அதிமுக – பாஜக இடையேயான தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாமல் இழுபறி ஏற்பட்டிருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்தார்.
அதிமுகவுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேசுவதற்கு முன்பாக தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கே அதிமுக – பாஜக தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி , கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக தரப்பில் பியூஷ் கோயல், எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்த்தையில் பாஜக மற்றும் தங்களுடன் வரும் கட்சிகளுக்கும் சேர்த்து 70 சீட் கேட்டிருக்கிறார் பியூஷ் கோயல். அதாவது கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக இந்த தேர்தலில் 30 முதல் 40 தொகுதிகளில் போட்டியிடுவதென்று முடிவு செய்திருக்கிறது. மற்ற கட்சியினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால், இதில் ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டோரும் வருவார்கள் என்கிற நம்பிக்கையில் அவர்களுக்கும் சேர்த்து 70 தொகுதிகளை கேட்டிருக்கிறார் பியூஷ் கோயல்.

ஆனால், பாஜகவுக்கு கடந்த முறை 20 சீட் கொடுத்திருப்பதால் இந்த முறை 20ல் இருந்து 25 சீட் வரையில் மட்டுமே தருவதாக சொல்லி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதே நேரம், அதிமுக 170 தொகுதியில் போட்டியிடும் என்றும், கூட்டணியில் இருக்கும் பிற கட்சியினருக்கு தானே முன்னின்று மீதமிருக்கும் சீட்களை பிரித்து தருவதாகச் சொல்லி இருக்கிறார் பழனிசாமி. இதில் அதிருப்தி அடைந்திருக்கிறார் பியூஷ் கோயல்,. இதனால் அதிமுக – பாஜக தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாமல் இழுபறி ஏற்பட்டிருக்கிறது.
