ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எலுமிச்சை போன்ற வடிவத்தில் உள்ள ஒரு விசித்திரமான கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த கிரகம் நம்மிடமிருந்து 2,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

ஜேம்ஸ் வெப் விண்வெளி (Space) தொலைநோக்கி, நம்மிடமிருந்து வெகு தொலைவில் உள்ள கிரகங்களைப் பற்றிய நமது எண்ணங்களை மாற்றுகிறது.மேலும், பூமிக்கு அருகில் உள்ள கிரகங்களில் நாம் பொதுவாகக் காணாத விஷயங்களை நமக்குக் காட்டுகிறது.
இந்நிலையில், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பார்த்த விஷயங்களில் ஒன்று பூமியிலிருந்து சுமார் 2,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகம். இந்த கிரகம் எலுமிச்சை போன்ற வடிவத்தில் உள்ளது என்றும் PSR J2322-2650b என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய புறக்கோள் (Exoplanet), நாம் இதுவரை கண்டிராத வகையில் அமைந்துள்ளது எனா ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பல்சார் என்பது ஒரு பிரம்மாண்டமான நட்சத்திரம் வெடித்த பிறகு எஞ்சியிருக்கும் நசுக்கப்பட்ட மையப்பகுதியாகும். இந்த தொலைநோக்கி, PSR J2322-2650b இந்த பல்சாரைச் சுற்றிச் செல்வதைக் கண்டறிந்துள்ளது.மேலும், இது நிறைய கதிர்வீச்சை பெறுகிறது என்றும் இந்த வளிமண்டலம் நாம் பார்த்ததிலிருந்து மிகவும் வித்தியாசமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோளின் முக்கிய சிறப்பம்சங்கள்:
- வடிவத்திற்கான காரணம்: பூமியிலிருந்து சுமார் 2,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கோள், ஒரு ‘பல்சர்’ (Pulsar) எனப்படும் அதீத ஈர்ப்பு விசை கொண்ட நட்சத்திரத்தை மிக அருகில் சுற்றி வருகிறது. இந்த நட்சத்திரத்தின் கடுமையான ஈர்ப்பு விசை, கிரகத்தை ஒரு பக்கம் இழுத்து நீட்டிப்பதால், அது பந்து போல உருண்டையாக இல்லாமல், எலுமிச்சை பழம் போல நீண்டு காணப்படுகிறது.
- அதிவேக சுழற்சி: இந்த கிரகத்தில் ஒரு வருடம் என்பது வெறும் 7.8 மணிநேரம் மட்டுமே. அதாவது, இது தனது தாய் நட்சத்திரத்தை அவ்வளவு வேகத்தில் சுற்றி வருகிறது.
- வெப்பநிலை மற்றும் சூழல்: இதன் ஒரு பகுதியில் வெப்பம் சுமார் 3,700°F (2,000°C) வரை நிலவுகிறது. இந்த அதீத வெப்பம் மற்றும் அழுத்தத்தால், கிரகத்தின் உட்பகுதியில் வைரங்கள் உருவாக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- விசித்திரமான வளிமண்டலம்: ஹீலியம் மற்றும் கார்பன் மூலக்கூறுகள் நிறைந்த இதன் வளிமண்டலம், மற்ற கிரகங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது.
இது கோளா? அல்லது நட்சத்திரத்தின் எஞ்சிய பகுதியா?
இந்த விசித்திரமான பண்புகளைக் கவனிக்கும்போது, இது ஒரு சாதாரண கிரகம் இல்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.மேலும், இது ஒரு காலத்தில் ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்திருக்கலாம் என்றும் அந்த நட்சத்திரத்தைச் சிறியதாகத் தேய்த்து, அதன் 99.9% பகுதியை அந்த ‘பல்சர்’ நட்சத்திரம் விழுங்கியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை விஞ்ஞானிகள் பிளாக் விடோ (Black Widow) அமைப்பு என்று அழைக்கிறார்கள். அதாவது, ஒரு பெரிய நட்சத்திரம் தனது துணையை மெல்ல மெல்ல தின்று அழிப்பதைப் போன்ற ஒரு நிகழ்வு இது.
