இன்றைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்க்கையை பெரிதும் எளிமைப்படுத்தியுள்ளது. வங்கிப் பணிகள் முதல் கல்வி, வேலைவாய்ப்பு, முதலீடு வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாக மாறிவிட்டன. சில நிமிடங்களில் கைபேசி மூலமாகவே பண பரிவர்த்தனை, ஆன்லைன் முதலீடு, வேலை தேடல் போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. ஆனால், இந்த தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சேர்ந்து ஒரு பெரும் அபாயமும் வேகமாக வளர்ந்து வருகிறது. அதுவே சைபர் குற்றங்கள்.
2025 ஆம் ஆண்டு இந்தியாவில் சைபர் மோசடிகள் மிகுந்த அளவில் அதிகரித்ததாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், விழிப்புணர்வு திட்டங்கள், சைபர் காவல் பிரிவுகள் ஆகியவற்றை செயல்படுத்தினாலும், மோசடிக்காரர்கள் புதிய புதிய வழிகளை கையாண்டு பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்புகளை இழந்து மன உளைச்சலுக்கு உள்ளாகினர்.
2025-ல் அதிகம் பாதிப்பை ஏற்படுத்திய சைபர் மோசடிகள்
2025-ல் இந்தியாவில் பல வகையான சைபர் மோசடிகள் நடந்தாலும், குறிப்பாக சில மோசடிகள் பொதுமக்களிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்தின. அவற்றைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
முதலீட்டு மோசடிகள் – ஆசை வார்த்தைகளில் சிக்கிய மக்கள்
2025-ல் அதிக அளவில் பண இழப்பை ஏற்படுத்திய மோசடிகளில் முதலிடம் பிடித்தது (Investment Fraud) முதலீட்டு மோசடி. பங்குச்சந்தை, கிரிப்டோகரன்சி, ஆன்லைன் டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டியதே இதற்கான முக்கிய காரணம்.
வாட்ஸ்அப், டெலிகிராம், சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொள்ளும் மோசடிக்காரர்கள், “குறைந்த முதலீடு – அதிக லாபம்”, “உறுதியான வருமானம்”, “ரிஸ்க் இல்லை” போன்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளை பயன்படுத்தினர். ஆரம்பத்தில் சிறிய தொகைக்கு லாபம் கொடுத்து நம்பிக்கையை உருவாக்கி, பின்னர் அதிக பணம் முதலீடு செய்ய வைப்பர். பணத்தை திரும்ப பெற முயன்றபோது, அந்த குழுக்கள் தொடர்பை துண்டித்து மறைந்துவிடுகின்றனர். இதனால் பலர் கோடிக்கணக்கான ரூபாயை இழந்துள்ளனர்.
வேலைவாய்ப்பு மோசடிகள் – வேலை தேடும் இளைஞர்களின் கனவுகளை சிதைத்தது
வேலை இல்லா நிலை அதிகரித்து வரும் சூழலில், 2025-ல் வேலைவாய்ப்பு மோசடி(Employment Scam) பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இந்த மோசடியில் அதிகம் சிக்கினர்.
“வீட்டிலிருந்தே வேலை”, “தினமும் சில மணி நேரம் மட்டும் வேலை”, “உயர் சம்பளம்” போன்ற விளம்பரங்கள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவின. வேலைக்கு தேர்வு செய்யப்பட்டதாக கூறி பதிவு கட்டணம், பயிற்சி கட்டணம், பாதுகாப்பு கட்டணம் என பல பெயர்களில் பணம் வசூலிக்கப்பட்டது. பணம் செலுத்திய பின் எந்த வேலையும் வழங்கப்படாமல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பல குடும்பங்கள் கடுமையான நிதி சிக்கலில் சிக்கின.
ஏஐ வாய்ஸ் மோசடி – குரலையே நம்பி ஏமாந்த மக்கள்
2025-ல் தொழில்நுட்பத்தின் மிக ஆபத்தான தவறான பயன்பாடாக கருதப்பட்டது செயற்கை நுண்ணறிவு (AI Voice ) வாய்ஸ் மோசடி. இந்த முறையில் மோசடிக்காரர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது பிரபலங்கள் போல குரலை உருவாக்கி பேசினர்.
“அவசர நிலை”, “விபத்து”, “உடனே பணம் தேவை” போன்ற காரணங்களை சொல்லி உணர்ச்சிகளை தூண்டினர். குரல் அப்படியே பழகிய நபரைப் போல இருப்பதால் பலர் சந்தேகமின்றி பணத்தை அனுப்பினர். பின்னர் அது மோசடி என தெரியவரும் போது, பணத்தை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.
வங்கி தொடர்பான மோசடிகள் – போலி குறுஞ்செய்திகளில் சிக்கியவர்கள்
வங்கி மோசடிகள்(Bank Spam Messages) 2025-லும் தொடர்ந்து பொதுமக்களை பாதித்தன. வங்கியிலிருந்து வந்தது போல தோன்றும் குறுஞ்செய்திகள் மூலம், “KYC அப்டேட்”, “கணக்கு முடக்கம்”, “சேவை கட்டணம்” போன்ற காரணங்களை கூறி போலி Link-கள் அனுப்பப்பட்டன.
அந்த Link-களை கிளிக் செய்ததும், பயனர்களின் வங்கி விவரங்கள் மோசடிக்காரர்களிடம் சென்றுவிட்டன. சில நிமிடங்களில் கணக்கில் இருந்த முழு பணமும் திருடப்பட்டது. குறிப்பாக மூத்த குடிமக்கள் இந்த மோசடியில் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
டிஜிட்டல் கைது மோசடி – பயம் காட்டி பணம் பறிப்பு
2025-ல் புதிதாக அதிகரித்த மோசடிகளில் ஒன்று டிஜிட்டல் கைது மோசடி (Digital Arrest). மோசடிக்காரர்கள் தங்களை காவல்துறை, சிபிஐ, வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்து, பொதுமக்களை தொடர்பு கொண்டனர்.
“உங்கள் பெயரில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளது”, “உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம்” என பயமுறுத்தி, வழக்கில் இருந்து விடுபட பணம் செலுத்த வேண்டும் என்று கூறினர். அதிகாரிகள் பேசும் போல் நடித்ததால் பலர் அச்சத்தில் பணம் அனுப்பினர். பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டு மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
2025 ஆம் ஆண்டு இந்தியாவில் சைபர் மோசடிகள் பொதுமக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொழில்நுட்பம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறதோ, அதே அளவுக்கு விழிப்புணர்வு இல்லையெனில் அது ஆபத்தாகவும் மாறிவிடும் என்பதையே இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன. அரசு நடவடிக்கைகளுடன் சேர்ந்து, பொதுமக்களும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சற்று சந்தேகம் தோன்றினாலும், தகவல்களை சரிபார்த்து செயல்படுவதே சைபர் மோசடிகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் சிறந்த வழியாகும்.
