இன்றைய காலத்தில் கடன், கிரெடிட் கார்டு, வீட்டு கடன், வாகன கடன் போன்றவை பலரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. இவை அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது சிபில் ஸ்கோர் (CIBIL Score). ஆனால் சிபில் ஸ்கோர் குறித்து பலர் இன்னமும் தவறான கருத்துகளையும் கட்டுக்கதைகளையும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அந்த தவறான நம்பிக்கைகள் காரணமாகவே பலரின் நிதி முடிவுகள் தவறாக போகும் நிலையும் ஏற்படுகிறது.
இந்த கட்டுரையில், சிபில் ஸ்கோர் என்றால் என்ன, அதைப் பற்றிய பொதுவான தவறான நம்பிக்கைகள் என்ன, உண்மையில் எது சரி, எதை தவிர்க்க வேண்டும் என்பதனை எளிய முறையில் பார்க்கலாம்.
சிபில் ஸ்கோர் என்றால் என்ன?
சிபில் ஸ்கோர் என்பது மூன்று இலக்க எண். இது பொதுவாக 300 முதல் 900 வரை இருக்கும். இந்த எண், ஒருவர் கடந்த காலத்தில் கடன் மற்றும் கிரெடிட் கார்டுகளை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார், தவணைகளை சரியாக செலுத்தியுள்ளாரா, தாமதம் செய்துள்ளாரா என்பதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
எளிமையாகச் சொன்னால்,“ஒருவர் கடனை திருப்பிச் செலுத்தும் ஒழுக்கத்தை காட்டும் மதிப்பெண்” தான் சிபில் ஸ்கோர்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், யாருக்காவது கடன் அல்லது கிரெடிட் கார்டு வழங்குவதற்கு முன்பு, அவரின் சிபில் ஸ்கோரை கட்டாயமாகச் சரிபார்க்கின்றன.

நல்ல சிபில் ஸ்கோர் எவ்வளவு?
பொதுவாக,
- 650 அல்லது அதற்கு மேல் இருந்தால் நல்ல சிபில் ஸ்கோர் என்று கருதப்படுகிறது
- 750க்கு மேல் இருந்தால் மிகவும் சிறந்த ஸ்கோர்
சிபில் ஸ்கோர் உயரமாக இருந்தால்,
- கடன் எளிதாக கிடைக்கும்
- குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்
- கடன் ஒப்புதல் செயல்முறை வேகமாக நடக்கும்
மாறாக, சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால்,
- கடன் மறுக்கப்படலாம்
- அதிக வட்டி விதிக்கப்படலாம்
சிபில் ஸ்கோர் பார்த்தாலே குறையும் – இது உண்மையா?
பலர் நம்பும் ஒரு பெரிய கட்டுக்கதை இது.
தனிநபர் தானாக தனது சிபில் ஸ்கோரை பார்க்கும்போது அது குறையாது.
நீங்கள்:
- CIBIL இணையதளம்
- வங்கிகள் வழங்கும் இலவச சேவைகள்
- நிதி செயலிகள்
இவற்றின் மூலம் உங்கள் சிபில் ஸ்கோரை பார்த்தாலும், அதனால் எந்த பாதிப்பும் இல்லை.
ஆனால், வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் உங்கள் சிபில் ஸ்கோரை அடிக்கடி சரிபார்த்தால் (நீங்கள் கடன் விண்ணப்பம் அளிக்கும் போது), அது பதிவாகும். இதை Hard Enquiry என்பார்கள். இப்படிப் பல முறை நடந்தால் சிபில் ஸ்கோர் குறையலாம்.
அதனால், தேவையில்லாமல் பல இடங்களில் கடன் விண்ணப்பம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
குறைந்த வருவாய் இருந்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?
இது இன்னொரு பெரிய தவறான நம்பிக்கை.
ஒருவரின் மாத வருவாய் சிபில் ஸ்கோரில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
சிபில் ஸ்கோர் என்பது:
- கடன் வாங்கியுள்ளீர்களா
- தவணைகளை நேரத்தில் செலுத்தியுள்ளீர்களா
- தாமதம் செய்துள்ளீர்களா என்பதை மட்டுமே பார்க்கும்.
அதனால்,
- குறைந்த வருவாய் இருந்தாலும் தவணைகளை முறையாக செலுத்தினால் நல்ல சிபில் ஸ்கோர் இருக்கும்
- அதிக வருவாய் இருந்தாலும் தவணைகளை தவற விட்டால் சிபில் ஸ்கோர் குறையும்
சில நேரங்களில், அதிக வருவாய் இருந்தும் இதுவரை எந்தக் கடனும் வாங்காதவர்களுக்கு சிபில் ஸ்கோர் இல்லாமலும் (Zero / NA) இருக்கலாம்.

