வங்கதேசத்தின் (Bangladesh) மைமென்சிங் மாவட்டத்தில் டிசம்பர் 18-ஆம் தேதி, மதம் குறித்து பேசி அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இந்து இளைஞர் ஒருவர் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் வெடித்த அரசியல் நெருக்கடியின் அடிப்படை, 1971ல் வங்கதேசத்திற்காக போராடி உயிரிழந்த போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் வழங்கப்பட்ட இடஒதுக்கீடு தொடர்பான விவகாரம்தான். பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு, இந்த இடஒதுக்கீட்டை ஆதரித்து வந்த நிலையில், வேலைவாய்ப்பு இல்லாமை, இளைஞர்களின் எதிர்கால நிச்சயம் மற்றும் தேர்தல் நியாயமின்மை போன்ற பிரச்சினைகள் சேர்ந்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கின.
குறிப்பாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை “ரஜாகார்” என்று ஷேக் ஹசீனா (Sheikh Hasina) விமர்சித்தது, போராட்டத்தை அரசுக்கு எதிரான பெரும் மக்கள் எழுச்சியாக மாற்றியது. காவல்துறையின் கடும் அடக்குமுறை, ஊரடங்கு, சுட்டுக்கொல்ல உத்தரவு ஆகியவை நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்து, இறுதியில் ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளின.
ஷேக் ஹசீனா வெளியேறிய பின், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ஆனால் அரசியல் நிலைமை அமைதியாகவில்லை. தொடர்ந்து, மாணவர் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்த ஷெரீஃப் உஸ்மான் ஹாடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம், வங்கதேசம் முழுவதும் மீண்டும் பெரும் வன்முறையை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து, டாக்கா உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். மேலும், முன்னணி பத்திரிகை அலுவலகங்கள் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டன, அவாமி லீக் கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டன, மேலும் வங்கதேசத்தின் நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடங்களும் சேதப்படுத்தப்பட்டன.
வங்கதேசத்தில் இந்திய இளைஞர் கொலை :
இதனையடுத்து, டிசம்பர் 18, 2025 அன்று, வங்கதேசத்தின் மைமென்சிங் (Mymensingh) மாவட்டத்தில் உள்ள வலுக்கா (Bhaluka) பகுதியில், ஆடைத் தொழிற்சாலையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த திபு சந்திர தாஸ் (Dibhu Chandra Das) என்ற வாலிபர், இஸ்லாம் மதத்தை அவதூறாகப் பேசியதாகக் கூறி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். மேலும், அவரது உடல் ஒரு மரத்தில் தூக்கிலிடப்பட்டு, பொதுமக்களுக்கு முன்பாக தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில், திபு சந்திர தாஸ் மதவெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிய வந்தது. மேலும், இந்த வழக்கில் இதுவரை சுமார் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தை “பயங்கரமான செயல்” (horrendous act) என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டித்துள்ளது. மேலும், வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்து அமைப்பினர் போராட்டம் :
இந்த நிலையில், இந்த கொலையைக் கண்டித்து டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தின் முன் காவி கொடிகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும், நூற்றுக்கணக்கான விஹெச்பி மற்றும் பஜ்ரங் தள ஆதரவாளர்கள் தடுப்புகளை உடைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
