இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என்றார் தேசத் தந்தை காந்தி. அந்த ஆன்மா பரிதவித்த காலம் ஒன்று இருந்தது. 2004ஆம் ஆண்டுக்கு முன்பாக, இந்தியாவின் மகாராஷ்ட்ரா, ஆந்திரா (தெலங்கானா), மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கிராமப்புற விவசாயிகள் நூற்றுக் கணக்கில் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார்கள். காரணம், பசி-பட்டினி.
உலகிற்கே உணவளிக்கும் விவசாயி உணவில்லாமல் பட்டினியாகி, தற்கொலை செய்துகொள்ள காரணம் என்ன? கடன் சுமை, விளைச்சல் இல்லாத தன்மை, வேறு வேலைகள் கிடைக்காத சூழல் என்பதை சாய்ராம் உள்ளிட்ட ஆய்வாளர்களும் அறிஞர்களும் எடுத்துக்காட்டினர். 2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபோது, அதற்கு இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் ஆதரவளித்தன. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் ஆட்சியில் பங்கேற்றன. அப்போது, கிராமப்புற பட்டினிச் சாவைத் தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டதுதான், மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டம் (100 day employment scheme).
ஆண்டுக்கு 100 நாட்கள், ஊதியத்துடன் கூடிய வேலையை கிராமப்புறங்களில் உறுதி செய்வது, விவசாயக் காலம் இல்லாத நேரத்தில் இந்த வேலைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு, 100 நாள் வேலைக்காக உத்தரவாதமும், அந்த வேலையை செய்வோருக்கான ஊதியமும் வழங்கப்படும்போது, அந்தக் குடும்பம் வறுமையிலிருந்து கொஞ்சம் மீண்டு, பட்டினிச் சாவை நோக்கித் தள்ளப்படும் அபாயமும் தவிர்க்கப்படும் என்பதுதான் இந்த 100 நாள் வேலைத் திட்டத்தின் நோக்கம். மகாத்மா காத்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் இது நடைமுறைக்கு வந்த பிறகுதான், மேற்சொன்ன மாநிலங்களிலும் பிற மாநிலங்களிலும் விவசாயிகளின் பட்டினிச் சாவு கட்டுப்பாட்டிற்கு வந்தது.
இந்தியாவில் மிகப் பெரிய அளவில் மாற்றத்தை உருவாக்கியதில் மகாத்மா காந்தி (Mahatma Gandhi) பெயரிலான இந்தத் திட்டத்திற்கு முக்கிய பங்கு உண்டு. அதே நேரத்தில் பிற்போக்கு சக்திகள் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்து வந்தன. காரணம், பல ஏக்கர் நிலம் வைத்திருக்கும் பண்ணையாளர்களை நம்பிய கிராமப்புற உழவர்கள் வாழ்ந்து வந்த நிலையில், நூறு நாள் வேலைத் திட்டம் மூலம் விவசாயத் தொழிலாளர்கள் தங்களுக்கான நம்பிக்கைக்குரிய வாழ்க்கையை வாழ முடிந்தது. பண்ணையார்களையே காலம் முழுவதும் நம்பியிருக்க வேண்டிய தேவை குறைந்தது.
அதனால் நிலவுடைமையாளர்களும், பழமைவாதிகளும் இந்த 100 நாள் வேலைத் திட்டத்தால் விவசாயம் செய்ய கூலி ஆட்கள் கிடைக்கவில்லை என்ற கூப்பாட்டைப் பெரிதாக்கினார்கள். தமிழ்நாட்டில் கூட இப்படி பேசுகிற அரசியல் கட்சிகள் உண்டு. எப்போதும் பழமைவாதிகளின் பக்கம் நிற்கும் பா.ஜ.க. அரசுக்கு 100 நாள் வேலைத் திட்டம் கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது. காரணம் 1. இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. 2. இதற்கு மகாத்மா காந்தி பெயர் வைக்கப்பட்டு, நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றிருப்பது.
நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தத் திட்டத்தை முடக்குவதற்காக பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டன. 100 நாள் வேலைத்திட்டத்தில் போலியான நபர்களைக் காட்டி ஊதியத்தை செலவிடுகிறார்கள், விவசாயக் காலத்தில் வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது, மாநிலங்கள் தங்கள் விருப்பத்திற்கு செயல்படுகின்றன எனத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மத்திய அமைச்சர்கள் வந்துவிட்டனர். அரசாங்கத்தின் எந்த ஒரு திட்டத்திலும் குளறுபடிகள்-கோளாறுகள் இருக்கும். அதனை சரிசெய்வதுதான் ஆட்சியாளர்களின் திறமை. அதற்கு மாறாக, பா.ஜக.. அரசு இந்தத் திட்டத்தையே முடக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
மகாத்மா காந்தி பெயரிலான திட்டத்தை விக்சித் பாரத் ஜி ராம் ஜி என்று பெயர் மாற்றும் தீர்மானத்தை மோடி அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தை 125 நாளாக உயர்த்துவதாக அறிவித்திருந்தாலும், இதில் இதுவரை மத்திய அரசின் (Central Government) பங்கு 90% மாநில அரசின் பங்கு 10% என்ற அளவில்தான் இருந்து வந்தது. தற்போது, மத்திய அரசின் பங்கு 60%தான். மாநில அரசுகள் மீதமுள்ள 40% பங்கை ஏற்றுக் கொள்ளவேண்டும். தமிழ்நாடு போன்ற 100 நாள் வேலைத்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியும், பல்வேறு சமூக நலத் திட்டங்களால் வறுமையை வென்ற மாநிலங்களுக்கான நிதிப் பங்களிப்பை மத்திய அரசு மேலும் குறைத்துவிடும்.
கோட்சேவை வெளிப்படையாகக் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ் வழிவந்த பா.ஜ.க.வுக்கு காந்தி என்ற பெயர் எப்போதுமே பிடிப்பதில்லை. காந்தியை கோட்சே கொன்றதுபோல, அவரது பெயரிலான 100 நாள் திட்டத்தின் பெயரை மாற்றி, அதன் தன்மையையும் சிதைக்க நினைக்கிறது மோடி அரசு. காந்தி இன்னும் எத்தனை முறை கொல்லப்படுவாரோ?
