வாட்ஸ்அப் மோசடிகள் பெரும்பாலும் சமூக பொறியியல், ஃபிஷிங் லிங்குகள் மற்றும் போலியான அவசரநிலைகள் மூலம் நடக்கின்றன. இவை பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களைத் திருடும் நோக்கத்துடன் செய்யப்படுகின்றன.
வாட்ஸ்அப் மூலம் புதிய வகை மோசடி
சைபர் குற்றவாளிகள் (Cybercriminals) வாட்ஸ்அப் மூலம் ஒரு புதிய வகை மோசடியைச் செய்து வருவதாகத் தெலங்கானா காவல்துறை எச்சரித்துள்ளது. இந்தப் புதிய மோசடி ‘வாட்ஸ்அப் கோஸ்ட் பேரிங்’ (WhatsApp Ghost Pairing) என்று அழைக்கப்படுகிறது. மேலும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் (MeitY) இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது,”ஹேய்…என் புகைப்படத்தைப் பார்த்தாயா?” என்று ஒரு லிங்க் அனுப்புவதன் மூலம் இந்த மோசடி தொடங்குகிறது என்று ஹைதராபாத் காவல்துறையினர் மற்றும் தெலங்கானா சைபர் பாதுகாப்புப் பிரிவு காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.
இதுபோன்ற லிங்க்கை கிளிக் செய்தால், போலியான வாட்ஸ்அப் வெப் பக்கம் திறக்கப்படும் என்றும், எந்தவிதமான ஒடிபி (OTP) அல்லது ஸ்கேனிங்கும் இல்லாமலே உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கரின் சாதனத்துடன் (கணினி, லேப்டாப் அல்லது மொபைல்) இணைக்கப்பட்டுவிடும் என்று தெரிவிக்கின்றனர். மேலும், அந்த சமயத்தில், பயனர்கள் தங்கள் சொந்தக் கணக்கைப் பயன்படுத்த முடியாதவாறு லாக் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கின்றனர். மேலும், வங்கி கணக்கு விபரங்கள், தனிப்பட்ட உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற விபரங்கள் அனைத்தும் சைபர் குற்றவாளிகளின் கைகளில் சிக்கிக்கொள்ளும் அபாயம் ஏற்படுவதாகவும், இதனால் பயனாளர்கள் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கை
கோஸ்ட் பேரிங் தொடர்பாக பொதுமக்களுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEIT) எச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதாவது,வாட்ஸ்அப்பில் உள்ள டிவைஸ் லிங்கிங் வசதியை பயன்படுத்தி குற்றவாளிகள் வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்து வருகின்றனர் என்றும் பேரிங் கோட் உதவியுடன், எந்த கூடுதல் அங்கீகாரமும் இல்லாமல் வாட்ஸ்அப் கணக்குகள் ஹேக் செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது.இதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது.

எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது ?
- வாட்ஸ்அப்பில் உள்ள “Linked Devices” அல்லது “இணைக்கப்பட்ட சாதனங்கள்” பகுதியை அடிக்கடி சரிபார்க்க வேண்டும்.
- உங்களுக்குத் தெரியாத அல்லது சந்தேகமான QR குறியீடுகளை ஒருபோதும் ஸ்கேன் செய்யக்கூடாது.
- அவசரநிலை அல்லது குடும்ப மோசடிகளில், குழந்தை அல்லது உறவினர் விபத்தில் சிக்கியுள்ளார், கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறி உடனடி பணம் கேட்பார்கள்.
- இத்தகைய அவசர செய்திகளை நம்பாமல், நேரடியாக அந்த நபரையோ அல்லது குடும்பத்தினரையோ வேறு வழியில் தொடர்பு கொண்டு சரிபார்க்க வேண்டும்.
- காதல் மோசடிகளில், நீண்ட நாட்கள் பேசிக் கொண்டு நம்பிக்கை ஏற்படுத்தி, பின்னர் அவசரம் அல்லது பயணம் என்ற பெயரில் பணம் கேட்பார்கள்.
- ஆன்லைனில் அறிமுகமானவர்களிடம் பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும்.
- போலி வேலை அல்லது முதலீட்டு மோசடிகளில், எளிதான வேலை அல்லது அதிக லாபம் தரும் முதலீடு என்று சொல்லி குழுக்கள் மற்றும் செய்திகளை அனுப்புவார்கள்.
- தொழில்நுட்ப ஆதரவு அல்லது ஃபிஷிங் மோசடிகளில், வாட்ஸ்அப் அல்லது வங்கி ஆதரவாக நடித்து OTP, கடவுச்சொல் அல்லது திரை பகிர்வை கேட்பார்கள்.
- வாட்ஸ்அப் கோல்ட் அல்லது போலி அப்டேட் என்ற பெயரில் வரும் லிங்குகள், உண்மையில் தீங்கு விளைவிக்கும் மென்பொருளாக இருக்கலாம்.
- “பேய் இணைத்தல்” அல்லது Ghost Pairing மோசடியில், போலி லிங்க் அல்லது QR குறியீடு மூலம் உங்கள் கணக்கு அவர்களின் சாதனத்தில் இணைக்கப்பட்டு, நீங்கள் அறியாமலேயே கண்காணிக்கப்படலாம்.அதனால் இவ்வாறு செய்யாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
