முன்கூட்டியே யாருக்கும் சொல்லாமல் ரகசியமாகச் சென்று கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வந்திருக்கலாம் விஜய். அதாவது அனிதா மற்றும் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டோரையும் இப்படித்தான் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வந்தார் விஜய். தன் ரசிகர்களின் மரணங்களின் போதும் கூட இதே முறையைத்தான் கடைப்பிடித்து வந்தார் விஜய்.
அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர் மட்டும் இந்த நடைமுறையை அவர் பின்பற்றுவதில்லை. ‘இதனால் சகலமானவர்களுக்கும்….’ என்று டமடம கொட்டி அறிவித்துவிட்டுத்தான் செல்கிறார் விஜய். அதுவும் விமான நிலையத்தில் இருந்து எந்த வழியாக செல்கின்றேன் என்று சொல்லிவிட்டு செல்வதால்தான் வாகனத்தின் பின்னால் பைக்கில் துரத்திக்கொண்டு வருகிறார்கள்.

ரகசியமாகச் சென்று பிரச்சார வாகனத்தில் திடீரென்று ஏறினால் கரூர் துயரச் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
அந்த சம்பவத்திற்கு பின்னரும் கூட ரகசியமாகச் சென்று பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் சொல்லாமல் எல்லோருக்கும் சொல்லிவிட்டு போக நினைத்தார் விஜய். பாதுகாப்பு கெடுபிடிகளால் அது முடியாமல் போய்விட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரை சென்னைக்கே வரவழைத்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் கரூருக்கு அருகே இருக்கும் ஈரோட்டில் நடந்த தவெக மாநாட்டுக்கு நேற்று போயிருந்தார் விஜய். அடுத்ததாக அவர் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக மலேசியா செல்ல இருக்கிறார்.

இதனால் ஆத்திரம் கொண்ட கரூர் மக்கள், ‘இங்க இருக்க கரூருக்கு போகல, ஆனா ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போறீங்க?, ‘வாட் புரோ, இட்ஸ் வெரி ராங்க் புரோ’ , ‘ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்கு போக மாட்டீங்களா?’ என்று பெருந்துறை பேருந்து நிலையம் மற்றும் ரவுண்டானா முழுவதும் போஸ்டர் ஒட்டி இருந்தனர். விஜய் பரிதாபங்கள் என தலைப்பிட்டு, ‘ஜனநாயகன் பட டப்பிங்கிற்கு பிரசென்ட், ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா செல்வதற்கு பிரசென்ட், ஆடம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது பிரசென்ட். ஆனால், மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பது ஆப்சென்ட், மக்களை சந்திக்க கரூர் செல்வது ஆப்சென்ட், தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது கிடையாது என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

ஈரோடு தொடங்கி விஜயமங்கலம் வரையிலும், விஜயமங்களத்தில் இருந்து கோவை தேசிய நெடுஞ்சாலைகளிலும் விஜயை வரவேற்று பேனர்கள் , போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்த நிலையில் இப்படியான கண்டன போஸ்டர்கள் தவெகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
