பாரீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளின் நகரங்களிலும் துப்பாக்கிச் சூடுகள், படுகொலைகள் ஆகியவை மதத்தின் பெயரால் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில்தான், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போன்டி கடற்கரையில் கடந்த 14ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டிருப்பது உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூத மதத்தைச் சேர்ந்தவர்கள் ஹனுக்கா என்ற 8 நாள் திருவிழாவை பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடி வருகிறார்கள். யூத வழிபாட்டு நம்பிக்கையின் அடிப்படையில், ஒன்பது மெழுகுவத்திகளை ஏற்றி வைக்கும் வகையிலான ஒரு ஸ்டான்டில், முதல் நாள் ஒரு மெழுகுவத்தி, இரண்டாவது நாள் இரண்டு மெழுகுவத்தி என எட்டாவது நாள் எட்டு மெழுகுவத்தியை ஏற்றி, வழிபாட்டின் நிறைவில் நடுவில் ஒரு மெழுகுவத்தியை ஏற்றும் வழக்கம் கொண்ட திருவிழா அது. இந்தத் திருவிழா நாளில் கடற்கரை, பூங்கா போன்ற பொதுவெளியிடங்களில் ஹனுக்காக பண்டிகையின் முதல் நாளில் கூடிக் கொண்டாடுவது வழக்கம். ஞாயிறன்று சிட்னி கடற்கரையில் யூத மதத்தினர் கூடியபோது, துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலின்போது, சிரியா நாட்டைச் சேர்ந்தவரும், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பழ வியாபாரம் செய்பவருமான அகமது அல் அகமது என்பவர் துணிச்சலுடன், தீவிரவாதி ஒருவரைத் தாக்கி விரட்டும் காட்சிகள் பரவலாகி வருகின்றன. தன்னுயிரைப் பற்றிக் கவலைப்படாமல், அந்தக் கடினமான நேரத்தில், அகமது மேற்கொண்ட தீரச் செயல் பலராலும் பாராட்டப்படுகிறது. அகமது அல் அகமதுவின் துணிச்சலான நடவடிக்கையால் மேலும் அதிக பொதுமக்களின் உயிர் பலியாகாமல் காப்பாற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அகமதுவின் கைகளில் இரண்டு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. தாக்கிய தீவிரவாதிகளில் ஒருவரை ஆஸ்திரேலியா படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். யூதர்களின் நாடான இஸ்ரேல், முஸ்லிம்கள் வசிக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடத்திவரும் ஈவிரக்கமற்ற கொடூரத் தாக்குதலை உலகமே கண்டிக்கிறது. பெண்கள், பச்சிளங்குழந்தைகள் பலர் காசாவில் கொல்லப்பட்டு வருகின்றனர். கட்டடங்கள் வெடிகுண்டு வீச்சால் தரைமட்டமாகியுள்ளன. இந்த நிலையில், யூதர்கள் மீது ஆஸ்திரேலியாவில் நடந்துள்ள தாக்குதலும் உயிர்ப்பலிகளும் அமைதியை மேலும் குலைக்கின்ற அபாயத்தை சுட்டிக்காட்டுகின்றன. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ ஆஸ்திரேலிய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். உலகின் வளர்ந்த நாடுகள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட, தங்கள் ஆதரவு நாடுகள் மூலம் அமைதியற்ற சூழலை பல பகுதிகளிலும் உருவாக்கி வருகின்றன. அது மதவெறித் தீவிரவாதமாகவும், அரச பயங்கரவாதமாகவும் மாறுகின்றன. இந்த மதவெறிக்கிடையேதான் அகமது அல் அகமது போன்ற மனிதநேயர்களும் வாழ்கிறார்கள்.
