மூளைக் கட்டியுடன் லடாக்கிலிருந்து கன்னியாகுமரி வரை 74 நாட்களில் சுமார் 3,876 கிமீ ஓடி நம்பமுடியாத சாதனையைப் படைத்தவர் பிரிட்டிஷ் தீவிர ஓட்டப்பந்தய வீரர் ஜாக் ஃபைன்ட்.
மூளைப் புற்றுநோய் :
மூளைப் புற்றுநோய் (Brain Cancer) என்பது மூளையில் உள்ள செல்கள் கட்டுப்பாடின்றி அசாதாரணமாக வளர்ந்து கட்டி (tumor) உருவாகும் நிலை ஆகும். சுருக்கமாகச் சொன்னால், மூளையில் உருவாகும் சில கட்டிகள் புற்றுநோயாக (malignant) இருக்கலாம் அல்லது சில கட்டிகள் புற்றுநோயல்லாதவை (benign) ஆகவும் இருக்கலாம்.
மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜாக் ஃபைன்ட்டின் பயணம் :
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஜாக் ஃபைன்ட்டின் . இந்நிலையில், திடீரென மயக்கம் அடைந்த இவருக்கு 2019ஆம் ஆண்டு 25 வயதாக இருந்தபோது, மெதுவாக வளரும் மூளைக் கட்டியான கிரேடு 2 ஒலிகோடென்ட்ரோக்லியோமா (Oligodendroglioma) இருப்பது கண்டறியப்பட்டது. அப்பொழுது, மருத்துவர்கள் அவருக்கு சுமார் 10 முதல் 15 ஆண்டுகள் வரை உயிர்வாழ முடியும் என்று கணித்துள்ளனர்.
இதனால், நம்பிக்கையை இழப்பதற்குப் பதிலாக, ஃபைன்ட் தனது வாழ்க்கை முறையை மாற்றியமைத்து, உடற்பயிற்சி, தாவர அடிப்படையிலான உணவுமுறை, யோகா மற்றும் தியானம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். மேலும், மூளைக் கட்டிகள் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், கடுமையான நோய்களை எதிர்கொள்ளும் மற்றவர்கள் வலுவாக இருக்கவும், நேர்மறையான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்யவும் அவர் “புராஜெக்ட் இந்தியா 2025” சவாலை மேற்கொண்டார்.
தொடர்ந்து, அவர் செப்டம்பர் 1, 2025 அன்று லடாக்கின் நுப்ரா பள்ளத்தாக்கில் உள்ள பனாமிக் கிராமத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி, நவம்பர் 11, 2025 வாக்கில் கன்னியாகுமரியை அடைந்தார். குறிப்பாக இவர் ஒவ்வொரு நாளும் சுமார் 50 முதல் 80 கி.மீ (சுமார் 31 முதல் 50 மைல்கள்) ஓடினார்.
இதனால், இந்தியா முழுவதும் ஓடிய நபர்களின் வரலாற்றில் முதல் நபராக இடம் பிடித்தார். மேலும் அவரது கதை அவரது மீள்தன்மை மற்றும் நம்பிக்கையின் செய்தியால் மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. மேலும் இவரது முயற்சிகள் மூளை புற்றுநோய் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தன.
மேலும், இந்த மிகப்பெரிய சவாலை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, ஜாக் ஏற்கனவே ஜோர்டானில் 250 கி.மீ பாலைவன பந்தயம் மற்றும் தென்னாப்பிரிக்க கடற்கரையில் 650 கி.மீ ஓட்டம் உட்பட உலகம் முழுவதும் பல கடினமான ஓட்டப் போட்டிகளை முடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
