ஈரோட்டில் நேற்று முன் தினம் 18.12.2025 அன்று விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. வழக்கம் போல் தவெக மக்கள் சந்திப்பு மாதிரி இல்லாமல் மாநாடு போலவே இக்கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
இந்த கூட்டத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்ட செங்கோட்டையன், எந்தவித அசம்பாவீதமும் இல்லாமல் கூட்டத்தை நடத்திக்காட்டியிருக்கிறார் என்று பெருமிதம் கொள்கிறார் விஜய்.
இதையடுத்து அடுத்தடுத்த மாவட்டங்களின் மக்கள் சந்திப்பு கூட்டங்களையும் செங்கோட்டையன் மேற்பார்வையிலேயே நடத்த முடிவெடுத்திருக்கிறார்.

இது குறித்து ஆலோசனை நடத்த செங்கோட்டையனை இன்று பனையூருக்கு அழைத்திருக்கிறார் விஜய். இந்த ஆலோசனையில் தவெகவுக்கு புதியவர்கள் குறித்தும் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் பொறுப்புகள் குறித்தும் பேசப்பட இருக்கிறது என்கிறார்கள். செங்கோட்டையன் தவிர்த்து முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் கூட்டணி விவகாரம் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற இருக்கிறது.
ஈரோடு கூட்டத்திலேயே முடிந்தவரை செங்கோட்டையனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கிடைக்காமல் செய்யவேண்டுமோ அதைச் செய்தார் புஸ்ஸி ஆனந்த். அதாவது போஸ்டர், கட் அவுட், பேனர், மாலை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் போய்விடக்கூடாது என்று பார்த்து பார்த்து காய் நகர்த்தி இருக்கிறார் ஆனந்த்.

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பிரச்சார கூட்டங்களை வகுத்து திறன்பட நடத்திய செங்கோட்டையன், ஈரோடு கூட்டத்தையும் திறன்பட நடத்திவிட்டதால் விஜயின் மொத்த பார்வையும் அவர் மேல் விழுந்திருக்கிறது. இதனால் போராடி பெற்ற தன் இடம் பறிபோய்விடுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார் புஸ்ஸி ஆனந்த் என்கிறது பனையூர் தவெக வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்.
