சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலாபேலஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது.
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி , கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும், பாஜக தரப்பில் பியூஷ் கோயல், எல். முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

அதிமுகவுக்கு 170 சீட், பாஜகவுக்கு 23 சீட், பாமகவுக்கு 23 சீட், தேமுதிகவுக்கு 6 சீட், அமமுகவுக்கு 6 சீட், ஓபிஎஸ்க்கு 3 சீட் என்று தான் போட்டு வைத்திருக்கும் கணக்கை முன்வைத்துள்ளார் பழனிசாமி. அதே நேரம் கூட்டணியில் மற்ற கட்சிகள் இணைந்தால், குறிப்பாக தமாகா இணைந்தால் அக்கட்சிக்கு 3 சீட் ஒதுக்குவது என்கிற முடிவையும் தெரிவித்திருக்கிறார்.
ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர்களை இணைக்கும் பணியை பாஜக மேற்கொள்கிறது என்க்கிற அடிப்படையிலும், பாமக மற்றும் தேமுதிக இக்கூட்டணிக்கு வரும் என்கிற பட்சத்திலும் இந்த கணக்கை போட்டுக்காட்டி இருக்கிறார் பழனிசாமி.

பழனிசாமி காட்டிய இந்த பட்டியலைபார்த்து கிறுகிறுத்துப்போயிருக்கிறது பாஜக. 70 சீட் வாங்கி அதில் 40 தொகுதிகளை பாஜக வசம் வைத்துக்கொண்டு, மிச்சமிருக்கும் தொகுதிகளை பிற கட்சிகளுக்கு பிரித்துக்கொடுக்கலாம் என்று கணக்கு போட்டு வந்திருந்த பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலும் இது கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஆனாலும் பேச்சுவார்த்தையில் பழனிசாமி தனது முடிவில் உறுதியாக இருந்திருக்கிறார். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டி தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்படாமல் இருக்கிறது.
அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிகிறது.