செயலிகள் மூலம் வாங்கும் சிறு கடன்கள் சிபில் ஸ்கோரில் சேருமா?
பலர் நினைப்பது:
“மொபைல் செயலியில் வாங்கும் சிறு கடன்கள் சிபில் ஸ்கோரில் வராது”
இது முழுக்க தவறு.
இப்போது:
- BNPL (Buy Now Pay Later)
- உடனடி சிறு கடன்கள்
- செயலி மூலம் கிடைக்கும் கடன்கள்
இவை அனைத்தும் கடன் வரலாற்றில் பதிவு செய்யப்படுகின்றன.
இவற்றை:
- தாமதமாக செலுத்தினால்
- அடிக்கடி பயன்படுத்தினால்
சிபில் ஸ்கோர் கடுமையாக பாதிக்கப்படும்.
எளிதாக கடன் கிடைக்கிறது என்பதற்காக, விளைவுகளை யோசிக்காமல் வாங்குவது ஆபத்தானது.
கடனை முன்கூட்டியே முடித்தால் சிபில் ஸ்கோர் உயரும்?
மிகப் பழைய கிரெடிட் கார்டு அல்லது நீண்ட கால கடன் வரலாறு சிபில் ஸ்கோருக்கு நல்லது.
ஒருவர், பழைய கிரெடிட் கார்டை முறையாக பயன்படுத்தி, தவணைகளை சரியாக செலுத்தி வந்தால் அது சிபில் ஸ்கோரை உயர்த்தும்.
ஆனால், அனைத்து கடன்களையும் முடித்து கிரெடிட் கார்டை முழுவதும் மூடிவிட்டால்
கடன் வரலாறு குறையும், அதனால் சிபில் ஸ்கோர் சில நேரங்களில் குறையலாம்.
அதனால், பழைய கிரெடிட் கார்டுகளை வைத்துக் கொண்டு, குறைந்த அளவில் பயன்படுத்தி, நேரத்தில் கட்டுவது நல்லது.
கடன் உச்ச வரம்பு (Credit Limit) அதிகரித்தால் என்ன அர்த்தம்?
ஒருவரின், தவணை செலுத்தும் பழக்கம், நிதி ஒழுக்கம். இவற்றில் வங்கிக்கு நம்பிக்கை ஏற்பட்டால், கிரெடிட் கார்டு உச்ச வரம்பை அதிகரிக்கின்றன.
இது நல்ல அறிகுறி. ஆனால், உச்ச வரம்பு அதிகரித்தது என்பதற்காக முழு தொகையையும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
உச்ச வரம்பை:
- முழுமையாக பயன்படுத்தாமல்
- குறைந்த அளவில் வைத்திருந்தால்
சிபில் ஸ்கோர் மேலும் உறுதியாகும்.
சிபில் ஸ்கோரை உடனடியாக உயர்த்த முடியுமா?
உடனடியாக உயர்த்த முடியாது.
ஆனால், உடனடியாக குறையாமல் பாதுகாக்க முடியும்.
எப்படி?
- தவணைகளை நேரத்தில் செலுத்துதல்
- தேவையில்லாமல் கடன் விண்ணப்பிக்காமல் இருத்தல்
- கிரெடிட் கார்டு பில்ல்களை முழுமையாக செலுத்துதல்
இவை தொடர்ச்சியாக நடந்தால், காலப்போக்கில் சிபில் ஸ்கோர் உயரும்.

கடன் வாங்கினால்தான் சிபில் ஸ்கோர் உருவாகுமா?
ஆம், இது உண்மை. கடன் வாங்காமலே இருப்பவர்களுக்கு சிபில் ஸ்கோர் இருக்காது. சிபில் ஸ்கோர் உருவாக குறைந்தபட்சம் ஒரு கடன் அல்லது ஒரு கிரெடிட் கார்டு தேவை.
அதை முறையாக பயன்படுத்தி நேரத்தில் செலுத்தினால் சிபில் ஸ்கோர் மெதுவாக உயரும்.
சிபில் ஸ்கோர் என்பது பயப்பட வேண்டிய விஷயம் அல்ல. அதே நேரத்தில் அலட்சியமாகவும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தில், உண்மை போல தோன்றும் தவறான தகவல்கள் படங்கள், வீடியோக்கள் மூலம் எளிதாக பரவுகின்றன. அதனால்,
எந்த நிதி தகவலையும் நம்புவதற்கு முன் உறுதி செய்துகொள்வது நமது பொறுப்பு.
அதுவே நம்முடைய எதிர்கால நிதி பாதுகாப்பிற்கான அடித்தளம்.
