போலி மருந்துகள் குறித்து புகார் அளிக்க, அனைத்து மருந்து கடைகளிலும் க்யூ.ஆர் கோடு ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் போலிமருந்துகளும் அதன் விளைவுகளும் :
இந்தியாவில் போலி மருந்துகள் (Counterfeit medicines) பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. அவை நோய்களைக் குணப்படுத்தாமல், பக்க விளைவுகளை ஏற்படுத்தி, மரணத்தை விளைவிக்கின்றன. மேலும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதோடு, இந்தியாவின் மருந்துத் துறையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கின்றன. இதனால் நோயாளிகளின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் ஆபத்து ஏற்படுகிறது.
போலி மருந்துகளின் விளைவுகள் (Effects of Counterfeit Drugs):
- உடல்நலக் கேடு: போலி மருந்துகள் பயனற்றவை, ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்துபவை, உறுப்புகளுக்கு நிரந்தர சேதத்தை விளைவிக்கக்கூடியவை.
- மருந்து எதிர்ப்பு (Drug Resistance): தரமற்ற மருந்துகளால், குறிப்பாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (antibiotics) மற்றும் மலேரியா மருந்துகள், மருந்து எதிர்ப்பு உருவாகி, நோய்கள் குணப்படுத்துவதை கடினமாக்குகின்றன.
- சிகிச்சைத் தோல்வி: போலி மருந்துகள் நோயாளிகளுக்கு எந்தப் பலனையும் அளிக்காது, இதனால் நோய் மோசமடைந்து உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும்.
- பொருளாதார இழப்பு: உண்மையான மருந்து உற்பத்தியாளர்களுக்கு வணிக இழப்பை ஏற்படுத்துவதுடன், அரசின் வரி வருவாய், வேலைவாய்ப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீடுகளையும் பாதிக்கிறது.
- சுகாதார அமைப்பின் மீது நம்பிக்கை இழப்பு: போலி மருந்துகளின் பரவல், ஒட்டுமொத்த சுகாதார அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குறைக்கிறது.
- சர்வதேச நற்பெயருக்குக் களங்கம்: இந்தியா போலி மருந்துகளின் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிப்பதால், சர்வதேச அளவில் மருந்துத் துறையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுகிறது.

போலி மருந்துகளை எவ்வாறு கண்டறிவது?
- பேக்கேஜிங் (Packaging): மருந்தின் அட்டை அல்லது பாட்டிலில் எழுத்துப் பிழைகள், மங்கலான லோகோக்கள் அல்லது வழக்கத்திற்கு மாறான வண்ணங்கள் இருக்கிறதா என்று பார்க்கவும்.
- விலை வித்தியாசம்: சந்தை விலையை விட மிகக் குறைவான விலையில் மருந்து விற்கப்பட்டால், அது போலியாக இருக்க வாய்ப்புள்ளது.
- சீல் (Seal): மருந்தின் பாதுகாப்பு சீல் உடைக்கப்பட்டிருந்தாலோ அல்லது சேதமடைந்திருந்தாலோ அதை வாங்க வேண்டாம்.
- மருந்தின் வடிவம்: மாத்திரையின் நிறம், அளவு அல்லது சுவையில் மாற்றம் தெரிந்தால் கவனமாக இருக்கவும்.
தமிழகத்தில் போலி மருந்துகள் குறித்து புகார் அளிக்க புதிய நடைமுறை!
இந்த நிலையில், மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளில் ஏதேனும் போலி மருந்துகள் என சந்தேகிக்கப்பட்டால், அந்த மருந்துகள் குறித்து புகார் அளிப்பதற்கு 104 என்ற இலவச தொலைபேசி எண் நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை ஒரு செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, போலி மருந்துகள் குறித்து மருந்தகங்களில் (pharmacy) உள்ள கியூ ஆர் குறியீட்டில் புகார் அளிக்கும் நடைமுறையை அறிவித்துள்ளது. இந்த கியூ ஆர் குறியீடானது அனைத்து மருந்தகங்களிலும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் ஒட்ட வேண்டும் என்று தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து மருந்தகங்களில் பொதுமக்கள் வாங்கும் மருந்துகள் போலியாக இருந்தாலும், அந்த மருந்துகள் மூலம் ஏதேனும் உடல் நலக் குறைவு ஏற்பட்டாலும் இந்த கியூ ஆர் குறியீடு மூலம் புகார் அளிக்கலாம். இந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் நேரடியாக நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
