பல நகரங்களில் பிரபலங்களின் மெழுகு சிலை அமைத்திருப்பார்கள். ரசிகர்கள் அந்த மெழுகு சிலையின் அருகே நின்று புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்துக்கொள்வார்கள்.
நிஜத்திலேயே நடிகர் சிம்பு நின்றிருந்தபோதும் கூட, மெழுகு சிலையின் அருகே நின்று போட்டோ எடுத்துக்கொண்டது போலவே உணர்ந்துள்ளனர் அவரது ரசிகர்கள்.
வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. மதுரையைச்சுற்றி உள்ள ஏரியாக்களின் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

மதுரை மாவட்ட சிம்பு தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பில் அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள பலரும் கேட்டு வந்ததால், இதற்காக தனியாக ஒரு இடமே ஒதுக்கி அங்கே ரசிகர்களுடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டார்.
’’எஸ்டிஆர்.. எஸ்டிஆர்..’’ என்று முழக்கம் எழுப்பிக்கொண்டே சிம்புவின் அருகே சென்றதும் அவருக்கு கை கொடுத்து மகிழ ஆசைப்பட்டு அது முடியாமல் தவித்தனர் ரசிகர்கள். சில ரசிகர்கள் கடிதம், கிப்ட் கொடுக்கின்றனர். அதையும் கண்டுகொள்ளவே இல்லை சிம்பு. அவர் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு கைகளை கட்டிக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு மெழுகு சிலை போலவே நின்றுகொண்டார்.

சிம்புவுக்கு கை கொடுத்து மகிழ நினைத்து, அவர் சிலை போல் நிற்பதைப்பார்த்து வேறு வழியில்லாமல் ரசிகர்கள் அவர்களாகவே அருகே நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு சென்றனர்.
பல வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்தும், விஜயும் தங்கள் வீட்டில் மாதம் ஒரு நாள் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டார்கள். அப்போது அவர்கள் ரசிகர்களுக்கு கை கொடுத்து அவர்களின் தோளில் கைபோட்டு, அரவணைத்து போட்டோ எடுத்துக்கொண்டார்கள்.
சிம்பு ரசிகர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.
