காலநிலை மாற்றத்தால் 2050-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்திற்கு சுமார் 12.5 டிரில்லியன் டாலர்கள் வரை இழப்பு ஏற்படும் என உலக பொருளாதார மன்றம் எச்சரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் ‘காலநிலை மாற்றம்’ குறித்த தாக்கங்கள் பற்றிய புதிய அறிக்கை வெளியிடப்பட்டது.
2050-ம் ஆண்டுக்குள் 1.45 கோடி மனித உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று உலக நாடுகளை புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.
சுமார் 50 கோடி மக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் அதிகரிக்கலாம் என்றும் வெப்பமண்டல நாடுகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் அதிகரித்து காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உலகளவில் காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு சுமார் 90 லட்சம் மக்கள் உயிரிழக்கலாம் என்று எச்சரித்துள்ள அந்த அறிக்கை, மனித உயிரிழப்புகளின் பிரதான காரணியாக காற்று மாசுபாடு உள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும், மழை வெள்ளத்தால் 2050-ம் ஆண்டுக்குள் 85 லட்சம் பேர் உயிரிழக்கலாம் எனவும் உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கை எச்சரித்துள்ளது.
காலநிலை மாற்றம் உலகளாவிய சுகாதார ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கும் என்றும் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு ஆசியா நாடுகள் போதுமான உள்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதில் பின்தங்கி உள்ளதால், காலநிலை மாற்றத்தால் மேலும் அதிக பாதிப்பை எதிர்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைக்க உலக நாடுகள் துரிதமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட வேண்டும் என உலக பொருளாதார மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.